Published:Updated:

மகாராஷ்டிரா அரசியல் பரபரப்பில் ஓர் ஆச்சர்யம்... மக்களுடன் நிற்கும் ஒரேயொரு எம்.எல்.ஏ!

மகாராஷ்டிரா அரசியலில், குதிரை பேரத்துக்குப் பயந்து நட்சத்திர ஹோட்டல்களில் எம்.எல்.ஏ-க்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் சூழலில், ஒரு எம்.எல்.ஏ மட்டும் மக்களுடன் மக்களாக இருக்கிறார்.

மகாராஷ்டிரா எம்.எல்.ஏ வினோத் நிகோலே
மகாராஷ்டிரா எம்.எல்.ஏ வினோத் நிகோலே

ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் மகாராஷ்டிராவை நோக்கியே இருக்கிறது. மகாராஷ்டிராவில், தேவேந்திர ஃபட்னாவிஸ் அவசர அவசரமாக முதல்வராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட பரபரப்பும் அதிரடிக் காட்சிகளும் இன்னும் தொடர்கின்றன. சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று காலையில் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 2018-ல் நடந்த விவசாயிகள் பேரணி
மகாராஷ்டிராவில் 2018-ல் நடந்த விவசாயிகள் பேரணி

நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்; அதை ரகசியமாக நடத்தக்கூடாது; தொலைக்காட்சியில் நேரலை செய்ய வேண்டும்; சட்டமன்றத்தில் மூத்த உறுப்பினர் ஒருவரை இடைக்கால சபாநாயகராக நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில், தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் விலைபோய்விடாமல் பாதுகாக்கவேண்டிய நிர்பந்தம் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஊசலாட்டத்தில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க வலைவீசிப் பிடித்துவிடும் என்ற அச்சத்தில், தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இந்தக் கட்சிகள் தங்கவைத்துள்ளன.

2018-ல் நடந்த விவசாயிகள் பேரணியில்...
2018-ல் நடந்த விவசாயிகள் பேரணியில்...

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர், நட்சத்திர ஹோட்டல் அழைப்பை நிராகரித்துவிட்டு, மக்களுடன் மக்களாக நின்றுகொண்டிருக்கிறார். 288 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட மகாராஷ்டிராவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரேயொரு எம்.எல்.ஏ இருக்கிறார். தகாணு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த எம்.எல்.ஏ-வின் பெயர், வினோத் நிகோலே.

மகாராஷ்டிராவின் தானே - பல்கர் மாவட்டங்களின் ஏழு வட்டங்களில் உள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று (நவ. 25) பேரணியாகச் சென்று தகாணு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அந்தப் பகுதியில் பெய்த கனமழையால் ஏராளமான பயிர்கள் நாசமடைந்துள்ளன. எனவே, விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு தர வேண்டுமென வலியுறுத்தியே விவசாயிகள் அந்தப் போராட்டத்தை நடத்தினர்.

அதில், எம்.எல்.ஏ வினோத் நிகோலேவும் பங்கேற்றார். எம்.எல்.ஏ -க்கள் எல்லாம் மும்பை நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருக்கும் நேரத்தில், இவர் விவசாயிகளுடன் வந்து போராட்டம் நடத்திக்கொண்டிருந்ததை தகாணு மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.

நட்சத்திர ஹோட்டலுக்கு வருமாறு வினோத் நிகோலே-வுக்கும் அழைப்பு வந்ததாக, அந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரான அசோக் தாவ்லே தெரிவித்தார். “சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் தலைவர்களும் என்னை அணுகினார்கள். எங்கள் கட்சியின் தகாணு தொகுதி எம்.எல்.ஏ -வான வினோத் நிகோலேயையும் அணுகினார்கள்.

வினோத் நிகோலே
வினோத் நிகோலே

மற்ற எம்.எல்.ஏ-க்களுடன் வந்து ஏதேனும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கிக்கொள்ளுங்கள் என்று வினோத் நிகோலேயிடம் சொன்னார்கள். அது எங்களுக்குத் தேவையில்லை என்று அவர்களிடம் சொல்லிவிட்டோம். மேலும், எங்கள் கட்சி எம்.எல்.ஏ-வை எப்படிப் பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்” என்றார் அசோக் தாவ்லே.

வினோத் நிகோலே-வின் பின்னணி ஆச்சர்யங்கள் நிறைந்தது. ஏழைக் குடும்பத்தில் பிறந்த வினோத் நிகோலே, வடபாவ் மற்றும் தேநீர்க் கடை வைத்திருந்தவர். வடபாவ் என்பது மராத்தியர்களின் பிரதான சிற்றுண்டி உணவு. உருளைக்கிழங்கை வேகவைத்து அதனுடன் சட்னி , மிளகாய் போன்றவற்றை இணைத்து உண்ணும் உணவு வகை. அந்த வியாபாரம்தான் வினோத் நிகோலேவுக்கு வாழ்வாதாரமாக இருந்தது.

வினோத் நிகோலே
வினோத் நிகோலே

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, மார்க்சியக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் சேர்ந்துள்ளார். பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, அந்தக் கட்சியின் முழுநேர ஊழியராகிவிட்டார். கடந்த ஆண்டு மும்பையை நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாகச் சென்ற இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் இவர்.

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், தகாணு தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து நின்ற பா.ஜ.க வேட்பாளரான பாஸ்கல் தனரே, ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க வேட்பாளரான பாஸ்கல் தனரே, ஒரு கோடீஸ்வரர். ஆனால், மகாராஷ்டிராவில் தற்போதைய எம்.எல்.ஏ-க்களில் வினோத் நிகோலே தான் மிகவும் ஏழையான எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது. பால்கார் மாவட்டத்தில் உள்ள தகாணு, ஒரு பழங்குடியினர் தொகுதி. புகழ்பெற்ற பழங்குடியின மக்களின் வொர்லி எழுச்சி நடைபெற்ற பகுதியில் இது அமைந்துள்ளது.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 2005-ல் சேர்ந்தேன். பிறகு, கட்சியின் முழுநேர ஊழியராக ஆனேன். அப்போது எனக்கு கட்சியிலிருந்து மாதம் ரூ.500 கொடுத்தார்கள். இப்போது அது ரூ.5,000 ஆகியிருக்கிறது. என் மனைவி உள்ளூர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கிறார். அவருக்கும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு ஊதியம் வருகிறது. இதில்தான் நாங்கள் குடும்பத்தை நடத்திவருகிறோம்.

அதனால்தான், நான் வங்கிக் கணக்கு எதுவும் தொடங்க வேண்டிய தேவையில்லாமல் இருந்தது. நான் வேட்பாளராகப் போட்டியிட தீர்மானிக்கப்பட்டபோதுதான், வங்கிக் கணக்கு தொடங்கினேன்” என்கிறார் வினோத் நிகோலே.

`வாக்குறுதி கொடுக்கவில்லை, ஆனாலும் காத்திருந்தோம்!’- முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பட்னாவிஸ்