Published:Updated:

மகேந்திரன் முதல் பத்மப்ரியா வரை... எவிக்ட் ஆகும் பிரபலங்கள் - `பிக் பாஸ்’ கமல் நிலை என்ன?

கமல், மக்கள் நீதி மய்யம்

தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய சி.கே.குமரவேல்கூட கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியிலிருந்து விலகி மீண்டும் இணைந்தவர்தான்.

மகேந்திரன் முதல் பத்மப்ரியா வரை... எவிக்ட் ஆகும் பிரபலங்கள் - `பிக் பாஸ்’ கமல் நிலை என்ன?

தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய சி.கே.குமரவேல்கூட கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியிலிருந்து விலகி மீண்டும் இணைந்தவர்தான்.

Published:Updated:
கமல், மக்கள் நீதி மய்யம்

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அ.தி.மு.க-விலிருந்து பல நிர்வாகிகள், சசிகலாவைச் சந்திப்பார்கள். அ.தி.மு.க கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகும் என்றெல்லாம் பலர் ஆரூடம் சொன்னார்கள். ஆனால், 66 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு எதிர்க்கட்சித் தலைவராகி ஜம்மென்று வலம்வருகிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்திலிருந்து ஒவ்வொருவராகக் கழன்றுகொண்டிருக்கின்றனர்.

மகேந்திரன்- கமல்
மகேந்திரன்- கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகுவது புதிதல்ல. கட்சியின் தொடக்கவிழா நிகழ்ச்சியை நெறிப்படுத்திய எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து கடந்த டிசம்பரில் பா.ஜ.க-வில் இணைந்த அருணாசலம், தேர்தலுக்கு முன்பாக விலகிய, கட்சியின் பொதுச்செயலாளரும் கமலின் நண்பருமான கமீலா நாசர், தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பிறகு விலகிய அந்தக் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், சமீபத்தில் விலகிய தலைமை அலுவலகச் செயலாளரும், விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபு, சுற்றுப்புறச்சூழல் அணியின் பொறுப்பாளர் பத்மப்ரியா எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவர்கள் மட்டுமல்ல, தற்போது கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய சி.கே.குமரவேல்கூட கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியிலிருந்து விலகி மீண்டும் இணைந்தவர்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``கட்சியில் ஜனநாயகம் இல்லை, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் யதேச்சதிகாரமாக நடந்துகொள்கிறார், அவருடன் இணைந்து நடித்த நடிகைகளுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கிறார்'' என ஆரம்பகாலங்களில் கட்சியிலிருந்து விலகியவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். ஆனால்,சமீபத்தில் விலகிய அந்தக் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை நிறுவனமாகச் செயல்பட்டுவரும் சங்கையா சொல்யூஷன்ஸை நிர்வகிக்கக்கூடிய டி.வி.மகேந்திரன் மற்றும் சுரேஷ் ஐயர் ஆகிய இருவரின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். கமல்ஹாசன் தரப்பிலிருந்து அதற்குக் கடுமையாக பதிலடியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்

கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் சங்கையா சொல்யூஷனுக்கும் இடையிலான உரசல்கள் கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது வெளியில் கசிந்துகொண்டேதான் இருந்தன. ஆனால்,``என் கண்காணிப்பில், நான் சொல்லித்தான் அவர்கள் செயல்படுகிறார்கள். உங்களுக்கு வருத்தம் வேண்டாம்'' என கமல்ஹாசன் தரப்பில் நிர்வாகிகளுக்குச் சமாதானம் சொல்லப்பட்டது. மகேந்திரன் கொடுத்துள்ள விலகல் கடிதத்தில்கூட, `தேர்தல் முடிந்ததும் அவர்களை நானே வெளியில் அனுப்பிவிடுவேன்' என கமல் சொன்னதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``கடந்த வருடத்தில் `பிக் பாஸ்’, `இந்தியன் 2’ ஷூட்டிங்குகளில் தலைவர் பிஸியான நேரத்தில், கட்சியின் முழுக்கட்டுப்பாடும் சங்கையா சொல்யூஷன்ஸ் கைக்குப் போய்விட்டது. அரசியலின் அரிச்சுவடிகூடத் தெரியாமல் அவர்கள் இஷ்டத்துக்குச் செயல்பட்டார்கள். தேர்தல் பிரசாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக மண்டலத்துக்கு இரண்டு நாள்கள் எனக் கட்சி பணத்தையும், எங்கள் நேரத்தையும் வீணடித்தார்கள். அதுமட்டுமல்ல, எங்கள் தலைவருக்கு மேடையில் தனி இருக்கை உட்பட கட்சி நிர்வாகிகள் யாரும் தலைவருடன் நெருங்கிவிடாதவாறு, டி.வி.மகேந்திரன், சுரேஷ் ஐயர், கபிலன் ஆகிய மூன்று பேரும் தடுப்புச் சுவராக இருந்தார்கள்.

மகேந்திரன் கமல் பொன்ராஜ்
மகேந்திரன் கமல் பொன்ராஜ்

தங்கள் நிறுவனத்தை பிராண்ட் செய்ய தலைவரைப் பயன்படுத்திக்கொண்டார்கள்'' எனக் கொந்தளிக்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சிலர். மேலும் அவர்கள் பேசும்போது,

``எங்கள் தலைவரின் மீதும் தவறு இருக்கிறது. பல்லாண்டுகளாக அவருக்கு ரசிகராக, அவருக்கு விசுவாசியாக இருந்தவர்களைத் தவிர்த்துவிட்டு, திடீரென ஒருவரைத் துணைத் தலைவர் என அறிவித்தார். அவர் ஏற்கெனவே அரசியல் கட்சிகளில் முக்கியப் பொறுப்பில் இருந்துவிட்டு, இங்கு அப்படிப் பொறுப்புக்கு வந்தால்கூட பரவாயில்லை. ஆனால், கட்சியில் சேரும்போதே துணைத் தலைவராகத்தான் சேர்ந்தார். கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்குக்கூட அது தெரிவிக்கப்படவில்லை. அடுத்ததாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி... அவருக்கும் கட்சியில் சேர்ந்தவுடனேயே தலைமை அலுவலகச் செயலாளர் பொறுப்பு, அறிக்கைகள் தயாரிக்கும் பொறுப்பை வழங்கினார் தலைவர். ஆனால், அவரும் தேர்தல் முடிந்ததும் நடையைக் கட்டிவிட்டார்.

பத்மப்ரியா
பத்மப்ரியா

இதுகூடப் பரவாயில்லை, ஒரேயொரு வீடியோவின் மூலம் பிரபலமான சிறிய வயதுப் பெண்ணை, சுற்றுச்சூழல் அணிக்குத் தலைவராக்கினார். தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கொடுத்தார். அந்தப் பெண்ணோ, `கட்சியிலிருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன்' என ட்வீட் போடுகிறார். மக்கள் நீதி மய்யத்தில் இல்லாமல் அவர் தனியாக நின்றிருந்தால் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்கியிருப்பாரா? இப்படித் தங்களை முன்னிறுத்துக்கொள்வதற்காகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததே இந்த நிலைமைக்குக் காரணம். கடைசியாகச் சேர்ந்த பொன்ராஜ், பழ.கருப்பையா மீதும்கூட எங்களுக்கு நம்பிக்கையில்லை'' என்கிறார்கள்.

``கட்சி ஆரம்பித்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், கட்சிக்கு இதுதான் கொள்கை என எதுவும் வரையறுக்கப்படவில்லை. கட்சியில் சேரும் அனைவருமே எம்.எல்.ஏ., எம்.பி ஆகும் கனவுடன்தான் கட்சிக்கே வருகிறார்கள் அது தவறில்லை. ஆனால், உடனடியாக ஆக வேண்டும் என நினைக்கிறார்கள். தேர்தலில் தோல்வி என்றதும் விலகிச் செல்கிறார்கள். அதேபோல, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முழு நேரமாக கட்சிப் பணிகளில் ஈடுபடாததும், கட்சியின் கட்டமைப்பு குறித்து சிந்திக்காததுமே இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் கட்சிக்கென்று கட்டமைப்பே இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடாதது மிகப்பெரிய பிழை. தவிர, மற்ற கட்சிகளெல்லாம் ஆரம்பிக்கப்பட்டு, பல வருடங்கள் கழித்துத்தான் கம்பெனியாக மாறின. ஆனால், மக்கள் நீதி மய்யம் வரும்போதே கார்ப்பரேட் கம்பெனிபோலத்தான் செயல்பட்டது. அதுவே அந்தக் கட்சியின் பின்னடைவுக்குக் காரணம்'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ்.
மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ்.

ஆனால்,``எங்கள் தலைவர் இதையெல்லாம் எளிதாகக் கடந்துவிடுவார். இது அவர் ஆரம்பித்த கட்சி. சித்தாந்தம் என்பதையெல்லாம் தாண்டி, எங்கள் தலைவரின் ஆளுமைதான் முதன்மையானது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 17 லட்சம் வாக்குகள் அவருக்காகத்தான் விழுந்தன. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்த முடியாமல் போனது உண்மைதான். ஆனால், இந்தத் தோல்வியெல்லாம் எங்களை ஒன்றும் செய்துவிடாது. எங்கள் தலைவர் கோவை தெற்குத் தொகுதியில் தோல்வியடைந்ததற்கு தமிழகமே வருத்தப்பட்டது. அந்த அன்பும் அபிமானமும் எங்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும்'' என்கிறார் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ்.