Published:Updated:

மாநில காவல்துறையின் ஒத்துழைப்பைக் கோரும் மத்திய உள்துறை! - லக்னோ மாநாட்டின் பின்னணி

மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவருகிறது என்பதற்கு முக்கியமான உதாரணமாகச் சொல்லப்படுவது, என்.ஐ.ஏ-வின் செயல்பாடு. மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளில் தேசிய விசாரணை அமைப்பும் (என்.ஐ.ஏ) ஒன்று.

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 17-ஆகவும், பிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 14-ஆகவும் இருக்கின்றன. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களிலிருந்து மத்திய அரசுக்கு அவ்வளவாக ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்று பாஜக அரசு விமர்சனம் செய்துவருகிறது. அதேநேரம், மாநில அரசுகளின் தரப்பில் மத்திய அரசு தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பல்வேறு வகையில் தவறாகப் பயன்படுத்திவருகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றை அரசியல் எதிரிகள் மீது ஏவுகிறது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

சி.பி.ஐ
சி.பி.ஐ

புதிய கல்விக்கொள்கை திட்டம், நீட் தேர்வு போன்ற பல விவகாரங்களில் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, மாநில காவல்துறையின் அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துக்கொள்ளப்பார்க்கிறது என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர். இது தொடர்பாக மாநாடு ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``மாநில காவல்துறைகள், மத்திய ஏஜென்சிகளுடன் இன்னும் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று பன்ச் வைத்திருக்கிறார். அவர் பேச்சில், ஒருங்கிணைப்பு சரியில்லை. நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. பாஜக அரசு சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து சொல்கிறார்கள.

வருடா வருடம் போலீஸ் டி.ஜி.பி-கள் மாநாடு டெல்லியில் நடக்கும். இந்த முறை லக்னோவில் நடந்தது. நவம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களின் போலீஸ் டி.ஜி.பி-க்கள், மத்திய ஆயுதப்படைகளின் இயக்குநர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் என சுமார் 350 பேர் கலந்துகொண்டனர். உள்நாட்டு பாதுகாப்பு விவகாரத்தில் மாவோயிஸ்ட் வன்முறை, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. இந்த விவகாரங்களை மாநில அரசுகள் சரிவரக் கையாளுவது இல்லை என்றே பாஜக அரசு கருதுவதாகக் கூறப்படுகிறது.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

இது தொடர்பாக அந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, ``காவல்துறை தெடர்பான அனைத்துச் சம்பவங்களையும் தொகுக்க வேண்டும். அதை அந்தப் பணியில் புதிதாக சேர்பவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மனதில் காவல் பணி மீது பெரும் மதிப்பும் பெருமையும் ஏற்படும். நாம் நவீன தொழில்நுட்ப காலத்தில் வாழ்கிறோம். மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியில் 'கோவின்' இணையதளம் முக்கியப் பங்காற்றிவருகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்திருக்கின்றன. அதனால் காவல்துறையும், புதிய தொழில்நுட்பங்களைத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் காவல்துறை தொழில்நுட்ப அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை காவல்துறைக்குப் பயன்படுத்துவது பற்றி அந்த அமைப்பு ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமித் ஷா தலைமையில் நடந்த தென்மாநில கவுன்சில் கூட்டம்: கவனிக்கவைத்த கோரிக்கைகள்

மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவருகிறது என்பதற்கு முக்கியமான உதாரணமாகச் சொல்லப்படுவது, என்.ஐ.ஏ-வின் செயல்பாடு. மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளில் தேசிய விசாரணை அமைப்பும் (என்.ஐ.ஏ) ஒன்று. மாநில அரசுக்குத் தகவல்கூட தெரிவிக்காமல், இந்த அமைப்பின் அதிகாரிகள் எங்கு வேண்டுமானாலும் ரெய்டு நடத்தலாம். யாரை வேண்டுமானாலும் கைதுசெய்யலாம். சென்னை புரசைவாக்கத்தில் என்.ஐ.ஏ அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதேபோல, சைபர் க்ரைம் விஷயத்தில் ஏற்கெனவே மாநிலங்கள் தனிச்சையாகச் செயல்பட மத்திய அரசு விடுவதில்லை. வெளிநாடுகளில் குற்றவாளிகள் இருந்தால், அவர்களைப் பிடிக்கவோ, குற்றம் தொடர்பான ஆவணங்களை கேட்டுப் பெறவேண்டிய சூழ்நிலை வரும்போய்ஜ்ப்ப் மாநில அரசுத் தரப்பில் மத்திய அரசின் ஏஜென்சிக்குத் தகவல் அனுப்பி, அவர்கள் மூலமாகத்தான் வெளிநாட்டு போலீஸுடன் தொடர்புகொள்கிறார்கள். இதனால், நீண்ட காலதாமதம் ஏற்பட்டுவருகிறது. இப்படிப் பல விவகாரங்களில் மத்திய அரசு தனது அதிகாரத்தைக் கையிலெடுத்து நடைமுறைப்படுத்திவருகிறது.

காவல்துறை
காவல்துறை

இது தொடர்பாக தமிழக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், `மத்திய உள்துறை அமைச்சர், மாநில காவல் துறைகள் மத்திய ஏஜென்சியுடனும் சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்கிறார். ஆனால் அவர்கள், எற்கெனவே, வைத்திருக்கும் அதிகாரத்தைச் சரியாக கையாளுகிறார்களா என்றும் அமித் ஷா கவனிக்கவேண்டும். சர்வதேச போதைக் கடத்தலுக்கும் தமிழகத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு. போதைத் தடுப்புப் பிரிவு (என்.சி.பி), மத்திய அரசின் ஏஜன்சிகளில் ஒன்று. தமிழகத்தில் நடமாடும் சர்வதேச போதைக் கடத்தல் கும்பலைப் பற்றி உளவு பார்க்கிறது. அவர்கள்தான், மாநில போலீஸுடன் போதைத் தடுப்புப் பிரிவுக்குத் தகவல் கொடுப்பார்கள். நாங்களும் நடவடிக்கை எடுப்போம். இந்தப் பிரிவின் தமிழக தலைமை அதிகாரி பதவி கடந்த ஒன்பது மாதங்களாக காலியாக கிடக்கிறது. டி.எஸ்.பி அந்தஸ்தில் சென்னையில் மூன்று பதவிகளில் யாரும் இல்லை. மதுரையில் உள்ள அதிகாரிதான், தமிழகம் முழுக்க கவனிக்கிறார். தமிழகத்தில் 26 இன்ஸ்பெக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது இருப்பது வெறும் ஆறு பேர்தான். இதை யார் சரிசெய்வது? பலமுறை தெரிவித்தும் டெல்லி அதிகாரிகள் தரப்பில் நோ ஆக்‌ஷன். ஆனால், மாநில அரசின் போதைத் தடுப்புப் பிரிவு அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது பணியைச் சிறப்பாகச் செய்துவருகிறது'' என்றார்.

ஆக, மத்திய அரசு அதிகாரத்தை ஒருபுறம் எடுத்துக்கொள்ள முயல்கிறது. இன்னொருபுறம் கையில் வைத்திருக்கும் அதிகாரங்களை மத்திய அரசு சரிவரச் செய்வதில்லை என்று மாநில அரசுகள் குற்றம்சாட்டுகின்றன. இது ஒரு தொடர்கதையாகவே போகிறது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு