மத்தியப் பிரதேசம் கார்கோன் பகுதியில் நேற்று ராம நவமியை ஒட்டி ஊர்வலம் நடந்தது. அப்போது முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதியின் வழியாக ஊர்வலம் சென்றபோது அங்குள்ளவர்கள் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, கலவரம் வெடித்ததாகவும் சொல்லப்படுகிறது
கர்கோன் கலெக்டர் அனுகிரஹா இது தொடர்பாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் கூறியதாவது, ``மத்தியப் பிரதேசம் கார்கோன் பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்துக்குப் பிறகு கார்கோன் பகுதியில் இரண்டு நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகள், இளங்கலை மற்றும் முதுகலைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்ட 78 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீதமிருப்பவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். மேலும் இந்தச் சம்பவம் எப்படி, ஏன் தொடங்கியது என்பது கண்டறியப்பட்டுவருகிறது” என்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
நாட்டில் ராம நவமி கொண்டாட்டங்களின்போது மத்தியப்பிரதேசம் மட்டுமல்லாமல் குஜராத், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
