Published:Updated:

மூன்று செல்போன்களை ஒட்டுக்கேட்கும் செலவில், மூவாயிரம் ஆண்டு வரலாற்றை அறியலாம்!

சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
சு.வெங்கடேசன்

- சு.வெங்கடேசன் சுளீர்

மூன்று செல்போன்களை ஒட்டுக்கேட்கும் செலவில், மூவாயிரம் ஆண்டு வரலாற்றை அறியலாம்!

- சு.வெங்கடேசன் சுளீர்

Published:Updated:
சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
சு.வெங்கடேசன்
தமிழனின் நாகரிகப் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிவரும் கீழடி அகழாய்வுப் பணிகளை, கிண்டலடிக்கும் கட்டுரை ஒன்று அண்மையில் வார இதழ் ஒன்றில் வெளியாக... தமிழ்கூறும் நல்லுலகமே தகித்துக்கிடக்கிறது. இந்தநிலையில், ‘கீழடி, சிவகளை அகழாய்வுகளைத் திறந்தவெளி அருங்காட்சியகமாக உருவாக்க வேண்டும்’ என்று உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். அவரிடம் பேசினோம்...

‘‘ ‘கீழடியில் மண்ணைத் தோண்டிக்கொண்டிருப்பது தண்டச் செலவு, வெட்டி வேலை’ என்றெல்லாம் ஒரு வாரப் பத்திரிகை எழுதியிருக்கிறதே..?’’

“மூளை சீழ்ப்பிடித்த பழைமைவாதிகள், எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கண்டும் இப்படித்தான் கதறுவார்கள். ‘தாங்கள் இதுவரை சொல்லிவந்தவை உண்மையல்ல...’ என்று நிரூபணம் ஆகும்போது அவர்கள் பித்தேறி, மனநலம் பிறழ்ந்து பேசுவதை உலகம் முழுவதும், எல்லாக் காலங்களிலும் நம்மால் பார்க்க முடியும். இவர்களின் கதறலை டெசிபல் அலகில் அளவிடுவது, நாம் உண்மையை எவ்வளவு தூரம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை கணிப்பதற்கான எளிய வழிமுறைகளில் ஒன்று!’’

“ `கீழடி, மண்பானை, பாசிமணிகளைக் காட்டிக்கொண்டிருந்தால் தமிழன் வயிறு நிறையுமா?’ என்றும் கேள்வி கேட்கிறார்களே..?’’

“சரஸ்வதி நாகரிகத்தைக் கண்டறிய பல நூறு கோடிகள் தொடர்ந்து செலவிடப்பட்டுவருகிறதே... அது இந்தியனின் வயிற்றை நிறைக்கவா... ராம கதையையும், விஷ்ணு புராணங்களையும் வரலாறாகத் திரித்துக் கூறுவதற்காக எண்ணற்ற கோடிகள் செலவிடப்படுகிறதே... அது இந்துக்களின் வயிற்றை நிறைக்கவா? ‘எங்கள் மரபின் வளமை, ஆண்-பெண் பேதமற்ற சமநிலை எழுத்தறிவும், பெரும் மதங்கள் உருவாகும் முன்பே அளவற்ற கலைச் செல்வங்களையும், அறிவியல் நுட்பங்களையும் கொண்டது’ என்று நாம் சொல்லும்போது மூலத்தில் மிளகாய்ப் பொடி தூவியதைப்போல இவர்கள் துடிக்கிறார்கள். எம் தலைமுறையின் வரலாற்றுப் பசிக்குக் கீழடியின் உண்மைகள் அறுசுவை விருந்து படைக்கின்றன. இதை எதிர்கொள்ள முடியாதவர்களின் வயிற்றெரிச்சல் ரசிக்கும்படியாக இல்லை என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை!’’

“கொரோனா காலகட்டத்தில், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இது போன்ற தொல்லியல் ஆய்வுகளுக்காக ஓர் அரசு செலவு செய்வதென்பது தேவையான விஷயம்தானா?’’

“இவர்களின் பிரச்னை கொரோனா அல்ல, பொருளாதார நெருக்கடியுமல்ல, கீழடிதான். இந்தக் கொடிய கொரானா காலத்தில் ஒரு மனிதர் 24,000 கோடி ரூபாய் செலவில் ‘சென்ட்ரல் விஸ்டா’ கட்டிக்கொண்டிருக்கிறார்; 8,000 கோடி ரூபாய்க்குத் தனி விமானங்களை வாங்குகிறார்; 1,80,000 கோடி ரூபாயை கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகையாக வழங்குகிறார். இதுவெல்லாம் இவர்களுக்கு இனிக்கிறது. ஆனால் கீழடி மட்டும் கசக்கிறது? கீழடி ஆய்வுக்குக் கடந்த ஏழு ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் செலவு செய்த மொத்தத் தொகை, ‘பெகாசஸ் மென்பொருள்’ மூலம் மூன்று செல்போன்களை வேவு பார்க்க ஆன செலவைவிடவும் குறைவுதான். நீங்கள் மூன்று செல்போன்களை ஒட்டுக்கேட்ட செலவில், நாங்கள் மூவாயிரம் ஆண்டு வரலாற்றை உலகமே கேட்கச் செய்திருக்கிறோம். இதுவே எங்களின் பெருமை!’’

மூன்று செல்போன்களை ஒட்டுக்கேட்கும் செலவில், மூவாயிரம் ஆண்டு வரலாற்றை அறியலாம்!

“ `தமிழ்நாட்டின் நிதி நிலைமை எதிர்பார்த்ததைவிடவும் மோசமாக உள்ளது’ என நிதியமைச்சர் பி.டி.ஆரே வருத்தப்படுகிறார். இந்தச் சூழலில், ‘கீழடி, சிவகளை பகுதிகளைத் திறந்தவெளி அருங்காட்சியகமாக்க வேண்டும்’ என்று நீங்கள் சொல்கிறீர்களே..?’’

“நிதி நிலையில் இது ஒரு பிரச்னை என்று அணுகும் அளவுக்கான ஒதுக்கீடல்ல நாங்கள் கோருவது. இன்னும் சொல்லப்போனால், இது நிதிநிலை சார்ந்த பிரச்னையுமல்ல... அரசியல் தத்துவார்த்தப் பிரச்னை. இன்று நம்மைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது, புதிய கல்விக்கொள்கையின் பகுதியாக சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்களில் வரலாற்றுப் பாடங்கள் முழுவதையும் மாற்றி எழுதும் முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. அதனடிப்படையில், மாநில அரசுகளின் பாடத்திட்ட உருவாக்கக் குழுக்களின்மீது ஆணை பிறப்பிக்கத் தொடங்கியாகிவிட்டது.

நேற்றைய தினம் கல்வியாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், ‘கொரோனா காலத்திலும் புதிய கல்விக்கொள்கையை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறோம்’ என்று பெருமைப்பட்டிருக்கிறார். நம் கண்களுக்கு முன்னால், நமது குழந்தைகள், நமக்கெதிரான வரலாற்றை வாசிக்கத் தொடங்கப்போகிறார்கள். இது அடுத்த ஆண்டே நிகழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரு பேரழிவின் முகப்பில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். எல்லா வகையிலும் நாம் நம்மை வலிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். நமது வலிமை என்பது, நமது அறிவு மரபு. ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான, சனாதனத்துக்கு எதிரான நமது பண்பாட்டு மரபு, அதை அரசியல் கூர்மையுடன் கையாள வேண்டும். அதற்கான முக்கியத்துவத்தை எல்லா வகையிலும் அதிகரிக்க வேண்டும்.’’

“மகளிருக்கு மாதாந்தர உதவித்தொகை, பெட்ரோல் விலைக்குறைப்பு எனத் தேர்தலில் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே நிதியின்றி தி.மு.க அரசு திணறிவருகிறதே..?’’

“கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க அரசு அனைத்து வகையிலும் கஜானாவை காலி செய்து வைத்திருக்கிறது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு இந்த நெருக்கடியைச் சமாளித்து, மக்களுக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடுகிறது. இது தி.மு.க-வின் நலன் சார்ந்த பிரச்னையல்ல, மொத்தத் தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்னை. எனவே, அரசு இதில் முழு வெற்றியை ஈட்டும் என்று நம்புகிறேன்!’’

“தமிழ் வளர்ச்சித்துறையை, தமிழ்ப் பண்பாட்டுத்துறை எனப் பெயர் மாற்றம் செய்துவிட்டதோடு, தனி அமைச்சகம் என்ற அந்தஸ்தையும் இழக்கச்செய்து, மூன்றில் ஒரு துறையாகத் தமிழின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்ட தி.மு.க அரசை நோக்கி, இதுவரை நீங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை?’’

“கடந்த ஆட்சிக்காலத்தில், பா.ஜ.க-வின் கெளரவ உறுப்பினராக இருந்த ஒருவர், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து ஆற்றிய பணியைவிட பல மடங்கு சிறப்பான பணியை இப்போதைய தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரால் செய்ய முடியும். குதிரையின் வேகம், பயணிக்கும் வீரனைப் பொறுத்தது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism