Published:Updated:

தனித்துப் போட்டி: கட்சி தாவும் பாமக நிர்வாகிகள்! - ஆட்டம் காண்கிறதா ராமதாஸ் கோட்டை?

உள்ளாட்சித் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வசித்துவரும் விழுப்புரம் மாவட்டத்திலிருந்தே பாமக நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிக்கு தாவிவரும் செயல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் வார்டு வரையறைக்காக நடைபெறாமல் இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல், அண்மையில் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் பரபரப்பாக இயங்க தொடங்கிவிட்டனர். சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும், தொடர்ந்து கூட்டணியிலேயே நீடிப்பது குறித்தும், வெளியேறுவது குறித்தும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டன. அதன்படி, கடந்த 14-ம் தேதி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாமக தலைவர் ஜி.கே.மணி, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் மூலம் அதிமுக உடனான கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவந்தது பாமக. பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே தனித்துப் போட்டி என்ற விளக்கத்தையும் அளித்தது பாமக.

கூட்டணியிலிருந்து வெளியேறிய நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்தது குறித்து கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாக வெளியான சில தகவல்கள் மேலும் அரசியல் களத்தில் பரபரப்பைக் கூட்டின.

ஸ்டாலின் - ராமதாஸ் - எடப்பாடி பழனிச்சாமி
ஸ்டாலின் - ராமதாஸ் - எடப்பாடி பழனிச்சாமி

பதிலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ... ``எங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறுவதால் அவர்களுக்குத்தான் பாதிப்பு. யாருடைய கட்டாயத்தால் இந்த முடிவெடுத்தார்கள் எனத் தெரியவில்லை" என்று பேசி அனலைக் கூட்டியிருந்தார்.

உள்ளாட்சித் தேர்தல்: லட்சக்கணக்கில் ஏலம்போன ஊராட்சித் தலைவர் பதவிகள்?! - விழுப்புரத்தில் பரபரப்பு

பாமக செய்தித் தொடர்பாளர் பாலு, "பாமக தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறது. அதிமுக-வோடு முரண்பாடு ஏற்பட்டதுபோல ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. அது உண்மை அல்ல" என்று கூறியிருந்தார். பாமக தரப்பிலிருந்து அடுத்தடுத்து வந்த பதில்கள், 'கூட்டணி இல்லை... ஆனா இருக்கு!' என்பதுபோல இருந்தன. இது தொடர்பான பேச்சுகள் அந்தச் சமயத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தன.

இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் நடைபெற்றதோடு மட்டுமின்றி, அதன் தொடர்ச்சியாக "தந்தை, மகன் இடையே உரசல் வந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் இணைந்து செல்லும் மூடில் இருக்கிற வட மாவட்ட பா.ம.க நிர்வாகிகள், அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவந்தனராம். அன்புமணியின் ஆஃப் தி ரிக்கார்டு உத்தரவுப்படியே இந்த பேச்சுவார்த்தை நடந்ததாம். இந்த விவகாரம் அறிந்து தோட்டமே அதிரும்படி கர்ஜித்தாராம் ராமதாஸ்" என்று தகவலைப் பகிர்ந்திருந்தார் கழுகார். அவர் சொன்னதுபோலவே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை பா.ம.க நிர்வாகிகள் பெரும்பாலும் விரும்பவில்லையாம். பொதுவாகவே மற்ற கட்சிகளைவிட, தலைமையின் முடிவுக்கு விசுவாசத்தோடு இருப்பவர்கள் பா.ம.க தொண்டர்கள்தான். ஆனால், தோட்டத்துத் தலைமையின் இந்த முடிவுக்கு மறுபேச்சு பேச முடியாமல்... மௌனமாக கட்சி தாவும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனராம் பா.ம.க-வின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும்.

FB பதிவு
FB பதிவு

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வசித்துவரும் விழுப்புரம் மாவட்டத்திலேயே தற்போது பா.ம.க சிறிது ஆட்டம்கண்டு, கூடாரம் சிதறத் தொடங்கியுள்ளது என்பதை நடைபெற்றுவரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்திவருகின்றன. பா.ம.க தலைமையுடனான முரண்பாட்டால் பலநூறு பா.ம.க தொண்டர்களுடன், முக்கிய நிர்வாகிகளும் நேற்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்துள்ளனர். மரக்காணம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் பா.ம.க-விலிருந்து விலகி தன் ஆதரவாளர்களுடன் சென்று தி.மு.க-வில் இணைத்துகொண்ட செய்தி, அமைச்சர் மஸ்தானுடைய முகநூல் பக்கத்திலேயே பதிவிடப்பட்டிருக்கிறது. அதேபோல, ஒலக்கூர் மேற்கு ஒன்றியத்திலும் முக்கிய நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கான பா.ம.க தொண்டர்கள் அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் தங்களை தி.மு.க-வில் இணைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படியாக ஒருபுறம் பா.ம.க கூட்டம் கொஞ்சம் தி.மு.க-வில் ஐக்கியமாக... மற்றொருபுறம், மாநிலப் பொறுப்பில் இருக்கும் முக்கிய பா.ம.க நிர்வாகி ஒருவரின் தலைமையில், ஆயிரக்கணக்கான பா.ம.க-வினர் அந்தக் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகி, பா.ம.க வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாமக: மாவட்ட அளவில் அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை?! - கூட்டணி நிலைப்பாட்டில் தடுமாறுகிறதா?

அந்த மாநில நிர்வாகியின் தலைமையில், முக்கிய நிர்வாகிகள் பலரும் நேற்று (22.09.2021) மாலை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது பா.ம.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைவது பற்றி ஆலோசனை மேற்கொண்டனராம். இந்தச் சந்திப்பு தொடர்பான தகவலும், புகைப்படங்களும் வாட்ஸ்அப் மூலம் வெளியாகி, மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளன.

வரும் 27.09.2021 அன்று விழுப்புரம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்துக்கு வருகை தரவிருக்கிறாராம் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது ஆயிரக்கணக்கான பா.ம.க தொண்டர்களை ஒருங்கிணைத்து அ.தி.மு.க-வில் இணையவிருக்கிறார்களாம் நேற்று சி.வி.சண்முகத்தைச் சந்தித்த முக்கிய பா.ம.க நிர்வாகிகள். இந்தத் தகவல் தைலாபுரம் தோட்டத்துக்குத் தெரியவர, சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறதாம்.

வாட்ஸ்அப் மூலம் வெளியான  போட்டோ
வாட்ஸ்அப் மூலம் வெளியான போட்டோ

தற்போது ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெற்றுவிட்டது. தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த பா.ம.க கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் வெளியேறி அ.தி.மு.க., தி.மு.க கட்சிகளில் ஐக்கியமாகிவருவது... உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல, பா.ம.க-வின் வாக்குவங்கியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர் சிலர். பா.ம.க நிறுவனரான ராமதாஸ் வசித்துவரும் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பா.ம.க நிர்வாகிகளே மாற்றுக் கட்சியில் இணைவதில் மும்முரம் காட்டிவரும் செயலால் பா.ம.க-வின் தனித்துப் போட்டி முடிவு யாருடைய முடிவு எனப் பல கேள்விகள் எழாமல் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு