Published:Updated:

அடுத்தடுத்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள்! - என்ன நடக்கிறது மகாராஷ்டிராவில்?

சரத் பவார் - உத்தவ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
சரத் பவார் - உத்தவ் தாக்கரே

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியதாக ஒரு கடிதம் வெளியானது.

அடுத்தடுத்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள்! - என்ன நடக்கிறது மகாராஷ்டிராவில்?

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியதாக ஒரு கடிதம் வெளியானது.

Published:Updated:
சரத் பவார் - உத்தவ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
சரத் பவார் - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மாநிலத்தில், ஆளும் சிவசேனா கூட்டணி அரசைக் கவிழ்த்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு தீவிரமாகக் காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவருகிறது பா.ஜ.க. அதன் பழைய முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், அதிகாரிகளின் துணையுடன் பா.ஜ.க மேற்கொள்ளும் புதுப்புது முயற்சிகளால், அந்த மாநில அரசியலில் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணையுடன் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆட்சி நடத்திவருகிறார். சமீபத்தில் சிவசேனாவின் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சி தோல்வியில் முடியவே... அடுத்ததாக கூட்டணிக் கட்சிகளுக்குள் கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்தது பா.ஜ.க ‘மகாராஷ்டிரா அரசுக்குக் கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக்கொண்டால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை ஜனாதிபதி ஆக்குகிறோம்’ என்று பேச்சுவார்த்தை நடந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. ஆனாலும், சிவசேனா கூட்டணியில் பா.ஜ.க-வால் எந்த விரிசலையும் ஏற்படுத்த முடியவில்லை.

இப்படி அரசியல்ரீதியான முயற்சிகளுக்குப் பலன் கிடைக்காத நிலையில்தான், அதிகாரிகளின் துணையுடன் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகக் கொந்தளிக்கிறது மகாராஷ்டிராவின் ஆளுங்கட்சி. அதை நிரூபிக்கும் வகையில் சில சம்பவங்களும் நடந்துள்ளன.

பிப்ரவரி 24-ம் தேதி நள்ளிரவில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அருகில் ஜெலட்டின் குச்சிகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து, பிரச்னையை சரியாகக் கையாளவில்லை என்று மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் பிரச்னை முடிவுக்கு வரவில்லை... இந்த காரை நிறுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு மும்பை குற்றப்பிரிவு என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் சச்சின் வாஸும் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். இதற்கிடையே அந்த காரின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கடலில் மிதந்தது மக்களை மேலும் திகிலடைய வைத்தது. இந்த வழக்கை மாநில தீவிரவாதத் தடுப்புப்படை விசாரித்துவந்த நிலையில், அவசர அவசரமாக என்.ஐ.ஏ கையில்லெடுத்துக்கொண்டதுதான் இந்த விவகாரத்தின் அடுத்த ட்விஸ்ட். அதன் பிறகுதான் பல்வேறு வில்லங்கங்கள் விளையாட ஆரம்பித்தன...

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியதாக ஒரு கடிதம் வெளியானது. ஆனால், அதில் அவரது கையெழுத்து இல்லை. ‘மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக், குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியான சச்சின் வாஸிடம் மும்பையிலுள்ள பார் மற்றும் ரெஸ்டாரன்ட்களிலிருந்து மாத மாமூலாக 100 கோடி ரூபாயை வசூலித்துக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தினார்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்தக் கடிதத்தில் தன்னைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் பொய் என்று மறுத்தும், முன்ஜாமீன் கேட்டும் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடினார் சச்சின் வாஸ். முன்ஜாமீனை மறுத்த உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது மாநில அரசு. ஆனால், வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது உச்ச நீதிமன்றம்.

அடுத்தடுத்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள்! - என்ன நடக்கிறது மகாராஷ்டிராவில்?

இந்தக் குற்றச்சாட்டை அடுத்து அமைச்சர் அனில் தேஷ்முக் பதவி விலகினார். இன்னொரு பக்கம் மகாராஷ்டிரா புலனாய்வுத்துறை டி.ஜி.பி-யாக இருந்த ரேஷ்மி சுக்லா, ‘போலீஸ் அதிகாரிகளின் இடமாறுதலில் அரசியல் இடைத்தரகர்களின் குறுக்கீடு இருந்தது’ என்று புதிய குற்றச்சாட்டை முன்வைத்து, அதிகாரிகளிடம் அரசியல்வாதிகள் பேசிய ஆடியோக்களை வெளியிட ஆடிப்போனது மும்பைக் காவல்துறை!

ஆனாலும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் இவையெல்லாம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பொதுமக்களிடமும் பெரியளவில் தாக்கம் ஏற்படவில்லை. குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையிலும் முன்னேற்றம் இல்லை; அனில் தேஷ்முக்கை அவர்களால் கைது செய்யவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மொத்தத்தில் பா.ஜ.க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாகவே சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதற்கிடையே, சபாநாயகராக இருந்த நானா பட்டோலே, மாநில காங்கிரஸ் தலைவரானதால் சபாநாயகர் பொறுப்பிலிருந்து விலகினார். ஒரு மாதமாகியும் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. புதிய சபாநாயகர் தேர்தலை நடத்தினால், அதிலும் உள்ளடி வேலைகளை செய்து பா.ஜ.க குளிர்காய்ந்துவிடுமோ என்ற அச்சம் ஆளும் கூட்டணிக்கு இருக்கிறது. அதனால்தான் பட்ஜெட் கூட்டத்தொடரைக்கூட சபாநாயகர் தேர்தலை நடத்தாமலேயே சிவசேனா முடித்திருக்கிறது.

மனம் தளராமல் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறது பா.ஜ.க. அதன் பழைய பங்காளி உத்தவ் தாக்ரே ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கொண்டே கடத்துகிறார்! என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism