Published:Updated:

கொரோனா: `மதுரையை மையப்படுத்தி தனித்த திட்டமிடல் தேவை!’- சு.வெங்கடேசன் எம்.பி

கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை
கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை ( ஈ.ஜெ.நந்தகுமார் )

`மதுரையை மையப்படுத்தி தென்மாவட்டங்களுக்கான தனித்த திட்டமிடலும் அணுகுமுறையும் தேவை' என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அறிவுறுத்தியிருக்கிறார்.

``கடந்த சில நாள்களாக தென்மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
என்.ஜி.மணிகண்டன்

இதுபற்றி நம்மிடம் பேசியவர்,``கொரோனா தொற்றினைப் பற்றிய முழுவிவர அறிக்கையைக் கடந்த ஜூன் 7-ல் வெளியிட்ட தமிழக அரசு, அடுத்த அறிக்கையை ஜூன் 20-ல் வெளியிட்டுள்ளது. அதில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகமாகியுள்ளன.

இதில் காஞ்சிபுரம், சென்னை மண்டலத்தில் இருப்பதால் அதற்கான சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அங்கு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகமாகியுள்ளன. சென்னையையும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இம்மாவட்டங்களில் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கலாம். ஆனால், தொற்றும், மரணமும் இருமடங்கு அதிகமாகியுள்ளதை எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை
கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை
ஈ.ஜெ.நந்தகுமார்

கடந்த மே 31-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட ஆணையில், சென்னை மண்டலத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு வருகிறவர்களைக் கட்டாயம் கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றனர். ஆனால், இந்த ஆணையை மாவட்ட நிர்வாகங்கள் பின்பற்றவில்லை. தொடர்ந்து இதுகுறித்து அறிக்கையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்ட பின்னர் கடந்த சில நாள்களாகத்தான் பரிசோதனை செய்கிறார்கள்.

ஆனால், முறையான அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் பெரும் எண்ணிக்கையில் சென்னையிலிருந்து மக்கள் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பியுள்ளனர். இவர்களைக் கண்டறிந்து சோதனையை மேற்கொள்ளும் பணியை விரைவாகச் செய்யவேண்டியுள்ளது.

அனைத்துவகையான வியாபாரத்திற்கும், தேவைக்கும், ரயில் நிலையம், விமான நிலையம் என மதுரையை மையப்படுத்தியே அருகிலுள்ள மாவட்டங்கள் இயங்குகின்றன. அதனாலேயே மதுரைக்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை மிகஅதிகம். இவற்றைப் புரிந்துகொண்டு மதுரையை மையப்படுத்தி தென்மாவட்டங்களுக்கான தனித்த திட்டமிடலும் அணுகுமுறையும் தேவை.

கொரோனா
கொரோனா

அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா நோய்த்தொற்றின் வேகம் தென்மாவட்டங்களில் மிகத்தீவிரமடைய வாய்ப்புள்ளது. எனவே தென்மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியாகச் செயல்திறன் படைத்த ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும். மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்ப சிறப்பு ஏற்பாடுகளும், தென்மாவட்டங்கள் முழுவதுக்குமான பொதுவான திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கடும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே முதலமைச்சர் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு