Published:Updated:

மதுரை: கட்சி தாவிய வழிகாட்டுதல்குழு உறுப்பினர்; அதிர்ச்சியில் அதிமுக-வினர்!

``இவரைத்தான் கட்சியில் வழிகாட்டுதல்குழு உறுப்பினராக ஓ.பி.எஸ்-ஸின் அழுத்தத்தால் நியமித்தார்கள். இதோ கட்சியினருக்கு இதுதான் வழி என்று காட்டிவிட்டுச் சென்றுவிட்டார்" என்று ஆதங்கப்படுகிறார்கள் அ.தி.மு.க-வினர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் இன்று பா.ஜ.க-வில் இணைந்தது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் அ.தி.மு.க-வின் வழிகாட்டுதல்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக நிர்வாகிகளுடன்...
பாஜக நிர்வாகிகளுடன்...

பொதுப்பணித்துறை கான்ட்ராக்டரான மாணிக்கம், கடந்த தி.மு.க ஆட்சியில் அப்போது அமைச்சராக இருந்த துரைமுருகனுக்கு நிழல்போல இருந்து பொதுப்பணித்துறையில் பெரும்பாலான ஒப்பந்த வேலைகளைச் செய்து வளர்ச்சியடைந்தார்.

பின்னர், 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஒ.பி.எஸ்-ஸின் ஆதரவாளராக மாறி அப்போதும் செல்வாக்கான கான்ட்ராக்டராக வலம்வந்தார். ஜெயலலிதா தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடத்தச் சரியான இடம் அமையாத நிலையில், பாண்டி கோயில் அருகே தன் நிலத்தைக் கொடுத்ததன் மூலம் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வெற்றிபெற்றார். அதையடுத்து, கட்சித் தலைமை அவருக்குப் புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் பதவி அளித்தது.

பா.ஜ.க-வில் இணைந்த மாணிக்கம்
பா.ஜ.க-வில் இணைந்த மாணிக்கம்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ் தனி அணியாகச் செயல்பட்டபோது, அவருடன் பயணித்தார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை பிரச்னை ஏற்பட்ட பின்பு, நடந்த சமாதானக் கூட்டம் மூலம் கட்சியில் வழிகாட்டுதல்குழு அமைக்கப்பட்டது. அதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கமும் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டவரை அ.தி.மு.க-வினரே உள்ளடி வேலை பார்த்து, தோற்கடித்ததாகப் பேசப்பட்டது.

பெரிய அளவிலான பொதுப்பணித்துறை கான்ட்ராக்டர் என்பதால் பிரச்னை இல்லாமல் தொழிலைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதால், பழைய நட்பின் அடிப்படையில் துரைமுருகன் ஆதரவோடு தி.மு.க-வில் இணைய முயற்சிகள் மேற்கொண்டுவந்தார் மாணிக்கம். இந்த நிலையில், மதுரை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் அவரை சேர்க்கக் கூடாது என்று தலைமையிடம் போர்க்கொடி தூக்கினார்கள்.

பாஜக நிர்வாகிகளுடன் மாணிக்கம்
பாஜக நிர்வாகிகளுடன் மாணிக்கம்

அதனால், சில நாள்கள் அமைதியாக இருந்தவர், தற்போது பா.ஜ.க-வில் திடீரென இணைந்திருக்கிறார். மாணிக்கத்தின் கட்சித்தாவலுக்கு மதுரை அதிமுக-வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவிவருகிறது.

இது தொடர்பாக அ.தி.மு.க-வினர், ``மாணிக்கம் அடிப்படையில் ஒரு பிசினஸ்மேன். கட்சிக்காக உழைக்க எத்தனையோ பேர் இருக்கும்போது ஓ.பி.எஸ் போன்றவர்கள் இவருக்கு சீட் வாங்கிக் கொடுத்து, கட்சியில் பொறுப்புகளும் வாங்கிக் கொடுத்தார்கள். இதுவரை கட்சியினருக்கோ, கட்சி வளர்ச்சிக்கோ எதுவுமே செய்யாமல் இருந்தார். தொழிலதிபரான இவர் தி.மு.க அரசால் எந்தவொரு வழக்கும் வந்துவிடக் கூடாது என முடிவெடுத்துப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால் பா.ஜ.க-வில் ஐக்கியமாகியிருக்கிறார். இவரைத்தான் கட்சியில் வழிகாட்டுதல்குழு உறுப்பினராக ஓ.பி.எஸ்-ஸின் அழுத்தத்தால் நியமித்தார்கள். இதோ கட்சியினருக்கு இதுதான் வழி என்று காட்டிவிட்டுச் சென்றுவிட்டார்" என்று மாணிக்கத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: `தனித்துப் போட்டியிட பாஜக தயாரா?!' - என்ன சொல்கிறார் கரு.நாகராஜன்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு