Election bannerElection banner
Published:Updated:

தண்ணீர் புரட்சி முதல் கிராமப்புற மறுமலர்ச்சி வரை - மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியில் தேர்தல் அறிக்கையை, கோவையில் வெளியிட்டார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், 105 பக்கங்களைக்கொண்ட தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டர். கோவையில் நடந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், ``இலவசங்கள் என்ற பெயரில் மக்களின் தலைமீது கடன் சுமை ஏற்றப்படுகிறது. உங்களின் ஏமாளித்தனத்தை அவர்கள் முதலீடாக்குகிறார்கள் என்பதுதான் உண்மை. இவர்கள் ஆட்சியிலிருந்து நீங்கிவிட்டார்கள் என்றால் கஜானா காலியாக இருக்கும். அவர்கள் இலவசமாகக் கொடுத்த பொருளின் பில் உங்கள் தலையில் இருக்கும்.

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு

தற்போது அரசுக்கு இருக்கும் 6 லட்சம் கோடி ரூபாய்க் கடனை அடைத்து, அதிலிருந்து உங்களை மீட்பது மட்டுமல்லாமல், லாபகரமாக அரசின் தொழில்களை நடத்தும் திட்டமும் எங்களிடம் உள்ளது. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று 1,000 ரூபாயும், 1,500 ரூபாயும் கொடுப்பதென்பது எந்த அடிப்படையில்... ஊதியம் என்றால் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பதுதானே நியாயமானது... இவருக்கு, இன்ன தொகை என்று எப்படி முடிவு செய்வீர்கள்? பெண்களின் திறமையை மேம்படுத்தி அதன் மூலம் அவர்களுக்கு வருமானம் வழங்குவதுதான் மக்கள் நீதி மய்யத்தின் திட்டம். இல்லத்தரசிகளுக்கு வேலை தேடிக் கொடுக்க வேண்டுமே தவிர, கஜானாவிலிருந்து பணத்தைக் கொடுக்கக் கூடாது'' என்றார்.

மேலும், ``நாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள். நீண்ட தேவைகளுக்கான திட்டங்களைக்கொண்ட தனித்துவமான தேர்தல் அறிக்கை இது" என்று கமல்ஹாசன் பேசினார்.

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை

மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதிகள்...

- அடுத்த ஐந்தாண்டுகளில் வரிக்கு நிகரான வருமானத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

- குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நவீன பசுமை வீடுகள் கட்டமைப்பு நிறுவனமாக மாற்றி அமைக்கப்படும்.

- நேர்மையான, ஊழலற்ற, விரைந்து செயல்படக்கூடிய தூய ஆட்சி முறை நிர்வாகம் அமைக்கப்படும். ஊழலை ஒழிக்க மின் ஆளுமை அரசாட்சித் திட்டம் அமலாக்கப்படும்.

- லோக் ஆயுக்தா சட்ட சீர்திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் கொண்டுவரப்படும்.

- படித்த இளைஞர்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். அனைத்து அரசுப் பணிகளும் தமிழக அரசின் சமூகநீதிக் கொள்கை அடிப்படையில் நிரப்பப்படும்.

- தண்ணீர் புரட்சி ஒன்றே தமிழகத்தில் மறுமலர்ச்சியை உண்டாக்கும். நீலப்புரட்சிக்கு தனி அமைச்சகம் மற்றும் சிறப்பு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இரும்புக்கரம் கொண்டு அகற்றப்படும்.

- மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறை ஒழிக்கப்படும்.

- விவசாய உற்பத்திப் பொருள்கள் வீணாகாமல் பதப்படுத்தி, மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகள் மாவட்டம்தோறும் அமைத்து, ஏற்றுமதி நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

- இருமொழிக் கொள்கை தொடரும்.

- தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ்வழிக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மூலம் அறிவு சார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்போம்.

- கிராமப்புற மறுமலர்ச்சிக்கு அப்துல் கலாமின் `புரா' திட்டம் உருவாக்கப்படும். தொலைத் தொடர்பு மருத்துவ வசதி அனைத்து கிராமங்களிலும் ஏற்படுத்தப்படும்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முழுத் தேர்தல் அறிக்கையைக் கீழ்க்காணும் இணைப்பில் படிக்கலாம்.

download
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு