Published:Updated:

`எம்.ஜி.ஆர் சிலை பராமரிப்பு; திடீரென உருவான ஜெயலலிதா சிலை!' -கொதிக்கும் மதுரை தி.மு.க

எம்.ஜி.ஆர் சிலை பராமரிப்புப் பணி என்ற பெயரில் உள்ளே ஜெயலலிதா சிலையை அமைப்பதற்கான பணிகளைத்தான் செய்திருக்கிறார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஜெயலலிதா சிலை
ஜெயலலிதா சிலை

மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகிலுள்ள ரவுண்டானாவில் திடீரென்று உருவான ஜெயலலிதாவின் சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா சிலை
ஜெயலலிதா சிலை

சில மாதங்களுக்கு முன், மாவட்ட நீதிமன்றம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர் சிலையை சுற்றித் தகடுகளால் தடுப்புகளை ஏற்படுத்தினர் அ.தி.மு.க-வினர். எம்.ஜி.ஆர் சிலை அமைந்திருக்கும் இடத்தைப் புனரமைக்கப்போவதாக கூறினார்கள். அதனால், அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட போதிலும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

Vikatan

ஆனால், எம்.ஜி.ஆர் சிலை பராமரிப்புப் பணி என்ற பெயரில் உள்ளே ஜெயலலிதா சிலையை அமைப்பதற்கான பணிகளைத்தான் செய்து வந்திருக்கிறார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதன் அருகில்தான் மாவட்ட மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. அவர்கள்கூட இங்கு என்ன பணி நடக்கிறது என்பதை ஆய்வு செய்யவில்லை.

ஜெயலலிதா சிலை
ஜெயலலிதா சிலை

இந்த நிலையில், எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் ஜெயலலிதாவின் சிலை நிர்மாணிக்கப்பட்ட தகவல் தெரிந்து தி.மு.க மாநகர, மாவட்ட நிர்வாகிகள் கோ.தளபதி, பி.மூர்த்தி, வேலுச்சாமி, டாக்டர் சரவணன் ஆகியோர் நேற்று கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.

`போக்குவரத்து நெரிசலான பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் ஜெயலலிதாவுக்கு சிலை அமைத்துள்ளனர். பொது இடங்களில் சிலை அமைக்க உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், அதை மதிக்காமல் சிலை வைத்துள்ளார்கள். இதை மாவட்ட நிர்வாகம் அகற்றாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்" எனக் கொதிக்கின்றனர் தி.மு.க மாவட்ட நிர்வாகிகள்.

ஜெயலலிதா சிலை
ஜெயலலிதா சிலை

ஜெயலலிதா சிலை விவகாரம் குறித்து ஆளும்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் இதுவரையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இன்று மாலை மதுரை நகருக்குள் செல்லூர் ராஜு தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் சிலையை திறந்து வைத்து அஞ்சலி செலுத்த இருக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், கட்சி நிர்வாகிகள் இன்று காலை முதலே சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவருகிறர்கள். மாவட்ட நிர்வாகமும் இதைக் கண்டுகொள்ளவில்லை.