Election bannerElection banner
Published:Updated:

மதுரை: இந்தியில் வந்த கடிதம்... மத்திய அமைச்சருக்கே திருப்பி அனுப்பிய சு.வெங்கடேசன் எம்.பி!

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

`உங்கள் அமைச்சக அதிகாரிகள் இந்நாட்டின் சட்டத்தை மீறியிருக்கிறார்கள். அரசாங்கம் நீதிமன்றத்தின் முன்பு அளித்த உறுதி மொழியை மீறியிருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்’ - சு.வெங்கடேசன் எம்.பி.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய கலசார அமைச்சகம் இந்தியில் கடிதம் அனுப்பியிருக்கும் விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது சம்பந்தமாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

அதில், ``19-3-2020 என்ற எண்ணிடப்பட்ட கடிதத்தை உங்கள் அமைச்சகத்திலிருந்து வரப்பெற்றிருக்கிறேன். அது இந்தியில் இருக்கிறது. நல் வாய்ப்பாக கடித எண்ணை மட்டுமாவது தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், கடிதத்தின் உள்ளடக்கம் என்னவென்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அந்தக் கடிதத்தோடு இணைக்கப்பட்ட ஆங்கிலப் படிவத்தின் மூலம் அந்தக் கடிதம் காந்தி சமாதான விருதுக்கான பரிந்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கேட்கிற கடிதம் என்று அனுமானிக்க முடிகிறது.

தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தகவல் தொடர்புகள் இந்தியில் அமையக் கூடாது. அவ்வாறு அமைவது அலுவல்மொழிச் சட்டத்துக்கும், அரசு பல்வேறு தேதிகளில் வெளியிட்டிருக்கும் ஆணைகளுக்கும் புறம்பானது என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்து எதிர்ப்பு தெரிவித்துவந்திருக்கிறேன்.

மத்திய அமைச்சருக்கு கடிதம்
மத்திய அமைச்சருக்கு கடிதம்

இந்தப் பிரச்னையில் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையைக்கூட அணுகினேன். அந்த வழக்கில் மத்திய அரசு வருத்தத்தைத் தெரிவித்து, இனி தகவல் தொடர்புகள் ஆங்கிலத்தில் அமையும் என்ற உறுதிமொழியையும் அளித்தது.

கடந்த காலங்களில் இந்திக் கடிதங்களை மற்ற அமைச்சகங்களிலிருந்து வரப்பெற்றேன். இது கலாசார அமைச்சகத்தின் முறைபோல. கலாசார அமைச்சகத்தின் அதிகாரிகளாவது இம் மாபெரும் தேசத்தின் பன்மைத்துவ கலாசார, பன்மொழி மரபு வழியை உள்வாங்கியவர்களாக இருந்திருக்க வேண்டும்.

மத்திய அரசின் இந்த அணுகுமுறை திட்டமிடப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. சம்ஸ்கிருதத்தையும் இந்தியையும், அம்மொழிகளைப் பேசாத மாநிலங்கள் மீது, குறிப்பாக தமிழக மக்கள்மீது திணிப்பதற்கான விரிந்த திட்டமா இது?

இப்படியே தொடர்ந்து செய்தால் இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் களைத்துப்போய் எதிர்க்கும் ஆற்றலை இழந்துவிடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்கக்கூடும்.

ஆனால், அழுத்தமாகப் பதிவுசெய்ய விரும்புகிறேன். எங்கள் தமிழ்நாடு, இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராக உறுதியாகப் போராடிய, பல தியாகங்களையும் புரிந்த தனித்துவம்மிக்க வரலாற்றைக்கொண்டது. ஆகவே, நாங்கள் களைத்துப்போய்விட மாட்டோம்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

எங்கள் அடையாளத்தை, பெருமைமிகு கலாசாரத்தை பலவீனமுறச் செய்யும் நடவடிக்கைகளை உறுதியாக எதிர்த்து முறியடிப்போம்.

உங்கள் அமைச்சக அதிகாரிகள் இந்த நாட்டின் சட்டத்தை மீறியிருக்கிறார்கள். அரசாங்கம் நீதிமன்றத்தின் முன்பு அளித்த உறுதிமொழியை மீறியிருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

ஆகவே, உங்கள் இந்திக் கடிதத்தை உங்களுக்கே திருப்பி அனுப்புகிறேன். உங்கள் அமைச்சகம் இப்படி ஆத்திரமூட்டுகிற நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் ஈடுபடக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கலாசார அமைச்சருக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து கடிதம் அனுப்பியிருப்பதாக சு.வெங்கடேசன் தெரிவித்திருக்கிறார்.

தமிழகம் வரும்போதெல்லாம் தமிழ் மொழி பெருமை பற்றி பிரதமர் பேசிவரும் நிலையில், இந்த இந்திக் கடித விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`உலகின் சிறந்த மொழியான தமிழை கற்க முடியாமல் போனது வருத்தம்!’ - மன் கி பாத் உரையில் மோடி
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு