மத்தியப் பிரதேசம், கார்கோன் பகுதியில், ராம நவமியை ஒட்டி ஊர்வலம் நடந்தது. அப்போது இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் பகுதியின் வழியாக ஊர்வலம் சென்றபோது அங்குள்ளவர்கள் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சிலர் ஊர்வலத்தின்மீது கற்களை வீசியதாகவும் புகைப்படங்கள் வெளியாகின. இதையொட்டி, கலவரம் வெடித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிகழ்வு மதக்கலவரமாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பவன் சர்மா என்ற அதிகாரி 'தி இந்து'-ஊடகத்துக்கு தெரிவித்ததாவது, `கார்கோனில் வன்முறையில் ஈடுபட்ட 45 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. வகுப்புவாதக் கலவரங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிலர், பொது நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். நில வருவாய்ப் பதிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

மேலும் சிவராஜ் சிங் சௌகான் அரசு சார்பில் இது தொடர்பாக தெரிவித்திருப்பதாவது, ``கார்கோன் வன்முறை துரதிர்ஷ்டவசமானது. இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ள கலவரக்காரர்களிடமிருந்து இழப்பை அரசு வசூலிக்கும். மத்தியப் பிரதேசத்தில் கலவரக்காரர்களுக்கு இடமில்லை. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.''
பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை ராம நவமியன்று இதே மாதிரியான வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கார்கோனில் வீடுகள், கடைகள் புல்டோசர்களால் இடித்துத் தள்ளப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.