Published:Updated:

`ஒரு தொகுதிக்கு ஏன் மாவட்டச் செயலாளரா இருக்கணும்?’ - கொதிக்கும் தளபதி; தகிக்கும் மதுரை தி.மு.க!

கோ.தளபதி
கோ.தளபதி

மதுரை மாநகர் மாவட்டத்தை அமைப்புரீதியாக இரண்டாகப் பிரித்திருக்கிறது தி.மு.க. இந்தப் பிரிப்பு, ஈகோ யுத்தத்தை ஆரம்பித்து வைத்திருப்பதுதான் மதுரையில் அனலடிக்கும் ‘ஹாட்’ அரசியல் டாபிக்!

தி.மு.க-வில் அமைப்புரீதியாக இருக்கும் மதுரை மாநகர் மாவட்டத்தை மாநகர் வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரித்திருக்கிறது அறிவாலயம். மாநகர் வடக்கு மாவட்டத்துக்கு பொன்.முத்துராமலிங்கத்தையும், மாநகர் தெற்கு மாவட்டத்துக்கு கோ.தளபதியையும் பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறார்கள். இப்படிப் பிரிக்கப்பட்ட வகையில், தளபதியின் கட்டுப்பாட்டிலிருந்த மதுரை வடக்கு, தெற்கு தொகுதிகள் பிரிக்கப்பட்டு பொன்.முத்துராமலிங்கம் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தன்னை டம்மியாக்கி இருப்பதால், தளபதி தரப்பு கடும் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அறிவாலயத்தில் கட்சி சீனியர்களைச் சந்தித்து மனக்குமுறல்களை அவர்கள் கொட்டிவருகிறார்கள்.

கோ.தளபதி
கோ.தளபதி

அறிவாலயத்துக்கு வந்திருந்த மதுரை தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். ``இப்போது மாவட்டம் பிரிக்கப்பட்டபடி, மதுரை மத்திய, மதுரை தெற்கு தொகுதிகள் மட்டுமே தளபதியின் வசம் வருகின்றன. மதுரை மத்திய தொகுதியின் எம்.எல்.ஏ-வாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகவும், தலைவர் ஸ்டாலினுடன் நேரடி தொடர்பில் இருப்பதாலும், மாவட்டச் செயலாளரான தளபதியை அவர் கண்டுகொள்வதே இல்லை. தியாகராஜன் கொடுக்கும் தைரியத்தில் மதுரை மத்திய தொகுதியைச் சேர்ந்த பகுதி, வட்டச் செயலாளர்கள்கூட தளபதியை வந்து பார்ப்பதில்லை. தன்னிச்சையாகக் கூட்டங்களை நடத்துவது, நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது என்று செயல்படுகிறார்கள். மீதமிருக்கும் மதுரை தெற்கு தொகுதியின் நிர்வாகிகள் மட்டும்தான் தளபதியின் பேச்சைக் கேட்கிறார்கள். `இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் நான் ஏன் மாவட்டச் செயலாளரா இருக்கணும்... இதையும் யார்கிட்டயாவது கொடுத்துட வேண்டியதுதானே?’ என்று தளபதி கொதித்துப்போயிருக்கிறார்.

`அழகிரி தமிழகத்தின் ஒவைசியா... பின்னணியில் பா.ஜ.க?’ - தனிக்கட்சி தகவலால் தகிக்கும் மதுரை

மதுரை மாநகர் மாவட்டத்தை மட்டும் பிரித்த கட்சித் தலைமை, புறநகரைப் பிரிக்கவில்லை. மதுரை புறநகர் வடக்குக்கு மூர்த்தியும், புறநகர் தெற்குக்கு மணிமாறனும் மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள். இவர்களின் கட்டுப்பாட்டில் தலா மூன்று தொகுதிகள் வருகின்றன. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் மாவட்டங்களைப் பிரிக்கும் கட்சித் தலைமை, மதுரை மாநகரைப் பிரித்தபோதே, புறநகரையும் பிரித்திருக்க வேண்டும். இது கட்சிக்குள் தேவையில்லாத ஈகோ யுத்தத்தை உருவாக்கியிருக்கிறது.

பொன்.முத்துராமலிங்கத்துடன் தளபதி
பொன்.முத்துராமலிங்கத்துடன் தளபதி

கட்சிக்குள் இளம் ரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும் என்று துடிப்புடன் உதயநிதியை ஒருபக்கம் களமிறக்கிவிட்டு, 80 வயதான பொன்.முத்துராமலிங்கத்தை மாவட்ட பொறுப்பாளராக்கியிருப்பது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. கொரோனா காலத்தில் அவரால் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்ற முடியுமா... மதுரை மாநகர் மாவட்டம் பிரிக்கப்பட்டதில் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறியிருக்கின்றன. இதையெல்லாம் சீனியர்கள் வாயிலாக கட்சித் தலைமையிடம் கொண்டுசேர்த்திருக்கிறோம். தலைமை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

தென்காசி, திருநெல்வேலிக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள்... பரபரக்கும் தென்மாவட்ட தி.மு.க!

மதுரை மாவட்டப் பிரிப்பு பஞ்சாயத்து குறித்து அறிவாலயத்தில் விசாரித்தோம். ``இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்பது ஐபேக்கும் கட்சித் தலைமையும் கலந்து பேசி முடிவெடுத்த திட்டம். இதில் எந்த மாற்றமும் இருக்காது. மாவட்டத்தைப் பிரிக்கும்போது சில சச்சரவுகள், கோஷ்டிப் பூசல்கள் எழுவது வாடிக்கையான விஷயம்தான். மதுரை, தென்காசி, திருநெல்வேலி என ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுதான் நடக்கிறது. ஆனால், தேர்தல் வரும்போது எல்லோரும் ஒற்றுமையாகக் கூடிக் களப்பணி ஆற்ற ஆரம்பித்துவிடுவார்கள்” என்றனர்.

கோ.தளபதிக்கு நெருக்கமான சிலரும், ``தலைமையின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்தான் தளபதி. பதவிக்காகக் கட்சியில் இருப்பவரல்ல. அவர் எந்த மனவருத்தத்திலும் இல்லை” என்று விளக்கமளித்தனர்.

ஸ்டாலினிடம் வாழ்த்து பெறும் பொன்.முத்துராமலிங்கம்
ஸ்டாலினிடம் வாழ்த்து பெறும் பொன்.முத்துராமலிங்கம்

எது எப்படியோ, மதுரை தி.மு.க-வில் ஒரு ஈகோ யுத்தம் எழுந்திருக்கிறது. அது தேர்தல் களத்திலும் எதிரொலிக்குமா? அல்லது காலச்சூழலில் கரைந்துவிடுமா என்பது வரும் மாதங்களில் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு