Published:Updated:

``திபெத்திய மாணவர்களைக் கைது செய்தது நாட்டுக்கே அவமானம்!" - சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகத்திலுள்ள மாமல்லபுரத்தில் சந்திப்பு மேற்கொள்வதையடுத்து, தமிழக காவல்துறை, திபெத் நாட்டைச் சேர்ந்த மாணவர்களைக் கைதுசெய்துள்ளது. இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியா - சீனா உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைக்காக, இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பை முன்வைத்து, மாமல்லபுரம் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மோடி - ஜி ஜின்பிங்
மோடி - ஜி ஜின்பிங்

சீனா, திபெத் நாடுகளுக்கு இடையிலான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. சீனா, தங்கள் நாட்டை ஆக்கிரமித்துள்ளதாக, திபெத் நாட்டின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர். திபெத் நாட்டின் மதத் தலைவர் தலாய் லாமா, இந்தியாவுக்குள் தஞ்சம் கேட்டு நுழைந்தபோது, இந்தியா அவருக்குத் தஞ்சமளித்தது. மேலும், திபெத் நாட்டைச் சேர்ந்த அகதிகள் பலரும் இந்தியா முழுவதும் வாழ்ந்துவருகின்றனர். இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில், `நாடு கடந்த திபெத் மக்களின் அரசாங்கம்' செயல்பட்டுவருகிறது.

சீனா - திபெத் பிரச்னை பல ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் சூழலில், சீன அதிபரின் தமிழகச் சுற்றுப்பயணத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வாழ்ந்துவந்த திபெத்திய எழுத்தாளரான டென்சின் சுண்டு கைதுசெய்யப்பட்டார். சீன அதிபரின் வருகையைக் கண்டித்து, போராட்டம் நடத்தத் திட்டமிட்டார் எனவும், துண்டறிக்கைகள் விநியோகம் செய்தார் எனவும், டென்சின்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டென்சின் ஏற்கெனவே சீனத் தலைவர்கள் இந்தியா வந்தபோது, போராட்டங்கள் நடத்தியவர்.

Tenzin Tsundue
Tenzin Tsundue

டென்சின் கைது செய்யப்பட்டதையடுத்து, சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயிலும் திபெத் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதும், பால்டென் துண்டுப் என்ற மாணவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பால்டென் துண்டுப், சென்னை திபெத் மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார்.

திபெத் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்தும், மாணவர் பால்டென் விடுதலை கோரியும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Palden Dhundup
Palden Dhundup

கைதுசெய்யப்பட்ட திபெத் மாணவர்களிடம், இதுதொடர்பாகப் பேச முயன்றோம். காவல்துறை விதித்துள்ள விதிமுறைகளால், ஊடகங்களிடம் பேச, அவர்கள் தயங்கினர். சென்னைப் பல்கலைக்கழக மாணவர் ரகு பிரசாத், திபெத்திய மாணவர்கள் கைதுகுறித்து நம்மிடம் பேசினார்.

``கைது செய்யப்பட்ட திபெத் மாணவர்கள் எங்களோடு படிப்பவர்கள். மூன்று நாள்களுக்கு முன், சென்னை சேலையூரில் தங்கியிருந்த இந்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு, சேலையூர் காவல் நிலையத்தில் இரவு முழுவதும் வைக்கப்பட்டனர். 12 பெண்கள் உட்பட 14 மாணவர்களைக் கைதுசெய்த காவல்துறை, அவர்களைக் காலை 6 மணி வரை கழிவறையைப் பயன்படுத்துவதற்குக்கூட அனுமதிக்கவில்லை. காலை 6 மணிக்கு, கைதுசெய்யப்பட்ட மாணவர்களைப் பரங்கிமலை காவல் நிலையத்துக்கு மாற்றிய காவல்துறை, அங்கு இரவு 12 மணிவரை வைத்திருந்தது" என்றார்.

இந்த மாணவர்களுக்கும் விழுப்புரத்தில் கைதான டென்சினுக்கும், திபெத்தியர்கள் என்பதைத் தவிர வேறெந்த தொடர்பும் இல்லை.
ரகு பிரசாத், சென்னைப் பல்கலைக்கழக மாணவர்

தொடர்ந்த ரகு பிரசாத், ``இந்த மாணவர்களுக்கும் விழுப்புரத்தில் கைதான டென்சினுக்கும் இவர்கள் திபெத்தியர்கள் என்பதைத் தவிர, வேறெந்த தொடர்பும் இல்லை. இவர்கள் போராட்டம் நடத்த திட்டமிடவும் இல்லை. எனினும், காவல்துறை கைதுசெய்யப்பட்ட மாணவர்களிடம், `போராட்டம் நடத்தமாட்டோம்' என்று கடிதம் பெற்றுக்கொண்டு விடுதலை செய்துள்ளது. எனினும், பால்டென் என்ற மாணவர் மட்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளை அவருக்குத் தேர்வு இருக்கிறது. ஜின்பிங் இந்தியப் பயணத்தை முடித்துவிட்டுச் செல்லும்வரை, அவர் விடுதலை செய்யப்பட மாட்டார் என்று தெரிகிறது" என்றார்.

மாணவர்களிடம் பெற்ற கடிதம்
மாணவர்களிடம் பெற்ற கடிதம்
இப்படி நடந்துகொள்வதன் மூலம், திபெத்திய மாணவர்களுக்கு இந்தியாவில் இதுதான் நிலைமை என்று இந்திய அரசு உலகுக்குச் சொல்கிறது. இதை நாங்கள் அவமானமாகக் கருதுகிறோம்.
வளர்மதி, சென்னைப் பல்கலைக்கழக மாணவி

போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவி வளர்மதி செய்தியாளர்களிடம் பேசியபோது, ``சென்னையில் படிக்கும் திபெத்திய மாணவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெண் மாணவிகள் நள்ளிரவுவரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு மாணவர்களை, அதுவும் பெண்களைக் காவல் நிலையத்தில் நள்ளிரவுவரை வைப்பதற்கு எந்தச் சட்டத்தில் இடமிருக்கிறது? மாணவர் ஒருவரைக் கைதுசெய்து, புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்படும்போதும், சிறையில் அடைக்கப்படுவதில்லை. ஏன் இந்த மாணவருக்கு மட்டும் சிறைத்தண்டனை?" என்று கேள்விகளை அடுக்கினார்.

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

மேலும் அவர், ``இப்படி நடந்துகொள்வதன் மூலம், திபெத்திய மாணவர்களுக்கு இந்தியாவில் இதுதான் நிலைமை என்று இந்திய அரசு உலகுக்குச் சொல்கிறது. இதை, நாங்கள் அவமானமாகக் கருதுகிறோம். கைதுசெய்யப்பட்டவர்கள் எங்களுடன் படிக்கும் மாணவர்கள். நாளை எங்களுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பால்டெனின் கல்வி, இதனால் பாதிக்கப்படும்.

விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்குச் செல்லும் காவல்துறை அவர்களை அச்சுறுத்துகிறது. வீட்டு உரிமையாளர்களிடம் அந்த மாணவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கிறது. எனவே, சக மாணவர்களுக்காகப் போராடுகிறோம். பால்டென் விடுதலை செய்யப்பட வேண்டும். மற்ற மாணவர்களைக் காவல்துறை அச்சுறுத்தக் கூடாது!" என்றார்.

மோடி- ஜின்பிங் பாதுகாப்புக்குத் தமிழகக் காவல்துறை உருவாக்கிய `ஃபோட்டோகிராமெட்ரிக் மேப்பிங்'!