Published:Updated:

ஆளுநர் காத்த ரகசியம்; 24 மணிநேர `பிளான்!' - மகாராஷ்ட்ராவைப் புரட்டிய அந்த நள்ளிரவில் நடந்தது என்ன?

ஆளுநர் - பட்னாவிஸ்
ஆளுநர் - பட்னாவிஸ் ( Twitter )

மகாராஷ்ட்ராவில் பட்னாவிஸ் ஆட்சியமைப்பதற்கு முன்னதாக அந்த நள்ளிரவில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மகாராஷ்ட்ராவில் நேற்று முன் தினம் இரவு தூங்கச் சென்ற மக்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் உத்தவ் தாக்கரே தலைமையில்தான் ஆட்சி அமையும் என்ற நினைப்பிலிருந்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் சத்தம்போடாமல் அதிகாலையில் பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் என்.சி.பி-யின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே
Twitter

மகாராஷ்ட்ரா அரசியலில் இந்தத் திடீர் திருப்பம் எப்போதிலிருந்து திட்டமிடப்பட்டது, அந்த இரவில் அப்படி என்ன நடந்திருக்கும் என்பதுதான் பெரும்பாலான இந்தியர்களின் ஒரே கேள்வியாக உள்ளது. மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க ஆட்சியமைக்க வேண்டும் என முடிவெடுத்து அது வெறும் 24 மணி நேரத்தில் செயல்படுத்தப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்த ஊடகத்தின் கவனமும் சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் கூட்டணி மீது இருக்கும்போது, யாருக்கும் தெரியாமல் பக்காவாக பிளான் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சரத்பவார் மீது அதிருப்தியிலிருந்த அஜித் பவார் தனக்கான வாய்ப்புக்காக நீண்ட வருடங்களாகக் காத்துக்கொண்டிருந்துள்ளார். அது பா.ஜ.க மூலம் அவருக்குக் கிடைக்க உடனடியாக அதைப் பயன்படுத்தி துணை முதல்வராகியுள்ளார் அஜித்பவார். பா.ஜ.க அஜித்பவாருடன் நீண்ட நாள்களாகவே ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் நேற்று சிவசேனா - காங்கிரஸ் - என்.சி.பி ஆகிய மூன்று கட்சிகளும் ஆளுநரை சந்திக்கவிருந்த நிலையில் அதற்கு முன்னதாகவே தாங்கள் பதவியேற்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அஜித் பவார்
அஜித் பவார்
Twitter

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலிலிருந்துதான் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன, பிற்பகல் 3 மணியளவில் அஜித் பவார், மாகாராஷ்ட்ரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யரியைச் சந்தித்த தங்கள் கட்சியைச் சேர்ந்த 54 எம்.எல்.ஏ-க்களும் பட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிப்பதாகக் கடிதம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு இடையேயான சந்திப்பை சுமார் 20 மணி நேரம் வரை வெளியில் தெரியாமல் பாதுகாத்துள்ளார் ஆளுநர்.

ஆளுநரிடம் கடிதம் அளித்த பிறகு, எதுவும் நடக்காதது போல் தங்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்குச் சென்றுவிட்டார் அஜித். இதையடுத்து இரவு 8 மணிக்கு உத்தவ் தாக்கரேதான் அடுத்த முதல்வர் என சரத்பவார் அறிவித்தார். பின்னர், 9 மணிக்கு பட்னாவிஸ் ஆளுநரை நேரில் சந்தித்து தன் கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் அளித்து ஆட்சியமைக்க உரிமைகோரியுள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆட்சியமைப்பது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துகிறார் ஆளுநர், அதே நேரத்தில் அவரின் டெல்லி பயணமும் ரத்து செய்யப்படுகிறது.

அமித்ஷா - மோடி
அமித்ஷா - மோடி
Twitter

பதவியேற்பு முடிவான நிலையில் நள்ளிரவு 1 மணிக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்குவதற்கான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிறது. அதைப் பெற்றதும் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவசரக் காலங்களில் பயன்படுத்தப்படும் சட்டத்தைக் கையில் எடுத்து அமைச்சரவையைக் கூட்டாமலேயே, குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திரும்பப் பெறுவதற்கான பரிந்துரையை உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்புகின்றனர். இவை அனைத்தும் நடந்து முடியும்போது மணி அதிகாலை 4 மணி. பின்னர் 5 மணிக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து ஒப்புதல் கடிதம் வருகிறது.

`பட்னாவிஸின் ரகசிய சந்திப்பு; ஸ்விட்ச் ஆஃப் ஆன அஜித் பவார் போன்!- மகாராஷ்டிரா அரசியல் மாறிய பின்னணி

தொடர்ந்து அதிகாலை 5.47 மணிக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி நீக்கப்படும் மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகிறது, அந்த நேரத்தில் எல்லாம் பட்னாவிஸும் அஜித்பவாரும் ஆளுநர் மாளிகையில் உள்ளனர். பின்னர் 6 மணிக்கு யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவும் எளிமையாகவும் பதவியேற்பு விழா நடந்து முடிகிறது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பட்னாவிஸ் பதவியேற்றதாக மகாராஷ்ட்ரா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆளுநர் மாளிகையில் பட்னாவிஸின் மொத்த குடும்பமும் சில பா.ஜ.க முக்கிய தலைவர்களும் உள்ளனர். அதேபோல் அஜித் பவாருக்கு ஆதரவாக 10 எம்.எல்.ஏ-க்கள் இருந்துள்ளனர்.

பதவியேற்பு
பதவியேற்பு
Twitter

தொடர்ந்து சரிக 8.16 மணிக்குப் பிரதமர் மோடி முதல் ஆளாக முதல்வர் பதவியேற்ற பட்னாவிஸுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பின் மகாராஷ்ட்ரா அரசியலில் நேற்று முழுவதும் நடந்த சர்ச்சைகள், களேபரங்கள், குற்றச்சாட்டுகள் போன்ற அனைத்தும் அனைவரும் அறிந்ததே. இன்று பா.ஜ.க ஆட்சியமைத்ததை எதிர்ப்பு தெரிவித்து மூன்று கட்சிகள் தொடர்ந்துள்ள மனு அவசர வழக்காக எடுக்கப்பட்டு விசாரணைக்கு வரவுள்ளது. இதன் முடிவில் மகாராஷ்ட்ரா அரசியலில் இன்னும் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு