Published:Updated:

`அந்த 2 கடிதங்கள் எங்கே?’ - மகாராஷ்டிரா வழக்கில் நடந்த காரசார விவாதம்!

மகாராஷ்ட்ராவில் திடீரென பட்னாவிஸ் பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன.

மகாராஷ்டிரா அரசியல்
மகாராஷ்டிரா அரசியல்

மகாராஷ்ட்ராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி அமையும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அங்கு நடந்துவந்த குடியரசுத் தலைவர் ஆட்சி நேற்று திடீரென வாபஸ் பெறப்பட்டு பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் என்.சி.பி-யின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

சரத் பவார்
சரத் பவார்

``அஜித் பவார் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்தது எனக்குத் தெரியாது. அது அவரின் தனிப்பட்ட முடிவு. அதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் யாரும் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிக்கவில்லை” எனத் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்திருந்தார். இது மாகாராஷ்ட்ரா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

என்.சி.பி-யின் சட்டமன்றத் தலைவராக இருந்த அஜித் பவார் 54 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் வழங்கியதால் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், என்.சி.பி-யைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே அஜித் பவாருக்கு ஆதரவு அளிப்பதாகவும் மீதமுள்ள 45-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சரத்பவாருக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இந்நிலையில் எதன் அடிப்படையில் பட்னாவிஸை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தார் என்றும் அதை எதிர்த்தும் சிவசேனா- காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து நேற்று இரவு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. அந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து இரவே விசாரிக்க வேண்டும் என்றும் நாளையே (இன்று) பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அந்த வழக்கு இன்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரமணா, சஞ்சீவ் கண்ணா, அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிவசேனா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் காங்கிரஸ் மற்றும் என்.சி.பி சார்பில் அபிஷேக் மனு சிங்வியும், பா.ஜ.க சார்பில் முத்த வழக்கறிஞர் முகுல் ரோஹட்கியும் வாதாடினர்.

கபில் சிபல்
கபில் சிபல்

இதில் முதலில் வாதத்தைத் தொடங்கிய கபில் சிபல், “ஞாயிற்றுக் கிழமையான இன்று வழக்கு விசாரணை நடத்தும் நிலைக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். ஆனால், இதற்கு நாங்கள் மட்டுமே காரணம் இல்லை” எனத் தெரிவித்து தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி பூஷன், “ஆதரவு கடிதம் எப்போது எங்கு ஆளுநரிடம் வழங்கப்பட்டது? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு விளக்கம் அளித்த கபில் சிபல், “அந்தக் கேள்விக்கான பதில் எங்களுக்குத் தெரியாது, ஏன் யாருக்குமே அது பற்றித் தெரியாது. என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன என்பதும் தெரியாது. ஒருவேளை அவர்களிடம் முழு பெரும்பான்மை இருந்தால் அதை நிரூபிக்கட்டும். அப்படி இல்லையென்றால் நாங்கள் ஆட்சியமைக்க வழிவிட வேண்டும்” எனப் பேசினார். தொடர்ந்து 2018-ம் ஆண்டு நடந்த கர்நாடக அரசியலைச் சுட்டிக்காட்டி அதேபோல் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். அப்போதுதான் மகாராஷ்ட்ரா மக்களுக்கு அரசின் மீது முழு நம்பிக்கை வரும் என வாதாடினார்.

துஷார் மேத்தா
துஷார் மேத்தா

இதற்கிடையில், மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ``எனக்கு நள்ளிரவில்தான் வழக்கு வழங்கப்பட்டது. அதனால்தான் நான் இன்று வந்தேன். எனக்கு எந்தக் குறிப்புகளும் வழங்கப்படவில்லை நான் யாருக்காக வாதாட வேண்டும் என்பதும் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, “மகாராஷ்ட்ரா ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த கடிதம் மற்றும் பட்னாவிஸ் அளித்த எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் ஆகியவற்றை நாளை காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இவரை அடுத்துப் பேசிய காங்கிரஸ் - என்.சி.பி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “நேற்று இரவு என்.சி.பி எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மொத்தம் உள்ள 54 எம்.எல்.ஏ-க்களில் 41 பேர் அஜித் பவார் நீக்கத்துக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளனர். எனவே, மகாராஷ்ட்ரா ஆட்சியை முடிவு செய்ய சிறந்த வழி பெரும்பான்மையை நிரூபிப்பது மட்டுமே. ஒருவேளை நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால் அது பெரிய அளவிலான குதிரை பேரம் நடப்பதுக்கு வழி வகுக்கும். இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

பதவியேற்பு
பதவியேற்பு

இறுதியாகப் பேசிய பா.ஜ.க தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி, ``காங்கிரஸ், சிவசேனா, என்.சி.பி ஆகிய கட்சிகள் கடந்த சில நாள்களாக மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்க தங்கள் சுண்டு விரலைக்கூடத் தூக்கவில்லை. ஆனால், தற்போது அந்த மூன்று பேரும் இல்லாத இன்னொரு கட்சி ஆட்சியமைத்துள்ளது. பெரும்பான்மையை நிருப்பிப்பதை தவிர்க்க முடியாது என்றாலும் ஆளுநரின் முடிவில் நீதித்துறை தலையிட்டு மறு ஆய்வு செய்ய உத்தரவிட முடியாது. ஆளுநர் தனக்கு முழு சம்மதம் இருந்ததாலே ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இது அவரின் தனிப்பட்ட விருப்பம்” எனப் பேசினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் போதுமான அறிக்கைகள் இல்லாததால் அதை நாளை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை நாளை வரை ஒத்திவைத்துள்ளனர்.