Published:Updated:

காஷ்மீரில் கூடுதலாகக் குவிக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்! - காரணம் என்ன?

சத்யா கோபாலன்

காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அதிகமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

காஷ்மீர் மாநிலம் முழுவதும் பொதுவாக 60,000 -க்கும் மேற்பட்ட வீரர்கள் எப்போதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர். அமர்நாத் யாத்திரை காரணமாக சமீபத்தில் அங்கு மேலும் 20,000 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு இன்னும் 10,000 வீரர்களைப் பாதுகாப்புக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.

பாதுகாப்புப் படை
பாதுகாப்புப் படை

திடீரென அளவுக்கு அதிகமான வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநில மக்கள் உட்பட இந்திய மக்களும் அச்சமடைந்துள்ளனர். வீரர்கள் குவிப்புக்கான காரணம் தெரியாமல் பலரும் குழம்பியுள்ளனர். இதற்கிடையில் காஷ்மீரில் நடைமுறையில் உள்ள சிறப்புச் சட்டப் பிரிவு 35ஏ- யை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதனால் அங்கு எந்தக் கலவரமும் ஏற்படாமல் இருக்கவே அதிக வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பல செய்திகள் வெளியாகின.

சிறப்புச் சட்டப் பிரிவு 35ஏ - சிறிய விளக்கம்

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அதாவது இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னதாக நடந்த பிரிட்டிஷ் ஆட்சியில் காஷ்மீர் பகுதி தன்னாட்சி கொண்ட சுய சமஸ்தானமாக இருந்தது. விடுதலைக்குப் பின் காஷ்மீரை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சி செய்ததால் அதே ஆண்டு, அப்போதைய காஷ்மீர் மன்னர் ஹரி சிங், தங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள விரும்பினார். ஆனால் காஷ்மீருக்கு சில சிறப்புச் சலுகைகள் வேண்டும் எனக் கேட்டு ஒப்பந்தம் செய்துகொண்டார்.

சிறப்பு சட்ட பிரிவு 35ஏ
சிறப்பு சட்ட பிரிவு 35ஏ

இதை ஏற்றுக்கொண்ட அப்போதைய பிரதமர் நேரு, ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்து காஷ்மீரை இந்தியாவின் அங்கமாக இணைத்தார். எனவே 1949-ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 370 -ன் கீழ் திருத்தங்கள் செய்து பிரிவு 35ஏ என்ற ஒன்றை உருவாக்கி ஜம்மு & காஷ்மீர் மாநில மக்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. சிறப்புச் சட்டப் பிரிவு 35ஏ படி, வெளி மாநிலத்தவர்கள் யாரும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது, பிறமாநிலத்தவர்கள் அங்குச் சென்று படிக்க முடியாது. அம்மாநில மக்களுக்கு அரசு வேலைகள் மற்றும் மானியங்களில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும்.

தற்போதைய நிலைக்கு வருவோம். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய நினைத்தது மத்திய அரசு. `சிறப்புச் சட்டப் பிரிவு 35ஏ- வை நீக்கினால் காஷ்மீர் இந்தியாவை விட்டுப் பிரிந்ததாக அர்த்தமாகும். இங்குள்ள மக்கள் பல நாட்டுக் கொடிகளை சுமப்பார்கள். எனவே, அந்தச் சட்டத்தை நீக்கக் கூடாது' எனக் காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சட்ட நீக்கத்தினால்தான் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ராணுவம்
ராணுவம்

`காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் மிகப்பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதன் காரணமாகவே அந்தப் பகுதியில் அதிகமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 100 குழுக்கள் ரயில் மற்றும் விமானங்கள் மூலம் காஷ்மீருக்கு அனுப்பப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது’ என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீரில் அதிகமான பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என அம்மாநில மக்கள் அடுத்த சில நாள்களுக்குத் தேவையாக அத்தியாவசிய பொருள்களை வாங்கிவருகின்றனர்.