Published:Updated:

ஆளுநரைச் சந்திக்கும் பா.ஜ.க; எம்.எல்.ஏ-க்களை அழைக்கும் சிவசேனா!- உச்சத்தில் மகாராஷ்டிரா அரசியல் களம்

மகாராஷ்டிராவில் கூட்டணி வைத்து ஆட்சியமைப்பதைவிட பா.ஜ.க - சிவசேனாவுக்கு வேறு வழியில்லை. இரு கட்சிகளும் கடந்த 25 வருடங்களாகக் கூட்டணியில் உள்ளனர்.

மகாராஷ்டிரா கூட்டணி
மகாராஷ்டிரா கூட்டணி ( Twitter/@Dev_Fadnavis )

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி 13 நாள்கள் கடந்துவிட்டன. இன்னும் அங்கு ஆட்சி அமையவில்லை. மொத்தம் உள்ள 288 இடங்களில் பா.ஜ.க 105 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களையும் கைபற்றின. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வென்றன.

சிவசேனா - பா.ஜ.க
சிவசேனா - பா.ஜ.க

பா.ஜ.க - சிவசேனா கூட்டணி அரசு உடனடியாகப் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலுக்கு முன்னர் பா.ஜ.க சிவசேனா இடையே போடப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தை பா.ஜ.க மீறி, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டுக்கால முதல்வர் பதவி தர முடியாது என்றது. மாறாக அமைச்சரவையில் முக்கியப் பதவிகள் தருவோம் என்றது. ஆனால், சிவசேனா முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து சற்றும் பின்வாங்கவில்லை.

இதனிடையே சிவசேனா சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த சில நாள்களாக சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்ற பேச்சுகள் எழ, சரத் பவார் நேற்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். சிவசேனா கட்சியின் முக்கியத் தலைவர் சஞ்சய் ராவத் சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார்.

சரத் பவார்
சரத் பவார்

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பவார், ``கூட்டணி தொடர்பாக சஞ்சய் ராவத்துடன் எதுவும் பேசவில்லை. மகாராஷ்டிராவில் நடக்கும் பயிர் எரிப்பு தொடர்பாகவே நாங்கள் ஆலோசனை நடத்தினோம். மகாராஷ்டிரா அரசியலைப் பற்றிப் பேச எதுவும் இல்லை. விரைவில் அரசு அமையும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாங்களும் அதையேதான் எதிர்பார்க்கிறோம். கூட்டணி வைத்து ஆட்சியமைப்பதைவிட பா.ஜ.க - சிவசேனாவுக்கு வேறு வழியில்லை. இரு கட்சிகளும் கடந்த 25 வருடங்களாகக் கூட்டணியில் உள்ளனர். அவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் என எப்போது வேண்டுமானாலும் சேர்ந்துகொள்வார்கள்” என்றார்.

இதனால் இப்போது சரத் பவார் சொன்னதைப்போல் மகாராஷ்டிராவில் பா.ஜ.க - சிவசேனா இணைந்து ஆட்சி அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. வரும் 9-ம் தேதியுடன் தற்போதைய ஆட்சியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதாவது வரும் சனிக்கிழமைக்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். இல்லை என்றால் ஆளுநர் கையில் மாநிலத்தின் முடிவு செல்லும் சூழல்.

பா.ஜ.க - சிவசேனா கூட்டணி
பா.ஜ.க - சிவசேனா கூட்டணி

இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளதால் மகாராஷ்டிரா தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா பா.ஜ.க வின் முக்கியத் தலைவர்கள் நேற்று தேவேந்திர ஃபட்னாவிஸ்-ஐ அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது அரசியல் சூழல் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றன .

ஃபட்னாவிஸ் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் சந்திப்பு! - நிதின் கட்கரி பக்கம் திரும்பும் மகாராஷ்டிரா அரசியல்

ஆலோசனைக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில நிதித்துறை அமைச்சர் சுதிர் முன்கன்டிவார், `விரைவில் நல்ல செய்தி வரும்’ என்றார். மேலும் அவர், ``மகாராஷ்டிராவில் அரசு அமைவது தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும். மாநில பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையிலான பா.ஜ.க உறுப்பினர்கள் நாளை(இன்று) ஆளுநரை சந்திப்பார்கள். அனைத்து வகையான புலிகளையும்(சிவசேனா) பா.ஜ.கவால் பாதுகாக்கப்படும் அவர்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம். தற்போது மகாராஷ்டிராவில் விவசாயிகள் பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள். அதனால் அரசு அமைப்பதில் மேற்கொண்டு தாமதம் இருக்காது. மகாராஷ்டிரா பா.ஜ.க வுக்கு விரைவில் புதிய தலைமை அறிவிக்கப்படும். தற்போது தலைவராக இருக்கும் சந்திரகாந்த் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் இடம்பெற உள்ளார்” என்றார்.

சிவசேனா - பா.ஜ.க
சிவசேனா - பா.ஜ.க

இந்நிலையில் சிவசேனா கட்சியின் முக்கியத் தலைவரும் இந்தக் கூட்டணி விவகாரங்களில் தொடர்ந்து செயலாற்றி வருபவருமான சஞ்சய் ராவத், ``மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவது தொடர்பாக உத்தவ் தாக்கரே எந்தத் தகவலும் சொல்லவில்லை” என்றார். மேலும் பா.ஜ.க சொல்லும் நல்ல செய்தி என்பது சிவசேனா முதல்வர் பதவியேற்பதாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இன்று பா.ஜ.க ஆளுநரைச் சந்திக்கும் நிலையில், சிவசேனா தலைவர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 56 சிவசேனா உறுப்பினர்களை ஆலோசனைக்குத் தவறாமல் வரும்படி அழைத்துள்ளார். ஆளுநரைச் சந்திக்கும் பா.ஜ.க ஆட்சி அமைக்க உரிமை கோரவேண்டும். ஆட்சி அமைத்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சிவசேனா தரப்பு பேசிவருகிறது.

பா.ஜ.க -  சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

மறுபுறம் சனிக்கிழமை அமைச்சர்கள் சகிதம் பா.ஜ.க பதவியேற்கத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி பா.ஜ.க பதவியேற்றாலும் அது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் இருக்கும் பரபரப்பை எந்தவிதத்திலும்குறைக்காது என்றும் பெரும்பான்மை எண்ணிக்கையான 145 -ஐ பா.ஜ.க பெறுவது பெரும் சவாலானதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.