Published:Updated:

கேரளா, பஞ்சாப்பைத் தொடர்ந்து மகாராஷ்டிரா!- குடியுரிமை சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை அடுத்து, மகா விகாஸ் அகாதி கூட்டணி அமைந்த மகாராஷ்டிரா மாநிலத்திலும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு, வாக்கெடுப்புகளின் மூலம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து டிசம்பர் 12 ஆம் தேதி ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று, சட்டமாகவும் முழு வடிவம் பெற்றது. நாடு முழுக்கப் பலர் இதற்கு எதிராகப் போராடி வந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி இரவோடு இரவாக குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப்படுவதாக அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறிய நாள் முதலாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். டிசம்பர் 16ஆம் தேதி முதல்வர் பினராயி விஜயனும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக ஒன்றுகூடி ஆர்பாட்டம் நடத்தினர். இதற்கிடையில் கேரளா சட்டமன்றத்தில் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டத்திருத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றது.

கேரள கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவே கருத்துத் தெரிவித்தது. முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் பஞ்சாபில், பல்வேறு போராட்டங்களை குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடத்தி வந்துள்ளனர் அக்கட்சியினர். அதன் நீட்சியாக இரண்டு நாள்கள் கூடிய சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை அம்மாநிலம் நிறைவேற்றியது. சட்டம் அமலுக்கு வந்தபின்பு எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றிய முதல் மாநிலமாக பஞ்சாப் திகழ்கிறது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

பா.ஜ.க அரசு முழு மனதோடு விடாப்பிடியாக நிற்கும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலமும் இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடந்து வரும் மகாராஷ்டிரா அரசியலில் தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸும் கூட்டணியில் இருந்து வருகின்றன. மகா விகாஸ் அகாதி என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டணி சமீபகாலமாகவே பா.ஜ.க-விற்கு எதிராக பலம் சேர்த்து வருகிறது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் உறுப்பினர் ராஜூ வாக்மாரே, "எங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர் பாலசாகேப் தோரட், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான தன் மனப்பான்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் இச்சட்டத்திருத்தை எதிர்ப்பதாகக் கூறியுள்ளார். எந்த அளவு குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டிய சூழல் உருவாகுகிறதோ, அந்த அளவில் விரைந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்" என்று கூறியுள்ளார்.

ஒருவேளை தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், எதிர்ப்பை வெளிக்காட்டிய மூன்றாவது மாநிலமாக மகாராஷ்டிரா திகழும். இதன்மூலம் இந்தச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு எடுக்கப்படலாம். இதற்கு வலுசேர்க்கும் விதமாக, மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார்.

கபில் சிபல்
கபில் சிபல்

அதில், ``குடியுரிமை சட்டத்திருத்தத்தை என்னளவில் அரசியலமைப்பிற்கு விரோதமாகக் கருதுகிறேன். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள செய்வதற்கு முழு உரிமை உண்டு!. ஒருவேளை உச்சநீதிமன்றத்தால் இது அரசியலமைப்புக்கு உட்பட்டது என்ற அறிவிப்பு வெளியானால், நிலமை இன்னும் மோசமாகிவிடும். நம்முடைய போராட்டம் தொடர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே கேரளா அரசு, இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதற்கு பஞ்சாப் அரசு ஒத்துழைப்பு நல்குவதாக, அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் கூறியிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு