Election bannerElection banner
Published:Updated:

`மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது!’ - உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

`மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது. இன்னும் எவ்வளவு காலம்தான் இது தொடரும்?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருக்கிறது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கி, நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வேதா நிலையம் இல்லம்
வேதா நிலையம் இல்லம்
கே.ஜெரோம்

வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``தமிழகத்தில் முக்கியப் பங்காற்றிய முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் என 17 பேரின் வீடுகள் நினைவு இல்லங்களாக மாற்றிப் பராமரிக்கப்படுகின்றன. அந்த அடிப்படையில்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமும் நினைவு இல்லமாக மாற்றப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா வீட்டில் என்ன இருக்கிறது?

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ``அரசு, தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு சட்டம் இயற்றியது சரிதான். ஆனால், இன்னும் எத்தனை காலம் இப்படி நினைவு இல்லங்கள் அமைக்கப் போகிறீர்கள்?’’ என்று கேள்வியெழுப்பினர். மேலும், ``அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லங்களாக மாற்றிவிட முடியாது’’ என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

நீதித்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய பல நீதிபதிகள் இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு நீதிமன்றம் முழுவதும் சிலைவைத்தால் என்னவாகும்? - சென்னை உயர் நீதிமன்றம்.

அதேபோல், இப்படி மறைந்த முதல்வர்களுக்கு நினைவு இல்லங்கள் அமைக்கப்படுவது தொடர்ந்தால், அமைச்சர்களின் வீடுகளையும் நினைவு இல்லங்களாக மாற்ற வேண்டிய நிலை வரும்போல் இருக்கிறது. தமிழக அரசின் இந்தச் செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது. இந்த வழக்கு தொடர்பாக, தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு