அலசல்
சமூகம்
Published:Updated:

தாக்குப்பிடித்த தாக்கரே! - ஒருவழியாகக் கடந்தது ஓராண்டு...

உத்தவ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
News
உத்தவ் தாக்கரே

அர்னாப் கைதுசெய்யப்பட்டதற்கு பா.ஜ.க உள்ளிட்ட வலதுசாரிகள் உத்தவ் அரசைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

கொரோனா பாதிப்புகள், பொருளாதார இழப்புகள், கூட்டணிக் கட்சிகளின் அழுத்தங்கள், பா.ஜ.க-வின் அரசியல் நெருக்கடிகள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு ஓராண்டு ஆட்சியை நிறைவுசெய்யவிருக்கிறார் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே. ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்ற நிலையில் முதல்வர் நாற்காலிக்கு வந்த தாக்கரே, அரசியல் சவால்களையும், கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளையும் எப்படிச் சமாளிக்கிறார்?

கடந்த 2019, நவம்பர் 28-ம் தேதி உத்தவ் தலைமையிலான ‘மகாராஷ்டிரா வளர்ச்சிக் கூட்டணி’ ஆட்சி அமைந்தது. முன்னதாக, சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், பா.ஜ.க-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக்கப்பட்டு, பிறகு அவர் பதவி விலக நேரிட்டது. பிறகு தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) தலைவரான சரத் பவாரின் பெரும் முயற்சியால் சிவசேனை, என்.சி.பி., காங்கிரஸ் ஆகிய கட்சிகளைக்கொண்டு உத்தவ் தலைமையில் கூட்டணி ஆட்சி உருவானது. பொதுவாகவே மத அரசியலும், மொழி அரசியலும், இன அரசியலும் மேலோங்கியிருக்கும் மகாராஷ்டிராவில், ‘மதம், சாதி, மொழிப் பாகுபாடற்ற ஆட்சியை வழங்குவோம்’ என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் மேற்கண்ட கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்தநிலையில்தான் இந்த மாத இறுதியில் ஓராண்டு ஆட்சியை நிறைவுசெய்யப்போகிறார் உத்தவ். இந்த ஓராண்டுக் காலத்தில் சொல்லிக்கொள்ளும்படி சாதனைகள் எதையும் அவர் செய்யவில்லையென்றாலும், ஓராண்டு தாக்குப்பிடித்ததே பெரும் சாதனைதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தாக்குப்பிடித்த தாக்கரே! - ஒருவழியாகக் கடந்தது ஓராண்டு...

பங்கு மார்க்கெட், அரசியல் அதிரடிகள், பாலிவுட் பரபரப்புகள் என எப்போதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் மகாராஷ்டிரா மாநிலம், தற்போது ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி கைது நடவடிக்கை மூலமாக மீண்டுமொரு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அர்னாப் கைதுசெய்யப்பட்டதற்கு பா.ஜ.க உள்ளிட்ட வலதுசாரிகள் உத்தவ் அரசைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதற்கு முன்பாக, விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை மும்பை மாநகராட்சி இடித்த விவகாரத்திலும், விமர்சனத்துக்குள்ளானது உத்தவ் அரசு.

ஆட்சி நிர்வாகத்தில் அனுபவ மில்லாத உத்தவ், பெரும் தயக்கத்துடனேயே முதல்வர் பதவியை ஏற்றார். ஆட்சிக்கு வந்த ஒருசில மாதங்களில், கொரோனா பெருந்தொற்று வந்துவிட்டது. பொருளாதார இழப்புகள் உட்பட கடுமையான இழப்புகள் ஏற்பட்டன. ‘விரைவில் ஆட்சி கவிழ்ந்துவிடும்’ என்றெல்லாம் பா.ஜ.க-வினர் அச்சுறுத்தினர். இவையெல்லாம் போதாதென்று, தனது கூட்டணி ஆட்சியில் அங்கம்வகிக்கும் என்.சி.பி., காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் அழுத்தங்களும் உத்தவ்வுக்கு பெரும் தலைவலியாக மாறிப்போனது. இதை முன்வைத்துத்தான் சில நாள்களுக்கு முன்னர், ‘எதிர்காலத்தில் தனித்து ஆட்சியமைக்க வேண்டும்’ என்று தனது கட்சியினரிடம் பேசினார் உத்தவ்.

என்.சி.பி தலைவர்களில் ஒருவரும் சிறுபான்மை விவகாரங்கள்துறை அமைச்சருமான நவாப் மாலிக், ‘கல்வி மற்றும் வேலைவாய்ப்பு களில் இஸ்லாமியர்களுக்கு ஐந்து சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்’ என்று திடீரென சட்டமன்றத்தில் அறிவித்தார். இது, உத்தவ்வுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அப்படியொரு திட்டம் அரசிடம் இல்லை என்று மறுக்க வேண்டிய நிலை முதல்வருக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் அமைச்சர்களோ, ‘உத்தவ் தாக்கரே எங்களை ஓரங்கட்டு கிறார்; முதல்வரைச் சந்திக்க முடிவதில்லை’ என்று குமுறினார்கள். என்.சி.பி கட்சியுடன் உரசல்கள் இருந்தாலும், அந்தக் கட்சியின் தலைரும், பழுத்த அரசியல்வாதியுமான சரத் பவாரின் ஆலோசனையுடன் அதிருப்தியாளர்களைச் சரிக்கட்டினார் உத்தவ்.

தாக்குப்பிடித்த தாக்கரே! - ஒருவழியாகக் கடந்தது ஓராண்டு...

இதை முன்வைத்தும் சர்ச்சைகள் கிளம்பின. ‘உத்தவ் ஆட்சியின் ரிமோட்டாக சரத் பவார் செயல்படுகிறார், ஆட்சியில் சரத் பவாரின் கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது’ என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனாலும் விமர்சனங்களைப் பொருட் படுத்தாத உத்தவ், சரத் பவாரின் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்ந்து நடத்திச் செல்வ திலும், பா.ஜ.க-வைத் தீவிரமாக எதிர்ப்பதிலும் முனைப்புக் காட்டிவருகிறார். ஜி.எஸ்.டி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசைச் சரமாரியாக விமர்சிக்கிறார். பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான அகமதாபாத் – மும்பை புல்லட் ரயில் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறார். ‘உத்தவ் அரசை மத்திய பா.ஜ.க அரசு கலைத்துவிடும்’ என்ற குரல்கள் அவ்வப்போது எழும் நிலையில், ‘முடிந்தால் என் ஆட்சியைக் கவிழ்த்துப்பாருங்கள்’ என்று சவால்விடுகிறார்.

ஆனால், ஒன்று... இன்றைக்கு இப்படியெல்லாம் பா.ஜ.க-வுக்கு உத்தவ் சவால்விட்டாலும், இவர்கள் இருதரப்பினரும் நீண்டகாலப் பங்காளிகளாக இருந்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. இன்றைக்கு உத்தவ்வுடன் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் செயல்படும் சரத் பவாரும் உத்தவ்வுமே கடந்த காலங்களில் அரசியல் களத்தில் எதிரிகளாக இருந் தவர்கள்தாம். கொள்கைக்கு இங்கு இடமில்லை. அதிகாரம் மட்டுமே இவர்களின் ஒரே அஜெண்டா!