Published:Updated:

மராத்தி கட்டாயம்... மகாராஷ்ட்ரா அரசு அதிரடி!

ஆ.பழனியப்பன்

மகாராஷ்ட்ராவில் அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழியைக் கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கையில் அந்த மாநில அரசு இறங்கியுள்ளது. இதை, மராத்தி மொழிக்கான அமைச்சர் வினோத் தவ்டே தெரிவித்துள்ளார்.

தேவேந்திர ஃபட்னாவிஸ்
தேவேந்திர ஃபட்னாவிஸ்

மகாராஷ்ட்ராவில் பி.ஜே.பி-யைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. அந்த மாநிலத்தில், சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழியைக் கட்டாயமாக்குவதற்கான சட்டவரைவு ஒன்றை உருவாக்குவதற்குக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. மகாராஷ்ட்ரா மாநில அரசால் அமைக்கப்படவிருக்கும் அந்தக் குழுவில் மாநில அமைச்சர்கள், கல்வியாளர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

மராத்தி எழுத்துரு
மராத்தி எழுத்துரு

பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் மற்றும் உள்ளூர் மொழிகள் பற்றி ஆய்வுகள் மற்றும் விரிவான விவாதங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு, ஆரம்பகட்ட சட்டவரைவு உருவாக்கப்படும். ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், கல்வித்துறையின் இணையதளத்தில் அந்த வரைவு வெளியிடப்படும்.

இதுதொடர்பாக, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இரு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் மராத்தி இலக்கியவாதிகள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் மராத்தி மொழியைப் பள்ளிகளில் கட்டாயமாக்குவது, மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிப்பது, மராத்தி பள்ளிகளுக்கு அதிகாரமளிப்பது, மராத்தி மொழியைப் பிரபலமாக்குவது போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.