மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கிறது. கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. இடையில் 13 மாதங்கள் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. ஆனால், மறைந்த காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியாவின் மகன் ஜோதிராதித்ய சிந்தியாவை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. இந்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க இப்போதே வேலையில் இறங்கியிருக்கிறது. தற்போது முதல்வராக இருக்கும் சிவ்ராஜ் சிங் செளஹான் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே, இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற பா.ஜ.க கடுமையாக உழைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்காக முக்கியப் பிரமுகர்களைக் கட்சியில் சேர்க்கும் வேலையில் பா.ஜ.க ஈடுபட்டிருக்கிறது.

ஏற்கெனவே முன்னாள் முதல்வர் உமா பாரதி மதுபானக்கொள்கை விவகாரத்தில் தனது சொந்தக் கட்சியின் அரசுக்கு எதிராகக் கடுமையாகப் போராட்டம் நடத்திவந்தார். நீண்ட இழுபறிக்குப் பிறகுதான் புதிய மதுபானக்கொள்கையை சிவ்ராஜ் சிங் செளஹான் அறிவித்தார். ஏற்கெனவே நான்கு முறை முதல்வராக இருந்திருக்கிற சிவ்ராஜ் சிங் செளஹான் 2018-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போனதையும், அதன் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்ததையும் சுட்டிக்காட்டி அவரை ஏன் இன்னும் பதவியில் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று சில மூத்த பா.ஜ.க தலைவர்கள் கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.
அவரின் இடத்துக்கு வர பல மூத்த தலைவர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். உமாபாரதி, ஜோதிராதித்ய சிந்தியாவும் கூட இந்தப் பதவிக்கு குறிவைத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே, தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப் பின்பற்றி மத்தியப் பிரதேசத்திலும் புல்டோசர்களைப் பயன்படுத்தி கோயில்களைச் சேதப்படுத்தியவர்களின் வீடுகளை சிவ்ராஜ் சிங் செளஹான் இடித்துத் தள்ளினார்.
இதற்கும் பா.ஜ.க மட்டுமல்லாது ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்தியப் பிரதேசத்தை உத்தரப்பிரதேசத்துடன் ஒப்பிடக் கூடாது என்றும், மத்தியப் பிரதேசத்தில் 90 சதவிகிதம் இந்துக்கள் இருப்பதாகவும், உத்தரப்பிரதேசத்தில் 20 சதவிகிதம் இஸ்லாமியர்கள் இருப்பதாகவும் பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். எனவே, மத்தியப் பிரதேசத்தில் புல்டோசர் கலாசாரத்தை பயன்படுத்தினால் அது நமக்குத்தான் பாதகமாக அமையும் என்று பா.ஜ.க மூத்த தலைவர்கள் கருதினர். இதனால் ஏற்பட்ட பின்னடைவைச் சரிகட்ட, மாநிலம் முழுவதுமுள்ள கோயில்களை மேம்படுத்தும் திட்டங்களைச் செளஹான் அறித்திருக்கிறார்.

அதோடு நலத்திட்டங்கள் மட்டுமே மக்களைச் சென்றடைய வகை செய்யும் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். எனவேதான் பெண்களின் வாக்குகளைக் கவரும் வகையில், வருமான வரி செலுத்தாத பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். ஆனால், தேர்தலில் சமூக கணக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள தவறிவிட்டதாக பா.ஜ.க தலைவர்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். வேட்பாளர்கள் தேர்தலில் எஸ்சி மற்றும் எஸ்டி மக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்பதை பா.ஜ.க தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தத் தவறை வரும் தேர்தலில் சரிசெய்ய பா.ஜ.க முடிவுசெய்திருக்கிறது. அதோடு வழக்கம்போல் பிரதமர் மோடியை அழைத்துவந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கவும் பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. இதே போன்று ராஜஸ்தானிலும் காங்கிரஸ் அரசை வீழ்த்த பா.ஜ.க புதிய வியூகத்தை வகுத்துவருகிறது.