Published:Updated:

மகாராஷ்டிரா... நெருங்கும் மாநகராட்சித் தேர்தல்... ஆளும் கூட்டணியை குறிவைக்கும் டெல்லி பா.ஜ.க!

சரத் பவார் - உத்தவ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
சரத் பவார் - உத்தவ் தாக்கரே

முன்னதாக தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள்மீது கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்கு பதிவுசெய்தது.

மகாராஷ்டிரா... நெருங்கும் மாநகராட்சித் தேர்தல்... ஆளும் கூட்டணியை குறிவைக்கும் டெல்லி பா.ஜ.க!

முன்னதாக தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள்மீது கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்கு பதிவுசெய்தது.

Published:Updated:
சரத் பவார் - உத்தவ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
சரத் பவார் - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு பதவி ஏற்றதிலிருந்தே மத்திய விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகியவை ஆளும் தரப்பை குறிவைத்துத் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த மாநிலத்தில் மும்பை உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கும் சூழலில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்களை மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டுக் குறிவைப்பதாகச் சர்ச்சை வெடித்துள்ளது.

மும்பை மாநகராட்சியைக் கடந்த 25 வருடங்களாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது சிவசேனா. 2017 உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் சிவசேனா இருந்தது. அந்தத் தேர்தலில் சிவசேனா 84 வார்டுகளிலும், பா.ஜ.க 82 வார்டுகளிலும் வெற்றிபெற்றன. இருந்தாலும், மாநகராட்சியின் முக்கியப் பதவிகளில் பங்கு கேட்காமல் சிவசேனாவுக்கு ஆதரவு அளித்தது பா.ஜ.க. இந்த நிலையில்தான், 2019 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க - சிவசேனா கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு சிவசேனா ஆட்சியமைத்தது; உத்தவ் தாக்கரே முதல்வரானார். அதன் பிறகுதான் அமலாக்கப் பிரிவும், சி.பி.ஐ-யும் ஆளும் தரப்புக்கு எதிராக ஏவப்படுவதாகக் கூறப்படுகிறது.

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

கடந்த 2021-ல் பா.ஜ.க ஆதரவு ஐ.பி.எஸ் அதிகாரியான ரேஷ்மி சுக்லா, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ஆகியோர் அப்போதைய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது லஞ்சக் குற்றச்சாட்டு சுமத்தியதைத் தொடர்ந்து, அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முக்கிய அமைச்சர் நவாப் மாலிக்கை அமலாக்கப் பிரிவு கைதுசெய்திருக்கிறது. மும்பை குர்லாவில் தனது வீட்டுக்கு அருகிலிருந்த மூன்று ஏக்கர் நிலத்தை 1999-ம் ஆண்டு மார்க்கெட் விலையைவிடக் குறைந்த விலைக்கு தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்கரிடமிருந்து நவாப் மாலிக் வாங்கியிருக்கிறார் என்பதுதான் அமலாக்கப் பிரிவின் குற்றச்சாட்டு.

முன்னதாக தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகள்மீது கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு ஏஜென்சி வழக்கு பதிவுசெய்தது. தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சிறையிலிருக்கும் தாவூத் இப்ராஹிம் சகோதரர் கேஷ்கர் மற்றும் டோங்கிரி பகுதியில் வசிக்கும் தாவூத் சகோதரியின் மகன்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் கிடைத்த தகவலுக்குப் பிறகே அமைச்சர் நவாப் மாலிக் பிப்ரவரி 23-ம் தேதி கைதுசெய்யப்பட்டார் என்கிறது அமலாக்கப் பிரிவு. நம்மிடம் பேசிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், ‘‘தாவூத் சகோதரியிடமிருந்து அமைச்சர் நவாப் மாலிக் நிலம் வாங்கியது குறித்து, கடந்த ஆண்டுதான் எங்களுக்குத் தெரியவந்தது. உண்மையில், அந்த நிலம் முனிரா பிளம்பர் என்பவருக்குச் சொந்தமானது. அவரை மிரட்டி தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்க்கர் நிலத்தைக் கையகப்படுத்தியிருக்கிறார். அவரிடமிருந்து நவாப் மாலிக் வாங்கியது தெரியவந்ததால் கைதுசெய்தோம்’’ என்றார்.

மகாராஷ்டிரா... நெருங்கும் மாநகராட்சித் தேர்தல்... ஆளும் கூட்டணியை குறிவைக்கும் டெல்லி பா.ஜ.க!

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பிரஜக்த் தன்புரேவையும் அமலாக்கப் பிரிவு குறிவைத்துள்ளது. சமீபத்தில் அவரது 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்த அமலாக்கப் பிரிவு, அவரைக் கைதுசெய்யவும் நடவடிக்கை எடுத்துவருகிறது. மும்பை மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவரான சிவசேனா கட்சியைச் சேர்ந்த யஷ்வந்த் ஜாதவ், அவரின் மனைவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகக் குற்றம்சாட்டி, அவர்களின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி, ஏராளமான ஆவணங்களை அள்ளியிருக்கிறது. இன்னொரு பக்கம் புனே நகரின் அருகே லவாசா மலை நகரம் உருவாக்கப்பட்டதில் நடந்த முறைகேட்டில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரைச் சிக்கவைக்கவும் முயற்சிகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு வழிவகுத்தவர் சரத் பவார் என்பதால், அவர்மீதான பிடி மேலும் இறுகும் என்கிறார்கள் இந்த விவகாரத்தை உற்று கவனிக்கும் அரசியல் பார்வையாளர்கள். இப்படியான சூழலில்தான் மகராஷ்டிராவில் அடுத்த சில மாதங்களில் மாநகராட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது.

மனைவியுடன் யஷ்வந்த் ஜாதவ்
மனைவியுடன் யஷ்வந்த் ஜாதவ்

சிவசேனாவின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் நீலம் கோரேவிடம் நாம் பேசியபோது, ‘‘மற்ற மாநிலங்களில் எம்.எல்.ஏ-க்களை வளைத்து குறுக்குவழியில் ஆட்சியைப் பிடித்ததுபோல மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வால் செய்ய முடியவில்லை. அதனாலேயே, மத்திய விசாரணை ஏஜென்சிகளையும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளையும் வைத்து, பழிவாங்கல் போக்கைக் கையாள்கிறது மத்திய பா.ஜ.க அரசு. வரவிருக்கும் மாநகராட்சித் தேர்தலில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. அப்படிப் போட்டியிட்டால் பா.ஜ.க-வுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும். இதுவும் பா.ஜ.க-வின் பழிவாங்கல் நடவடிக்கைக்கு ஒரு காரணம்” என்றார். இதை மறுக்கும் மும்பை பா.ஜ.க தலைவர் ஆசிஷ் ஷெலார் நம்மிடம், “குற்றப் பின்னணி கொண்ட அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதைப் பழிவாங்கல் நடவடிக்கை என்று சொல்ல முடியாது. சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியால் மகாராஷ்டிரா மாநகராட்சித் தேர்தலில் எங்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது. சொல்லப்போனால், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே இங்கும் அரசியல் நிலவரம் தலைகீழாக மாறும்... பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

பிரஜக்த் தன்புரே
பிரஜக்த் தன்புரே

ஆமாம்... மகாராஷ்டிராவில் மாநில ஆட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவற்றைக் கைப்பற்றும் கனவுடன் செயல்படும் பா.ஜ.க-வுக்கு வெற்றி கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!