Published:Updated:

முழு ஊரடங்கு விதிமீறல்: எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்கு பதிவு!

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் ( நரேஷ் )

ஊரடங்கின் முதல் நாளான மே 10-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை நடத்த அதிமுக சார்பில் காவல்துறை அனுமதி கேட்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதியும் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் முழு ஊரடங்கு விதிகளை மீறி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறி, அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட 250 அதிமுக-வினர் மீது ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த மே 7-ம் தேதி, அதிமுக எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் முடிவு எதுவும் எட்டப்படாமல் கூட்டம் பாதியிலேயே முடிந்தது. அதன் பின்னர், புதிதாக முதல்வராக பொறுப்பெற்றுள்ள மு.க.ஸ்டாலின், அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்தார்.

அதிமுக எம்.எல்.ஏ -க்கள் கூட்டம்
அதிமுக எம்.எல்.ஏ -க்கள் கூட்டம்
நரேஷ்

ஊரடங்கின் முதல் நாளான மே 10-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை நடத்த அதிமுக சார்பில் காவல்துறை அனுமதி கேட்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதியும் வழங்கப்பட்டது. காலை 9:30 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. நீண்ட இழுபறி, கடுமையான வாக்குவாதம், தீவிர ஆலோசனைக்கு பின்னர், அதிமுக-வின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தநிலையில், காவல்துறை அனுமதியளித்த எண்ணிக்கைக்கும் அதிகமான கூட்டம் கூடி, முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டுள்ளதாக, ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு உத்தரவை மீறுதல், உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரப்பக்கூடிய வகையிலான செயலில் ஈடுபடுதல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்ட சுமார் 250 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு