Published:Updated:

புதுச்சேரி: 'ஒன்றிய' சர்ச்சை; ஆளுநர் தமிழிசை உரையும் விளக்கமும்! - ஒரு பார்வை!

ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பின்போது ‘இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற வகையில்’ எனக் கூறி பதவியேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து ஆளுநர் தமிழிசை விளக்கமளித்த நிலையிலும், சர்ச்சை தொடர்வது ஏன்?

'ஒன்றியம்' என்ற சொல் குறித்த சர்ச்சை தற்போது தமிழகத்தைத் தாண்டி புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளது. ‘இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற வகையில், என் கடமைகளை உண்மையாகவும், மனச்சான்றின்படியும் ஆற்றுவேன்' எனத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முன்மொழிய, புதுச்சேரி பா.ஜ.க அமைச்சர்களும் பதவியேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில் “அரசியலமைப்புச் சட்டப்படி, பல ஆண்டு காலமாகப் புதுச்சேரி அரசால் மரபாகப் பயன்படுத்தப்பட்ட, தமிழ் உறுதிமொழிப் படிவத்தில் எந்த மாறுதலும் செய்யப்படாமல் தமிழில் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இதில் இந்திய ஒன்றியம் என்ற வார்த்தை வேண்டுமென்றே திரித்துக் கூறப்படுகிறது. ஒன்றிய அரசு என்று ஆளுநர் கூறியதாகத் திரித்துக் கூறப்படுகிறது.

தமிழக அமைச்சர்கள் பதவியேற்கும்போது எப்படி, `தமிழக அமைச்சர்களாகப் பதவியேற்கிறோம்...’ என்று கூறுகிறார்களோ அதேபோல் 'Indian union Territory of Puducherry' என்ற வாசகம் 'இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு' என மொழிபெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படிவம்தான் வெகுகாலமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருகிறது. பிரெஞ்ச் ஆதிக்கத்திலிருந்து அதன் பின்பு இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் அதை 'Indian Union Territory' என்கிறார்கள். அதனால் ஒன்றியம் எனக் குறிப்பிடுவது யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை விளக்கம்

இங்கு எங்கேயும் மத்திய அரசு என்று குறிப்பிடவில்லை. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று ஆளுநர் கூறியதாகத் திரித்துக் கூறுகின்றனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி, இந்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் நிலப்பரப்பு. அதனால்தான் `இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு’ என்று கூறுகிறோம். மாநில அரசுகளின் பதவியேற்பு படிவத்தில் மத்திய அரசு என்ற வார்த்தை இடம்பெறாது. அவ்வாறு இருக்கையில், புதுச்சேரியில் மட்டும் ஒன்றிய அரசு என்று சொல்லப்பட்டது என்று கூறுவது உள்நோக்கம் உடையது. தமிழ் மண்ணில், தமிழில் பதவியேற்ற பெருமையை நிலைநிறுத்த வேண்டும். அதனால் அதன் மாண்பை மறைக்கும் அளவுக்குத் தவறாக இந்த ஒன்றியம் என்ற கருத்து பரப்பப்பட்டுவருகிறது. சில தேவையற்ற சலசலப்புகளால், பலரது தியாகத்தால் உருவான பலமான இந்திய இறையாண்மையைக் குலைக்க முயல வேண்டாம்” எனப் புதுச்சேரி ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளித்தும், விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுவருகிறது.

'ஒன்றிய அரசு முதல் பெரியார் வரை...' ஆளுநர் உரையில் பாஜக-வைச் சீண்டியதா ஸ்டாலின் அரசு?

ஒன்றியம் தொடர்பான சர்ச்சையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் நடவடிக்கை விமர்சனத்துக்குள்ளாகியிருப்பது குறித்து தமிழக பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசனிடம் பேசினோம். ``துணைநிலை ஆளுநர் புதுச்சேரியை மட்டுமே குறிப்பிட்டுத்தான் பேசியிருக்கிறார். மத்திய அரசைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. தேவையில்லாமல் தி.மு.க அதைப் பிடித்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள். 'Indian Union Territory of Puducherry' என்றால் 'இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு' என்றுதானே சொல்லப்பட வேண்டும்... அப்படித்தானே காலம்காலமாகச் சொல்லப்பட்டுவந்துள்ளது. அதைத்தானே ஆளுநர் சொல்லியிருக்கிறார். ஆனால், தி.மு.க-வினரைப்போல மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுப் பேசவில்லையே... ஆளுநர் தமிழிசை, ஒன்றியம் என்று சொன்னதற்கும் தி.மு.க-வினர் சொல்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

இராம ஶ்ரீநிவாசன் பா.ஜ.க
இராம ஶ்ரீநிவாசன் பா.ஜ.க

ஒன்றியம் என்ற வார்த்தையை, ஏன் கலைஞர் முதல்வராக இருந்தபோதோ, தி.மு.க மத்தியில் ஆட்சியில் பங்குவகித்தபோதோ பயன்படுத்தவில்லை என்ற கேள்விக்குத் தர்க்கரீதியில் ஏதாவது பதில் இருக்கிறதா? இல்லை, இனி எப்போதும் ஒன்றியம் என்றுதான் அழைப்போம் என்பதிலாவது தெளிவு இருக்கிறதா? இந்தியா என்ற தேசம்தான் 'Union of States' என வருகிறது. அரசியலமைப்புச் சட்டம் உருவானபோது குஜராத், தெலங்கானா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் இருந்தனவா? ஜம்மு - காஷ்மீர்போல நாளை தமிழகமும் இரண்டாகப் பிரிக்கப்பட அரசியலமைப்புப்படி வாய்ப்பு இருக்கிறதா இல்லையா?’’ எனக் கேள்விகளை எழுப்பியவர்...

“மத்திய அரசு என்பதால் வலிமையான இந்தியாவாக ஒருமித்து நிற்கிறது. ஆனால், வலிமையான இந்தியா என்று சொல்வதில் உங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அரசியலமைப்பில் நிறைய இடங்களில் 'Central Government' என்று வருகிறதே, 'ஒன்றியம்' என்பதைவிட 'மத்திய அரசு' என்று சொல்வதால் நமக்கு வலிமை அதிகரிக்கிறது. நாம் மாநிலங்களாகப் பிரிந்து வலிமையற்று இருக்கிறோம் என அயல்நாட்டுக்காரர்கள் நினைப்பதில் தி.மு.க-வினருக்கு என்ன பெருமை இருக்கிறது? `என் பிரதமர், என் தேசம் வலிமையானது’ என்பதை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்னை இருக்கிறது... அதை முதலில் ஏற்றுக்கொண்டு கூட்டாட்சி, மாநில சுயாட்சி பற்றிப் பேசலாம்.

கருணாநிதி என்று சொல்வதைவிட, 'கலைஞர்' என்று சொல்லும்போதும், ஸ்டாலின் என்று சொல்வதைவிடத் 'தளபதி' என்று சொல்லும்போதும் அதற்கு ஒரு கூடுதல் மதிப்பு இருப்பதாக திமுக-வினர் நினைக்கிறார்கள் இல்லையா? கருணாநிதியை 'கலைஞர்' எனவும் ஸ்டாலினைத் 'தளபதி' என அழைப்பதும் அவர்களின் மதிப்புக்குக் கூடுதல் வலுசேர்க்கும் என்றால் அவர்களை அப்படி அழைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
இராமஸ்ரீநிவாசன்
ஸ்டாலின் - கருணாநிதி
ஸ்டாலின் - கருணாநிதி

இந்திய தேசம் என்பதுதான் யூனியன், இந்திய அரசு என்றால் அது மத்திய அரசு என்றுதான் அழைக்க வேண்டும். இந்தியா மாநிலங்களால் ஆனது அல்ல. மாநிலங்களாக ஆனது. இந்த வித்தியாசம் தி.மு.க-வுக்குத் தெரியவில்லை. முதலில் தி.மு.க-வினரை அரசியலமைப்புச் சட்டத்தைத் திரும்பப் படிக்கச் சொல்லுங்கள் அல்லது இந்தச் சொல்லாடல்கள் குறித்து விவாதம் வைத்துக்கொள்ளலாம். ஆனால், விவாதத்தை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு தி.மு.க-வுக்குச் சகிப்புத்தன்மை இல்லை” எனவும் விளக்கமளித்தார்.

கச்சத்தீவு மீட்பு - தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டும் போதுமா?

துணைநிலை ஆளுநர் ஒன்றியம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது குறித்து விளக்கம் அளித்த பின்னரும் அது குறித்து விமர்சிப்பது சரியா என்ற கேள்வியை தி.மு.க செய்தித்துறை இணைச் செயலாளர் இராஜீவ் காந்தியிடம் முன்வைத்தோம் “பொதுவாக 'Indian Union Territory' என்பதில் இருக்கும் Union என்பதை எடுத்துக்கொள்ளும்போதுதான் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் சொல்லையும் பொருள்கொள்ள வேண்டும். ஐ.நா மாதிரியான கூட்டமைப்பாக இருந்தால் அதிகாரம் இருக்காது. எனவே, ஒன்றியமாக இருக்கலாம் என்றுதான் இந்தியாவையே கட்டமைத்திருக்கிறார்கள்.

மத்திய அரசு எனப் பேச்சு வழக்கில் சொல்லப்பட்டதைப் பிடித்துக்கொண்டு, `ஒட்டுமொத்த அதிகாரமும் எங்களுக்குத்தான், நாங்கள்தான் எல்லாம்’ என பா.ஜ.க சொல்லும்போதுதான் சிக்கல் வருகிறது. அதனால்தான் இது மத்திய அரசு இல்லை, யூனியன் அரசு என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டியிருக்கிறது. அதைத்தான் தி.மு.க தற்போது செய்துவருகிறது. ஏனெனில், `யூனியன்’ என்பது வெறும் உணர்வுக்காகவும் பெயருக்காகவும் பயன்படுத்தப்படவில்லை.
இராஜீவ்காந்தி

கூட்டாட்சி, மாநில சுயாட்சி என்பவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அரசு என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா என்ற நாட்டை உருவாக்கும்போது இது இரட்டை ஆட்சியாக இருக்கப்போகிறதா, ஒற்றை ஆட்சியாக இருக்கப்போகிறதா, கூட்டாட்சியாக இருக்கப்போகிறதா என்ற விவாதம் எழுந்தபோது கூட்டாட்சியாக இருப்பதுதான் சிறந்தது என முடிவு செய்து அதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி
AKSHITHATEKKI

இது ஒற்றை ஆட்சியல்ல, 'கூட்டாட்சி' என்று வலியுறுத்துவதற்காகத்தான் இந்த ஒன்றியம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு அதை மறந்துவிட்டு, ஒற்றை ஆட்சி என்பதை நிறுவ முயலும்போதுதான் சிக்கல் இருக்கிறது. அவர்களுக்கு உணர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தைச் சீராய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. ஆனால், அது நீண்ட இலக்கு. இப்போதைக்குக் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில்தான் ஒன்றிய அரசு இருக்கிறது என்ற கருத்தியலை மக்களிடம் நிலைநிறுத்த வேண்டும். அதைத்தான் தி.மு.க முன்னெடுத்துவருகிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு