Published:Updated:

`17 ம.பி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மாயம்.. `ஸ்விட்ச்-ஆஃப்' சிந்தியா!'- சிக்கலில் கமல்நாத் அரசு

சிந்தியா - திக்விஜய் - கமல்நாத்
சிந்தியா - திக்விஜய் - கமல்நாத்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிலமை இப்படிச் சென்றுகொண்டிருக்க, மாநில பா.ஜ.க இன்று தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவசரக் கூட்டத்துக்காக அழைத்துள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2018 -ம் ஆண்டில் அம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியாகின. அப்போதே காங்கிரஸ் கட்சி பெரும் சிக்கலுக்கு மத்தியில்தான் ஆட்சிப் பொறுப்பில் ஏறியது. காரணம், தேர்தல் நடைபெற்ற 228 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பா.ஜ.க 107 இடங்களிலும் வெற்றிபெற்றன. கிட்டத்தட்ட சமபலத்துடன் மக்கள் இரு கட்சிக்கும் வாக்களித்திருந்தனர். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்திலும், 4 சுயேச்சைகளும் வெற்றிபெற்றிருந்தனர். பா.ஜ.க, காங்கிரஸ் தவிர வெற்றிபெற்ற 7 உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க கமல்நாத் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்பம் முதலே மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி செய்வதாகக் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வந்தது. ஆனால், காங்கிரஸின் இந்தக் குற்றசாட்டை பா.ஜ.க மறுத்து வந்தது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் மாநிலங்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. காலியாக உள்ள 3 இடங்களில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு இடம் உறுதியாகக் கிடைத்து விடும். மீதம் இருக்கும் ஒரு இடத்துக்கு இருகட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சிந்தியா - கமல்நாத் - திக்விஜய்
சிந்தியா - கமல்நாத் - திக்விஜய்

இந்த நிலையில் கடந்த வாரம் 8 முதல் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. அவர்களை பா.ஜ.க கடத்தி ஹரியானா மாநிலத்தில் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் திரும்பி வந்து, கமல்நாத் அரசுக்கு ஆதரவை தெரிவித்ததால், இப்பிரச்னை அப்போது முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் மத்தியப் பிரதேச அரசியலில் புயலே வீசுகிறது என்று கூறலாம். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவையும், அவருடைய ஆதரவாளர்களாகக் கருதப்படும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் நேற்று கர்நாடகா மாநிலத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். ஜோதிர்ஆதித்யா சிந்தியா மட்டும் டெல்லியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இரு எம்.எல்.ஏக்கள் இந்த 17 எம்.எல்.ஏக்களுடன் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாக காங்கிரஸ் அதிர்ச்சியில் உறைந்தது.

கட்சித் தலைமையுடன் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்த டெல்லி சென்றிருந்த முதல்வர் கமல்நாத், இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து, தனது பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டு போபாலுக்குத் திரும்பினார். நேற்று இரவு முதல்வரின் வீட்டில் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் டெல்லி காங்கிரஸுக்கு நெருக்கமான தலைவர்களும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற 16 அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகின.

Vikatan

ராஜினாமா கடிதத்தை வழங்கிய அமைச்சர் சஜ்ஜன் சிங் வெர்மா, ``மாநிலத்தில் நிலையற்ற தன்மையை பா.ஜ.க ஏற்படுத்துகிறது, நாங்கள் முதல்வரிடம் அமைச்சரவையை மறுகட்டமைப்பு செய்ய வலியுறுத்தியுள்ளோம். மாநிலத்தில் ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். மாநிலத்தில் ஆட்சி பலமாக இருக்கிறது. மக்கள் எங்களுக்குக் கொடுத்த 5 ஆண்டுகளை முழுமையாக ஆட்சி செய்வோம்" என்றார்.

ஜோதிர்ஆதித்யா சிந்தியா
ஜோதிர்ஆதித்யா சிந்தியா
மாஃபியாக்கள் உதவியுடன் அரசைக் கவிழ்க்க நினைக்கும் சக்திகள் வெற்றிபெற விடமாட்டேன்!
கமல்நாத்

இந்தநிலையில் குழப்பத்துக்குக் காரணமாக அறியப்படும் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லி சென்ற கமல்நாத், சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் சிந்தியாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், இந்த விவகாரத்தில் தலையிட்டு சிந்தியாவைச் சமாதானப்படுத்த வேண்டும் எனவும் சோனியா காந்தியிடம் கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது. அதன்பின்னர் எம்.எல்.ஏ-க்கள் காணாமல் போனதாக வெளியான தகவலை அடுத்து அவர் போபால் விரைந்தார்.

இந்தநிலையில் சோனியா காந்தியைச் சந்திக்க ஜோதிர்ஆதித்யா சிந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 2018 -ம் ஆண்டில் மத்தியப் பிரதேசத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் முதல்வர் ரேஸில் கமல்நாத் மற்றும் ஜோதிர்ஆதித்யா சிந்தியா ஆகியோர் இருந்தனர். இந்த ரேஸில் கமல்நாத் முந்தி முதல்வரானார். அப்போது முதலே மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் மாநில முதல்வராகவும் கமல்நாத் இருந்து வருகிறார். இதுதான் கோஷ்டி பூசலுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. பலமுறை மாநிலத் தலைமை மாற்றம் குறித்து ஜோதிர்ஆதித்யா சிந்தியா வலியுறுத்தியும் அவரது கோரிக்கைக்கு கமல்நாத் செவிசாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாநிலங்களவை தேர்தல் மார்ச் 26 -ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதைப் பயன்படுத்தி காய் நகர்த்துவதாகச் சொல்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர்.

ஜோதிர்ஆதித்யா சிந்தியா
ஜோதிர்ஆதித்யா சிந்தியா

காங்கிரஸ் கட்சியில் சில ஜோதிர்ஆதித்யா சிந்தியாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பும் வழங்கி பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் கமல்நாத் மாநிலங்களை உறுப்பினர் பதவிக்கு ஓகே சொல்வதாகவும் மாநில கமிட்டி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே ஜோதிர்ஆதித்யா சிந்தியா சில பா.ஜ.க தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று இரவு பேசிய கமல்நாத், ``மாஃபியாக்கள் உதவியுடன் அரசைக் கவிழ்க்க நினைக்கும் சக்திகள் வெற்றிபெற விடமாட்டேன். என்னைப் பொறுத்தவரை அரசாங்கம் என்பது மக்களுக்கு சேவை செய்ய கிடைக்கும் ஒரு வாய்ப்பு. ஆனால், பா.ஜ.க 15 ஆண்டுகளாக தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது. தற்போது மீண்டும் தவறாகப் பயன்படுத்தி அரசைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள்" என்றார்.

கமல்நாத்
கமல்நாத்

வழக்கம்போல் பா.ஜ.க இதை மறுத்துள்ளது. பா.ஜ.க மாநிலச் செய்தி தொடர்பாளர் ரஜ்னீஷ் அகர்வால் பேசுகையில், ``காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவை அக்கட்சி நடத்திய விதமும் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அவர்களின் தலையீடும்தான் காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைக்குக் காரணம். இதிலிருந்து காங்கிரஸ் கட்சி மீண்டு வருமா எனத் தெரியாது. ஆனால் அவர்கள் சொல்வது போல் இது பா.ஜ.க வின் தலையீடு சுத்தமாகக் கிடையாது" என்றார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிலமை இப்படிச் சென்றுகொண்டு இருக்க, மாநில பா.ஜ.க இன்று தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள அவசரக் கூட்டத்துக்காக அழைத்துள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மத்தியப் பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திக்விஜய் சிங், ``நாங்கள் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவைத் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், அவர் காய்ச்சலால் அவதிப்படுவதாக எங்களுக்குத் தகவல் சொல்லப்பட்டது. அதனால் அவரிடம் பேச முடியவில்லை" என்றார்.

ஜோதிர்ஆதித்யா சிந்தியா
ஜோதிர்ஆதித்யா சிந்தியா

பா.ஜ.க, கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்ததைப் போல் மத்திய பிரதேசத்திலும் ஆட்சியைப் பிடிக்க முயல்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஜோதிர்ஆதித்யா சிந்தியா ஆதரவில் உள்ள 6 அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தால், மொத்த இடங்களின் எண்ணிக்கை 211 ஆக குறைந்து விடும். காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கையும் 100 -க்குக் கீழ் குறைந்து விடும். இதனால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்படும். மேலும் பா.ஜ.க பெரும்பான்மையைப் பெற்றுவிடும். இதனால் மத்தியப் பிரதேச அரசியல் இன்று தேசியச் செய்தியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு