Election bannerElection banner
Published:Updated:

தி.மு.க-வின் மிஷன்; தொடக்கம் முதலே பின்னடைவு! - எளிதில் வீழ்ந்த மாஃபா பாண்டியராஜன் #TNelections2021

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

தோற்கடிக்கப்பட வேண்டிய அமைச்சர்கள் என்ற திமுக-வின் பட்டியலில், மாஃபா பாண்டியராஜனும் இடம்பெற்றிருந்ததால், இந்தத் தேர்தலில் உடன் பிறப்புகளின் களப்பணி கடுமையாக காணப்பட்டது.

பாஜக-விலிருந்து தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய மாஃபா பாண்டியராஜன், பின்னர் தேமுதிக-வில் இணைந்து, 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பின்னர், 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அதிமுக-வில் இணைந்து, ஆவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் பாண்டியராஜன் 1,08,064  வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசர், 1,06,669 வாக்குகள் பெற்ற நிலையில், வெறும் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் பாண்டியராஜன் வெற்றி பெற்றார். தொகுதி மறுசீரமைப்பில் ஆவடி கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில்தான் சட்டமன்றத் தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், 2011, 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் இந்தத் தொகுதியை அதிமுக கைப்பற்றிய நிலையில், இந்த முறையும் ஆவடி தொகுதியில் போட்டியிட்ட பாண்டியராஜனை எதிர்த்து, மீண்டும் திமுக சார்பில் நாசர் களம் இறக்கப்பட்டிருந்ததால், போட்டி கடுமையாகவே காணப்பட்டது. தோற்கடிக்கப்பட வேண்டிய அமைச்சர்கள் என்ற திமுக-வின் பட்டியலில், பாண்டியராஜனும் இடம்பெற்றிருந்ததால் இந்தத் தேர்தலில் உடன் பிறப்புகளின் களப்பணி கடுமையாக காணப்பட்டது.

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

இங்கு வன்னியர், முதலியார், நாயுடு, ஆதிதிராவிடர் மற்றும் பல சமூகத்தினர் கணிசமாக இருக்கிறார்கள். அத்துடன் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்ட அளவு இருக்கிறார்கள். பா.ஜ.க-வுடனான அ.தி.மு.க கூட்டணி, பாண்டியராஜன் மீதான பாஜக ஆதரவு முத்திரை போன்றவை, அதிமுக-வுக்குக் கிடைக்க வேண்டிய சிறுபான்மையினர் வாக்குகளைச் சிதறடித்துவிடலாம் என்ற அச்சமும், அமமுக பிரிக்கும் வாக்குகளும் மாஃபா-வுக்கு மைனஸாகப் பார்க்கப்பட்டது. அ.தி.மு.க-வில் நிலவிய கோஷ்டிப் பூசலும் அந்தக் கட்சியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களாகப் பார்க்கப்பட்டன. போதிய சாலை வசதிகள் இல்லாதது, கொரோனா காலகட்டத்தில் மக்களைச் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் பாண்டியராஜனுக்கு பயத்தை ஏற்படுத்துவதாக இருந்தன.

பாண்டியராஜனின் அச்சம் வாக்கு எண்ணிக்கையிலும் வெளிப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பின்னடைவில் இருந்தார் பாண்டியராஜன். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக-வின் நாசர் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தார். பிரசாரத்தின்போது கூறப்பட்டதுபோலவே நாசர் கடும் போட்டியை வாக்கு எண்ணிக்கையிலும் காட்டினார். தொடர்ச்சியாக எண்ணப்பட்ட அனைத்துச் சுற்றுகளிலும் முன்னிலையிலேயே நாசர் இருந்தார்.

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

இறுதியில், பாண்டியராஜனை 54,695 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார் நாசர். அதிமுக-வின் அமைச்சர்களைத் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பது இந்தத் தேர்தலில் திமுக-வின் மிக முக்கியமான திட்டமாகப் பார்க்கப்பட்டது.  அதை நிகழ்த்திக் காட்டினார் நாசர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு