Election bannerElection banner
Published:Updated:

``கமல் சாரோட இணைச்சுப் பேசினா, நான் முடங்கிருவேன்னு நினைக்கிறாங்க!" - சீறும் சினேகா மோகன்தாஸ்

கமல்ஹாசன் மற்றும் சினேகா மோகன்தாஸ்
கமல்ஹாசன் மற்றும் சினேகா மோகன்தாஸ்

சைதாப்பேட்டை தொகுதியில் `டார்ச் லைட்’டோடு வாக்கு கேட்டு வலம் வந்துகொண்டிருக்கும் சினேகா மோகன் தாஸிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

``சினிமாவில் பல மாற்றங்களை நிகழ்த்திக்காட்டிய கமல்ஹாசன் அரசியலிலும் மாற்றங்களைக் கொண்டுவரும் முனைப்புடன் இயங்கிவருகிறார். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியில் ஆரம்பித்து இ.ஐ.ஏ-வுக்காக குரல்கொடுத்து சமூகவலைதளங்களில் பிரபலமான பத்மப்ரியா வரையிலான வேட்பாளர் தேர்விலிருந்தே அதை உணர முடியும்.” என்கின்றனர் மக்கள் நீதி மய்யத்தினர். அந்த வகையில், ஆதரவற்றோர் மற்றும் வீடில்லாமல் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவளிப்பதற்காக `FOOD BANK-India' என்ற அமைப்பைத் தொடங்கி நிர்வகித்து வந்த சினேகா மோகன்தாஸ் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்ததன் மூலம் பிரபலமடைந்த சினேகா மோகன்தாஸ் பி.ஜே.பி-யில் இணையப்போகிறார் எனத் தகவல் பரவிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். சைதாப்பேட்டை தொகுதியில் `டார்ச் லைட்’டோடு வாக்கு கேட்டு வலம் வந்துகொண்டிருக்கும் சினேகா மோகன் தாஸிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

சினேகா மோகன்தாஸ்
சினேகா மோகன்தாஸ்

``பிரசாரத்தை ஆரம்பிச்சுட்டீங்க... சைதாப்பேட்டை தொகுதி மக்களோட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு?"

``மக்கள்கிட்ட எங்களுக்கு ரெஸ்பான்ஸ் ரொம்பவே நல்லா இருக்கு. எல்லோருமே மாற்றம் வரணும்னு எதிர்பார்க்குறாங்க. அதனால நல்ல வரவேற்பு இருக்கு. நான் வேட்புமனு தாக்கல் செஞ்சுட்டு வந்து இறங்கினதும் ஒருத்தர், `நான் அ.தி.மு.ககாரன். எங்களுக்கே வெறுத்துடுச்சு... இந்த முறை மாற்றிப்போடலாம்னு இருக்கேன். என் ஓட்டு நிச்சயமா உங்களுக்குத்தான்னார். பெரியவங்களும் நல்ல வரவேற்பு கொடுத்து நீ ஜெயிக்கணும்மான்னு ஆசீர்வாதம் பண்றாங்க. ரொம்ப உற்சாகமா இருக்கு."

``கட்சியில சேர்ந்த கொஞ்ச நாள்லயே வேட்பாளராகிட்டீங்க... நீங்க இதை எதிர்பார்த்தீங்களா?"

``ஆரம்பத்துல பொலிட்டிக்கலைப் பொறுத்தவரை நான் ஸீரோதான். நியூஸ் சேனல்கூட பார்க்க மாட்டேன். சோஷியல் வொர்க்ல ஈடுபட ஆரம்பிச்சதுக்குப் பிறகுதான் மக்கள் எவ்வளவு கஷ்டத்துல இருக்காங்கன்னு முழுசா என்னால உணர முடிஞ்சது. நாம தனி ஆளாவோ, ஓர் அமைப்பாவோ என்னதான் சோஷியல் வொர்க் செஞ்சாலும் குறிப்பிட்ட மக்களுக்கு உதவ முடியுமே தவிர, பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. நீங்க ஏதாவதொரு மாற்றத்தைக் கொண்டு வரணும்னா... நிச்சயம் பவர்ல இருக்கணும். அதுக்கு அரசியல்தான் ஒரே வழின்னு புரிஞ்ச நேரத்துலதான் எனக்கு மக்கள் நீதி மய்யத்துல இருந்து வாய்ப்பு வந்தது. உடனே சேர்ந்துட்டேன்.

ஆனா, உடனடியா எனக்கு சீட் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கலை. சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது, கமல் சாரை சைதாப்பேட்டைக்கு அழைச்சுட்டு வந்து காண்பிச்சேன். அப்போ இந்தப் பகுதி சாதாரண அடித்தட்டு மக்கள் என்கூட அந்நியோன்யமா பழகுறதைப் பார்த்துட்டு, `இந்தளவுக்கு நீங்க மக்கள்கூட கனெக்ட்டடா இருக்கீங்களா சினேகா?'ன்னு கமல் சார் ஆச்சர்யப்பட்டார். மக்களோட நிலைமையைப் பார்த்துட்டு இதையெல்லாம் நாம மாத்தணும்னு உருக்கமாகச் சொல்லிட்டுப் போனார். என்னோட பணிகளைப் பார்த்துட்டுதான் எனக்கு சீட் கொடுத்திருக்காங்க. எல்லாரும் ஜெயிச்சதுக்குப் பிறகு, நல்லது செய்வேன்னு சொல்லுவாங்க. ஆனா அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாலேயே நல்லது செஞ்சுட்டு வந்திருக்கேன். அதனால, நான் தேர்தல்ல போட்டியிடறதுக்குத் தகுதியான ஆளுங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு."

பிரசாரத்தில் சினேகா மோகன்தாஸ்
பிரசாரத்தில் சினேகா மோகன்தாஸ்
``முதலைகளோடு மோதும் தங்க மீன் நான்!” - மதுரவாயல் ம.நீ.ம வேட்பாளர் பத்மப்ரியா

``தி.மு.க-வில் மா.சுப்பிரமணியன், அ.தி.மு.க-வில் சைதை துரைசாமினு நீங்க எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் அரசியல் அனுபவம் அதிகமுள்ளவங்க. குறிப்பாக, சைதாப்பேட்டை தொகுதியில் செல்வாக்கு பெற்றவங்க. அப்படியான சூழலில், உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?"

``என்னைப் பொறுத்தவரைக்கும் மக்கள்கிட்ட யாருக்கு உண்மையான அன்பும் பாசமும் இருக்கோ அவங்கதான் உண்மையான செல்வாக்குள்ளவர்கள். பணமோ ஆள் பலமோ இருக்கிறதால அவங்களுக்கு செல்வாக்கு இருக்குன்னு அர்த்தம் இல்ல. எனக்குத் தெரிஞ்சவரைக்கும் ரெண்டு பேர் மேலயும் மக்களுக்கு வெறுப்புதான் அதிகமா இருக்கே ஒழிய செல்வாக்கெல்லாம் ஒண்ணுமில்லை. கடந்த 50 வருஷங்களா இந்த ரெண்டு கட்சிகளும்தான் மாறிமாறி ஆட்சி செஞ்சிருக்காங்க. ஆனா, இங்குள்ள மக்கள் இன்னமும் அப்படியேதான் இருக்காங்க. அடையாறு ஆற்றங்கரையோரம் இருக்கிற மக்கள் நிலைமை போகப்போக மோசமாதான் ஆகிட்டிருக்கு. அவங்க ரெண்டு பேரும் உண்மையான செல்வாக்குள்ளவங்களா இருந்தால் இந்நேரம் அந்த மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்கணுமில்லையா... ஆனா, அப்படி எதுவும் நடக்கலையே... இந்தத் தேர்தல்ல எல்லாம் மாறும்னு நான் உறுதியா நம்புறேன்."

``பெண்கள் அரசியலுக்கு வர்றது இப்போ கொஞ்சம் அதிகரிச்சுருக்கு... ஒரு பெண் அரசியலுக்குள்ள நுழையும்போது என்னென்ன பிரச்னைகளை கடந்து வர வேண்டியிருக்கு?"

சினேகா மோகன்தாஸ்
சினேகா மோகன்தாஸ்

``ஒரு பொண்ணு அரசியல்ல ஈடுபட்டாலே அவ தப்பானவளாத்தான் இருப்பான்னு சித்திரிக்கிறாங்க. ஒரு பெண் ஏதாவதோர் அரசியல் கட்சியில சேர்ந்து போஸ்டிங் வாங்கணும்னா யார்கிட்டயாவது அட்ஜஸ்ட் பண்ணியிருப்பான்னு நினைக்கிறாங்க. சோஷியல் மீடியாவுல வர்ற கமென்ட்ஸெல்லாம் பார்த்தோம்னா ரொம்பக் கேவலமா அருவருக்கத்தக்க வகையில இருக்கு. `உனக்கு கட்சியில பதவியும் சீட்டும் கொடுத்திருக்காங்கன்னா... உங்க தலைவர் கூட... நீ அப்டி இப்டியா?'ன்னு கேட்டு எனக்கே கமென்ட் போடுறாங்க.

இப்படியெல்லாம் பேசினா ஒரு பொண்ணை முடக்கிடலாம்னு நினைக்கிறாங்க. கமல் சார்கூட என்னை சேர்த்து வெச்சுப் பேசுறது மூலம் என்னை முடக்கணும்னு நினைக்கிறாங்க. நான் மட்டுமில்லை மக்கள் நீதி மய்யத்தில் இணையும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கட்சியோட கொள்கைக்காகவும் தலைவரோட நேர்மைக்காகவும்தான் கட்சிக்குள்ள வர்றாங்க. அப்படியிருக்க ஏன் அப்படிக் கொச்சையா பேசணும்? மக்கள் நீதி மய்யத்துல மட்டும் அந்தப் பிரச்னை இல்லை. எல்லா கட்சிகள்ல உள்ள பெண்களுக்கும் அந்தப் பிரச்னை இருக்கு. கமல் சார் நடிகர்ங்கிறதால இங்கே கொஞ்சம் அதிகமாவே இருக்கு.

அப்படியான கமென்டுகளைப் பாக்கறப்போ சம்பந்தப்பட்ட பெண்களும் அங்க ஃபேமிலி மெம்பர்ஸும் எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு, கமென்ட் போடுறவங்க கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கறது கிடையாது. இப்போ எங்க வீட்டைப் பொறுத்தவரை இதுமாதிரியான கமென்ட்களால் எந்தப் பிரச்னையும் இல்லை. `வெட்டிப் பசங்களுக்கு வேற வேலை இல்லை'ன்னு என் கணவர் கடந்துபோயிருவார். ஆனா, எல்லா பெண்களுக்கும் அப்படியான சூழல் இருக்காது. எனக்குத் தெரிஞ்சே பல பெண்கள் இப்படியான கமென்ட்களால் அரசியலைவிட்டே ஒதுங்கியிருக்காங்க. அந்த நிலையெல்லாம் மாறணும்."

`பி.ஜே.பி-ல சேராம ஏன் ம.நீ.ம-ல சேர்ந்தேன்னா..!' - மோடியின் ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்த சினேகா
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு