Published:Updated:

அனல் பறக்கும் உட்கட்சிப் பூசல்; திருவண்ணாமலை திமுக-வில் நடப்பது என்ன?

தரணி வேந்தன், அம்பேத்குமார்
தரணி வேந்தன், அம்பேத்குமார்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மக்கள் பிரதிநிதி ஒருவருக்கும், தி.மு.க வடக்கு மாவட்டப் பொறுப்பாளருக்கும் இடையேயான பனிப்போர், அமைச்சரே பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் தீர்ந்தபாடில்லையாம்.

தமிழகத்திலுள்ள பெரிய மாவட்டங்களில் ஒன்றான திருவண்ணாமலையில், நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது ஆறு தொகுதிகளில் தி.மு.க-வும், இரண்டு தொகுதிகளில் அ.தி.மு.க-வும் வெற்றிபெற்றன. இந்தத் தொகுதிகளில் ஒன்றான வந்தவாசி (தனி) தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுக்கும், வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருக்கும் இடையிலான புகைச்சல்தான் தற்போது உச்சகட்டத்தை எட்டியிருப்பதாகக் கூறுகிறது தி.மு.க வட்டாரம்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் ஆர்.சிவானந்தம். உட்கட்சி விவகாரம், சட்டமன்றத் தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டனர். புதிய நியமனங்கள் நடைபெற்றன. அந்தச் சமயத்தில், ஆர்.சிவானந்தம் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக தரணிவேந்தன் நியமிக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க-வின் முக்கியப் புள்ளியாக வலம்வரும் எ.வ.வேலுவுக்கு தரணிவேந்தன் நெருக்கமானவராக இருந்ததால், இந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டதாக அப்போது பேச்சு எழுந்தது. 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவித்தபோது, கட்சியில் மாவட்டப் பொறுப்பிலிருக்கும் யோகநாதன் என்பவருக்கு வந்தவாசி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டாராம் தரணிவேந்தன்.

அதற்கு எ.வ.வேலு தரப்பில், ``போன சட்டமன்றத் தேர்தலில் ஜெயிச்சிருந்தாலும், நிறைய செலவு பண்ணிட்டு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாகவே இருந்துட்டாங்க. அதனால இந்த முறை, போன தேர்தல்ல வேட்பாளர்களாக நின்னவங்களுக்கே சீட் கொடுக்கச் சொல்லலாம்னு இருக்கேன். வந்தவாசி தொகுதியில, இந்த முறையும் அம்பேத்குமாரே நிக்கட்டும்’’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது. இதில் தரணிவேந்தன் அப்செட் என்கிறார்கள்.

எ.வ.வேலு
எ.வ.வேலு
திருவண்ணாமலை: எதிர்த்து நின்ற வேட்பாளர்களைப் பதம் பார்த்த எ.வ.வேலு! #TNelections2021

தான் சிபாரிசு செய்த நபருக்கு சீட் கிடைக்காமல் போனதால் மன வருத்தத்திலிருந்த தரணிவேந்தனுக்கும் அம்பேத்குமாருக்கும் இடையே அப்போதுதான் பனிப்போர் ஆரம்பித்ததாம். தன்னை வளரவிடாமல் தரணிவேந்தன் முட்டுக்கட்டை போடுவதாக நினைத்த அம்பேத்குமார், முக்கிய ஒன்றியச் செயலாளர்களைத் தன் பக்கம் இணைத்துக்கொள்ள காய்நகர்த்தியிருக்கிறார். இந்த ஒன்றியச் செயலாளர்களுடன் இணைந்து நெடுஞ்சாலை ஓரமாக நிலம் வாங்கி, தனியார் கட்டுமானம் சார்ந்த கம்பெனி ஒன்றையும் தொடங்கியுள்ளாராம் அம்பேத்குமார். பொதுப்பணித்துறையில் வரும் அரசுப் பணிகளை எடுப்பதற்காகத்தான் அந்த கம்பெனியை அவர் தரப்பில் ஆரம்பித்தாகச் சொல்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை அறிந்த தரணிவேந்தன், சிலரை உடன் சேர்த்துக்கொண்டு அவரும் தனியாக கட்டுமானம் சம்பந்தப்பட்ட கம்பெனியை ஆரம்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையிலான புகைச்சல் குறித்து நம்மிடம் பேசிய திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``இரண்டு பேருக்கும் இடையில் புகைச்சல் அதிகமாகியிருக்கிறது. முக்கிய ஒன்றியச் செயலாளர்கள், எம்.எல்.ஏ அம்பேத்குமாருடன் சென்றுவிட்டதால், மாவட்டப் பொறுப்பாளரான தரணிவேந்தன் கோபத்தில் இருக்கிறார். `நான் ஒரு மாவட்டப் பொறுப்பாளராக இருக்கேன். எனக்கும் சாதகமான ஆட்கள் வேணும்' என்று தன் பதவி பலத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார். தனக்கு நெருக்கமாக இல்லாத ஒன்றியச் செயலாளர்களை மாற்றும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார்.

தரணி வேந்தன், அம்பேத்குமார்
தரணி வேந்தன், அம்பேத்குமார்

புதிதாக சிலருக்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பு தருவதாகக் கூறி வசூல் வேட்டைக்கு தரணிவேந்தன் தரப்பு காய்நகர்த்துகிறது. இந்தப் புகைச்சல் செய்தி, அமைச்சர் எ.வ.வேலு காது வரை சென்றதால், இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இரு தரப்பும் சமாதானம் ஆகவில்லை. தன் பேச்சை மீறி புதிய ஒன்றியச் செயலாளர் நியனமத்தில் தரணிவேந்தன் ஆர்வம் காட்டுவதால், அவர்மீது அமைச்சர் கடும் அப்செட். இதனால், மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து தரணிவேந்தன் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்று தெரிகிறது” என்றனர் அந்தக் கட்சி நிர்வாகிகள்.

`இருவருக்கும் இடையிலான இந்தப் புகைச்சல் எப்போது தணியும் எனத் தெரியவில்லை' என்று திருவண்ணாமலை தி.மு.க-வினர் வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக, வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தரணிவேந்தனின் ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். ``இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதுபோல எங்களுக்குத் தெரியவில்லை. நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதும் இருவரும் நன்றாகத்தான் பேசிக்கொள்கிறார்கள். இங்கு உட்கட்சிப்பூசல் என ஏதுமில்லை. இருவருமே அனைவரையும் அரவணைத்துச் செல்பவர்கள்தான். நிறுவனத்தைத் தொடங்குவது என்பது அவரவரது விருப்பம். இதில் என்ன புதிதாக இருக்கிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு