Published:Updated:

மதுரை மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் நினைவுதினக் கட்டுரை! #MyVikatan

பி.டி.ஆர் பழனிவேல்ராஜன்
பி.டி.ஆர் பழனிவேல்ராஜன்

இவரது மகன் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 2016 தேர்தலில், அவரது தந்தை பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் போட்டியிட்ட அதே மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பி.டி.ஆர் பழனிவேல்ராஜன், தென் மாவட்ட திமுகவின் முன்னணி தலைவராக இருந்தவர். ஏறக்குறைய 70-களில் இருந்து 2006-வரை மதுரை திமுகவில் முக்கிய அங்கம் வகித்தவர். இயற்பெயர் பழனிவேல் ராஜனாக என்றாலும் தனது இனிசியலான பி.டி.ஆர் என்ற மூன்றெழுத்திலேயே மக்களாலும், கட்சிக்காரர்களாலும் அழைக்கப்பட்டவர். 27 பிப்ரவரி 1932 -ல் அன்றைய மதுரை மாவட்டத்தின் உத்தமபாளையத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் பாரம்பர்யமான அரசியல் குடும்பம். இவரது தந்தை பி.டி.ராஜன், ஆங்கிலேய ஆட்சி காலத்தில் செயல்பட்ட நீதி கட்சியின் முன்னணி தலைவராக இருந்தவர், மேலும் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தவர்

தந்தை பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் உடன் பி.டி.ஆர்.தியாகராஜன்
தந்தை பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் உடன் பி.டி.ஆர்.தியாகராஜன்

பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் தன் பள்ளி கல்வியை முடித்தபின், சென்னை கிருஸ்துவ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞராகவும் பட்டம் பெற்றார். அதன் பின் சிறிது காலம் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வந்தார். 1967 ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்து தன் அரசியல் பயணத்தை தொடங்கினார். 1980-களில் திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களால் தா.கிருட்டிணன் மற்றும் ஆலடி அருணா போன்றவர்களோடு பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் அவர்களும் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவராக அறிமுகபடுத்தப்பட்டார். மேலும், இவர் பண்பான அரசியல் செய்த ஒரு பண்பாளர் எனப் பெயரெடுத்தவர். திராவிடக் கட்சியில் பயணித்ததாலும்கூட, மிகுந்த இறை நம்பிக்கை உடையவர். அரசியல் பணிகள் தவிர இறை பணியும் செய்து வந்தவர்.

1967 ஆம் ஆண்டு, முதன் முறையாக தமிழக சட்டமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டார். அதன் தொடர்ச்சியாக 1971 தேர்தலில் மீண்டும் தேனி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டார். பிறகு , 1980 சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு தனக்கெதிராக போட்டியிட்ட பழ.நெடுமாறனிடம் தோல்வி அடைந்தார். அதற்கடுத்தபடியாக ,1996 தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க பட்டு பதினோராவது சட்டமன்றத்தின் சட்டப்பேரவை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தார். அடுத்து நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன் தொடர்ச்சியாக 2006 சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்று தமிழக சட்டமன்றத்தின் இந்து அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அமைச்சராக பதவியேற்ற பின், 20 மே 2006 அன்று சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் திரும்பும் வழியில் திண்டுக்கல் அருகே மாரடைப்பு காரணமாக தனது 74 ஆம் வயதில் இயற்கை எய்தினார். அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் இவருடைய இரங்கல் செய்தியில் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் என்றால் அவருடைய கண்ணியம், அடக்கம், உன்னதம் ஆகியவையே தன் நினைவிற்கு வருவதாக குறிப்பிட்டிருந்தார். இதை தவிர , பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் இரண்டு முறை தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி) இருந்திருக்கிறார்.

பி.டி.ஆர் பழனிவேல்ராஜன்
பி.டி.ஆர் பழனிவேல்ராஜன்

அரசியல் பணி தவிர மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக பதவி வகித்தார். இந்த பல்கலைக்கழகத்தின் மாலை நேர வகுப்புகள் நடைபெறும் வளாகத்திற்கு 'பண்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் வளாகம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இவரது நினைவைப் போற்றும் வகையில் மதுரையில் இவருக்கு திருவுருவ சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவரது மகன் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 2016 தேர்தலில், அவரது தந்தை பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் போட்டியிட்ட அதே மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2021 தேர்தலில் போட்டியிட்டு தற்போதைய சட்டமன்றத்தின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.மதுரையின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை நிறைவேற்றி மக்களின் மனதிலும், திமுகவினர் மனதிலும், மற்றும் தமிழக அரசியல் வரலாற்றிலும் நீங்கா இடம்பெற்றார் பி டி.ஆர்.பழனிவேல்ராஜன்.

-க.சேதுராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு