Published:Updated:

`78 மணிநேர பா.ஜ.க ஆட்சி; முதல்வராகும் உத்தவ் தாக்கரே!' - மகாராஷ்ட்ர அரசியலின் ஒருமாத ஃபிளாஷ்பேக்

மகாராஷ்ட்ர மாநிலத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஒருமாத காலத்துக்குப் பின்னர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே
பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்ட்ர சட்டப்பேரவைக்குக் கடந்த அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அதில், ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க, சிவசேனாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. மறுபுறம் சரத்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24-ல் அறிவிக்கப்பட்டன. அதில், பா.ஜ.க 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம், பா.ஜ.க - சிவசேனா கூட்டணிக்குக் கிடைத்துவிட்டது என்பதால், மீண்டும் அந்தக் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டது.

பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே
பட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே

தேர்தலுக்குப் பின் சிவசேனா சில கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க-வுக்கு செக் வைக்கலாம் என்று பேச்சு வாக்குப்பதிவுக்கு முன்னரே மகாராஷ்ட்ர அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், அது உண்மையானது. முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் தங்கள் கட்சிக்கு இரண்டரை ஆண்டுகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சிவசேனா முன்வைக்கவே, பா.ஜ.க ஆடிப்போனது. தேர்தலுக்கு முன்பாகவே இதுதொடர்பாக இருகட்சிகளிடையே ஒப்பந்தம் இருந்ததாக சிவசேனா சொன்னது. அதைப் பா.ஜ.க ஏற்கவில்லை. ஆனால், சிவசேனா தனது முடிவில் உறுதியாக இருக்கவே, நவம்பர் 8-ம் தேதி பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆகியோர் தனித்தனியே செய்தியாளர்களைச் சந்தித்து மாறிமாறி கடும் விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டனர். இது பா.ஜ.க - சிவசேனா கூட்டணிக்கு ஏற்கெனவே முடிவுரை எழுதப்பட்டதை வெளிச்சம்போட்டுக் காட்டியது.

தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் என்ட்ரி

பா.ஜ.க - சிவசேனா இடையிலான மோதல்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கொடுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெறும் என்றார்கள். ஆனால், இதை மறுத்த சரத்பவார், தங்கள் கட்சி எதிர்க்கட்சியாகச் செயல்படவே விரும்புவதாகத் தெரிவித்தார். தேர்தலில் தோற்றுவிட்டதால், எதிர்க்கட்சியாகவே செயல்படப்போகிறோம் என்று காங்கிரஸும் கூறியது.

உத்தவ் தாக்கரே - சரத் பவார்
உத்தவ் தாக்கரே - சரத் பவார்

ஆனால், மகாராஷ்ட்ராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதும் காட்சிகள் மாறின. ஆளுநர் பகத்சிங் கோஷியாரி, பா.ஜ.க-வை முதலிலும் அடுத்து சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முன்வராதநிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த 12-ம் தேதி மாலையில் அமல்படுத்தப்பட்டது. அதற்கடுத்த நாள்களில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை வேகமெடுத்தது. முதலில் மும்பையிலும் அடுத்து டெல்லியிலும் வரிசையாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

`தயங்கும் சரத் பவார்; மீண்டும் பா.ஜ.க?’ -மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கத் தவிக்கும் சிவசேனா

மகாராஷ்ட்ராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு 10 நாள்களுக்குப் பின்னர், மூன்று கட்சிகளும் இணைந்து புதிய அறிவிப்பை வெளியிட்டன. இதுகுறித்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்தார். உத்தவ் தாக்கரே, முதல்வராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும் அறிவித்தார்.

திடீர் திருப்பம்

தாக்கரே குடும்பத்திலிருந்து முதன்முறையாக ஒருவர் மகாராஷ்ட்ர முதல்வராக இருக்கிறார் என்று நாளிதழ்களில் அடுத்தநாள் தலைப்புச் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால், நடந்ததோ யாரும் எதிர்பாராத திருப்பம். தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணையோடு முதல்வராகப் பதவியேற்றிருந்தார் பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ். கடந்த 23-ம் தேதி அதிகாலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணைமுதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தேவேந்திர பட்னாவிஸ், பகத்சிங் கோஷ்யாரி, அஜித் பவார்
தேவேந்திர பட்னாவிஸ், பகத்சிங் கோஷ்யாரி, அஜித் பவார்

இதைச் சற்றும் எதிர்பார்க்காத சரத்பவார் ஆடிப்போனார். ஆனால், அஜித் பவார் தன்னிச்சையாகச் செயல்படுவதாக அறிவித்த அவர், பா.ஜ.க-வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித் பவாரை நீக்குவதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும், தங்கள் கூட்டணிக்கே பெரும்பான்மை பலம் இருக்கிறது என சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அறிவித்தது. அதையடுத்து எம்.எல்.ஏ-க்கள் அணிவகுப்பையும் அக்கட்சிகள் மும்பை நட்சத்திர ஹோட்டலில் நடத்தின.

`இது ஒன்றும் கோவா அல்ல;   மகாராஷ்டிரா!’- கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் அணிவகுப்பில் சரத் பவார் #WeAre162

உச்ச நீதிமன்றத்தின் தலையீடு

அதேநேரம், அரசியல் சாசன விதிகளை மீறி பா.ஜ.க ஆட்சியமைத்ததற்கு எதிராக மூன்று கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டின. மேலும், பா.ஜ.க-வை உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன. அந்தக் கட்சிகளின் முறையீட்டை அவசர வழக்காகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தை திங்கள்கிழமை விரிவாக விசாரிப்பதாகச் சொன்னது. அடுத்த நாள் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக உரிய உத்தரவு செவ்வாய்க்கிழமை (28.11.2019) பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தது.

உத்தவ் தாக்கரே, சரத் ப்வார்
உத்தவ் தாக்கரே, சரத் ப்வார்

மகாராஷ்ட்ர சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதன்கிழமை (27.11.2019) மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்தாமல் வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றும் அந்த நிகழ்வை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிப்புக் காட்டியது. இது பா.ஜ.க-வுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

பட்னாவிஸ் ராஜினாமா

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து மகாராஷ்ட்ரா துணை முதல்வர் பதவியை அஜித் பவார், ராஜினாமா செய்துவிட்டதாக நேற்று (26.11.2019) மதியம் செய்திகள் வெளியாகின. அதன்பின்னர் சிறிதுநேரத்தில் மதியம் 3.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த பட்னாவிஸ், இதை உறுதிசெய்ததுடன், தானும் பதவி விலகுவதாக அறிவித்தார். ஆதரவளிப்பதாக அஜித் பவார் கூறியபிறகே ஆட்சியமைத்ததாக பட்னாவிஸ் கூறினார். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து சொந்த காரணங்களுக்காகப் பதவி விலகுவதாக அஜித் பவார் தெரிவித்ததாக பட்னாவிஸ் தெரிவித்தார்.

ராஜினாமா கடிதம் கொடுக்கும் பட்னாவிஸ்
ராஜினாமா கடிதம் கொடுக்கும் பட்னாவிஸ்

அஜித் பவார், பதவி விலகியதை அடுத்து ஆட்சியமைக்கத் தேவையான போதிய பெரும்பான்மை இல்லை என்று கூறிய பட்னாவிஸ், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துவிட்டதாகத் தெரிவித்தார். பதவியேற்ற 78 மணி நேரத்துக்குள் பதவி விலகினார் தேவேந்திர பட்னாவிஸ். இதன்மூலம் மகாராஷ்ட்ராவில் குறைந்தகாலம் மட்டுமே முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெயரைப் பெற்றார் பட்னாவிஸ்.

``சத்ரபதி சிவாஜி கனவு கண்ட மகாராஷ்டிராவை உருவாக்குவோம்!’’ - உத்தவ் தாக்கரே

புதிய முதல்வர் உத்தவ் தாக்கரே

இதையடுத்து ஆளுநரை நேற்று இரவு சந்தித்த உத்தவ் தாக்கரே, ஆட்சியமைக்க உரிமைகோரினார். மகாராஷ்ட்ராவின் புதிய முதல்வராக தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே, மும்பையில் சிவாஜி பூங்காவில் வைத்து நாளை (28.11.2019) மாலை 6.40 மணியளவில் பதவியேற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்ட நிலையில், 288 எம்.எல்.ஏ-க்களும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

அஜித் பவாரை வரவேற்கும் சுப்ரியா சுலே
அஜித் பவாரை வரவேற்கும் சுப்ரியா சுலே
ANI

பதவியேற்பு நிகழ்ச்சிக்காக சட்டப்பேரவை வந்த எம்.எல்.ஏ-க்களை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, வரவேற்றார். எதிர்முகாமுக்குச் சென்று பின் திரும்பிய அஜித் பவாரை, சுப்ரியா சுலே சிரித்தபடியே வரவேற்றார்.