Published:Updated:

ராகவன் விவகாரம்: `அண்ணாமலையுடன் பேசியதாக சில ஆடியோக்கள்!’ - அடுத்த வீடியோ வெளியிட்ட மதன்

அண்ணாமலை
அண்ணாமலை

மதன் ரவிச்சந்திரன், தனது முகநூல் பக்கத்தில் அண்ணாமலையுடன் பேசுவதாக சில உரையாடல்கள் அடங்கிய ஆடியோக்களையும் இணைத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த கே.டி ராகவன் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து சமூக ஊடங்களில் பதிலளித்த கே.டி ராகவன், ``என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்ட படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்” என்றார்.

ராகவன்
ராகவன்

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை, ``வீடியோவை வெளியிட்ட யூ-டியூபர் மதன் ரவிச்சந்திரன் என்னை சந்தித்து பேசியது உண்மை.

முதல் முறையாக என்னை கட்சி அலுவலகத்தில் அவர் சந்தித்துப் பேசியபோது, கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களால் மட்டும் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விடக்கூடாது. அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தேன்.

ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை நம்பி, மட்டும் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் அதன்மேல் விசாரணை செய்யாமல் குற்றம்சாட்டும் நபரின் வாய் வார்த்தையை மட்டும் நம்பி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?. அதன்பின் மூன்றாவது முறையாக அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி, `நான் ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி எனக்கு உடனடியாக நியாயம் கிடைக்குமா? நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்று கேட்டிருந்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தான் வீடியோ பதிவுகளை வெளியிட போவதாக குறுஞ்செய்திகள் மூலம் கூறியிருந்தார். முன்னர் இரண்டு முறை நேரில் சந்தித்தபோது நான் கூறியபடி குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில் `செய்து கொள்ளுங்கள்’ என்று சுருக்கமாக முடித்து விட்டேன்” என்றவர்,

அண்ணாமலை
அண்ணாமலை

``மதன் ரவிச்சந்திரன் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவில் இது போல் இன்னும் வேறு நபர்களின் பதிவுகள் வெளிவர இருக்கிறது என்று சொல்லியிருப்பது அவருக்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. நான் தொடர்ந்து மூன்று முறை வலியுறுத்தியும் கட்சியின் தலைவருக்கும் அமைப்புச் செயலாளரும் ஆதாரங்களை காட்சிப்படுத்தாமல், தன் சொல்லை மட்டும் நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பாரதிய ஜனதா கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும்? அவரவர் செயலுக்கும் அவரவர் நடவடிக்கைக்கும் அவரவர் தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று முடித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில் மதன் ரவிச்சந்திரன், வெண்பா இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக தமிழக பாஜக-வின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் பெயரில் அறிக்கை வெளியானது. அதில், ``பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்து தெரிவித்துள்ள மதன், வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மதன் ரவிச்சந்திரன்
மதன் ரவிச்சந்திரன்

இந்த நிலையில் தான் மதன் ரவிச்சந்திரன், தனது முகநூல் பக்கத்தில் அண்ணாமலையுடன் பேசுவதாக சில உரையாடல்கள் அடங்கிய ஆடியோக்களையும் இணைத்துள்ளார். மேலும் மதன், அண்ணாமலை சொல்லி தான் வீடியோவை வெளியிட்டதாகவும் குறிப்பிடுகிறார். தொடர்ந்து அண்ணாமலை மாறி மாறி பேசி வருவதாகவும் மதன் குற்றம் சாட்டியுள்ளார். மதன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அண்ணாமலை குரலில் வரும் ஆடியோவில், `அந்தப் பெண்களுக்கு நியாயம் வேண்டும். எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதனால் இந்த வீடியோவை கண்டிப்பாக வெளியிடுங்கள். நீங்களும் பத்திரமாக இருங்கள்’ என்று கூறுவதாக இருக்கிறது.

கே.டி ராகவன் வீடியோ விவகாரம்: `யூ-டியூபர் என்னை சந்தித்து பேசியது உண்மைதான்!’ - அண்ணாமலை சொல்வதென்ன?

`இதுபோன்ற வீடியோவை வெளியிட காரணமாக இருந்தது அண்ணாமலை தான்’ எனக்கூறும் மதன் மேலும் கட்சிக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அண்ணாமலை கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார். தனக்கும் தன்னுடன் வந்த பெண்ணுக்கும் கட்சியில் பொறுப்புகள் தருவதாக அவர் பேரம்பேசியதாகவும் மதன் சில ஆடியோ ஆதரங்களை அந்த வீடியோவில் இணைத்துள்ளார்.

மேலும் தான் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கட்சி அலுவலகத்தில் உள்ள தனது அறையின் கதவுகளை வெளிப்படதன்மைக்காக வெளியில் இருந்து பார்த்தாலும் உள்ளே நடப்பது தெரியும் அளவுக்கு மாற்றி அமைத்தேன் என அண்ணாமலை குறிப்பிட்டதாக மதன் சொல்லி இருக்கிறார், அது தொடர்பான ஆடியோ பதிவையும் இணைந்திருந்தார்.

பா.ஜ.க-வில் தொடர்ந்து புயலைக் கிளப்பி வரும் இந்த விவகாரத்தில் தற்போது மதன், அண்ணாமலையை குற்றம்சாட்டியிருப்பது மேலும் அனலை கிளப்பியுள்ளது.

விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...

ராகவன் விவகாரம்: `அண்ணாமலையுடன் பேசியதாக சில ஆடியோக்கள்!’ - அடுத்த வீடியோ வெளியிட்ட மதன்

விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு