Published:Updated:

கமலின் கப்சிப் தர்பார்!

கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்

தன் ஒற்றைக் கையை உயர்த்தி ‘கட்சி எனதே’ என மார்தட்டுவதால், கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி சுனாமி அலையடிக்கிறது.

கமலின் கப்சிப் தர்பார்!

தன் ஒற்றைக் கையை உயர்த்தி ‘கட்சி எனதே’ என மார்தட்டுவதால், கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி சுனாமி அலையடிக்கிறது.

Published:Updated:
கமல்
பிரீமியம் ஸ்டோரி
கமல்
“மக்கள் நீதி மய்யத்தில் இன்னிக்கு யார் வெளியேறினாங்க?” கிரிக்கெட் ஸ்கோர் கேட்பதுபோல, தினமும் காலையில் அரசியல் வட்டாரத்தில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்ளும் கிண்டலான கேள்வி இதுதான். கொரோனா நெருக்கடிகளையும் மறந்து ‘மக்கள் நீதி மய்ய’ விவகாரங்களை வைத்து ஃபன் செய்துகொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். என்னதான் நடக்கிறது மய்யத்துக்குள்?
கமலின் கப்சிப் தர்பார்!

கைகளைக் கோத்தபடி ‘நாளை நமதே’ என்று சொல்லிவந்த மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தற்போது தன் ஒற்றைக் கையை உயர்த்தி ‘கட்சி எனதே’ என மார்தட்டுவதால், கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி சுனாமி அலையடிக்கிறது. ‘ஊருக்கு ஜனநாயக உபதேசம் செய்யும் கமலிடம் பேருக்குக்கூட ஜனநாயகம் இல்லை’ எனக் கல்லெறியப்பட்ட தேன்கூட்டிலிருந்து கிளம்பும் தேனீக்கள்போல கலைந்துவருகிறார்கள் நிர்வாகிகள். ‘தேர்தல் சமயத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ம.நீ.ம., இன்று கமலின் சர்வாதிகார நடவடிக்கைகளால் கரைந்துகொண்டிருக்கிறது’ என்கிறார்கள் மய்ய வட்டாரத்தினர்.

கமல் மீதான விமர்சனம், நிர்வாகிகளின் வெளியேறுதல்கள், கலகலத்துப்போயிருக்கும் கட்சியின் நிலை குறித்துப் பார்ப்பதற்கு முன்பு, ஒரு ஃப்ளாஷ் பேக் போய்த்தான் ஆக வேண்டும். மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டபோது முக்கியப் பொறுப்பிலிருந்த ஒருவர் நம்மிடம் இது குறித்து மனம் திறந்தார்.

‘விஸ்வரூப’ பிரச்னை

“2011-ல் ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிடக் கூடாது என முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியபோது, அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா (சட்டம் ஒழுங்கு கருதி!) அப்படத்துக்குத் தடை உத்தரவு போட்டார். ‘நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கமல் ஸ்டன்ட் அடித்துப் பார்த்தும், ஜெ-விடம் கமலின் பாச்சா பலிக்கவில்லை. மிகுந்த மனவருத்தத்துடன் ஆட்சேபத்துக்குரிய காட்சிகளையும் வசனங்களையும் நீக்கினார் கமல். அதன் பின்னர்தான் படம் திரைக்கு வந்தது. இந்தச் சம்பவம்தான், கமலின் ஆழ்மனதில் அரசியல் அதிகாரத்தை அடைய வேண்டுமென்கிற வேட்கை உருவாக முக்கியக் காரணமாக அமைந்தது.

அடுத்து, 2014-ம் ஆண்டில், முதன்முதலாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிரதமர் மோடி, நாடு முழுவதும் ‘ஸ்வச் பாரத்’ என்கிற தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல, ஒவ்வொரு மொழியிலும் பிரபலமான சினிமா ஹீரோக்களைப் பயன்படுத்தியது மத்திய அரசு. அதன்படி, தமிழகத்தில் இந்தத் திட்டத்துக்கு விளம்பரத் தூதராக அறிவிக்கப்பட்டார் கமல். அப்போதிருந்தே கமல் மீது லேசான பா.ஜ.க வாசம் வீசத் தொடங்கிவிட்டது.

ஜெயலலிதா மறைந்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஆரம்பமான காலகட்டம். 2017-ம் ஆண்டு மத்தியிலிருந்து, தனது விளையாட்டைத் தொடங்கினார் கமல். ஆட்சியிலிருக்கும் அமைச்சர்களை ஊழல்வாதிகள் எனத் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார். ஒருகட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கமலுக்குக் கடுமையாக ரியாக்‌ஷன் கொடுக்க, அதையே மூலதனமாக்கி தன் அரசியல் பாதையை வடிவமைத்தார் கமல். அரசியலுக்கு வராமலேயே ‘மய்யம் விசில் ஆப்’ என்றொரு செயலியை உருவாக்கி ‘மக்கள் பிரச்னைகளை அதில் பதிவிடுங்கள், எனது ரசிகர் பட்டாளம் அதை நிவர்த்தி செய்யும்’ என முழங்கினார். எத்தனை பிரச்னைகளை அவர்கள் சரிசெய்தார்கள், அதனால் கிடைத்த பயன் என்ன என்பது கமலுக்கே வெளிச்சம்.

கமலின் கப்சிப் தர்பார்!

முதல் கோணல், முற்றும் கோணல்!

‘ட்விட்டரிலேயே அரசியல் செய்துகொண்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?’ என மீடியாக்கள் தொடர்ச்சியாகக் கேட்க, ‘களத்தில் வருகிறேன்’ என தேதியையும் அறிவித்தார் கமல். தலைவராக கமல்ஹாசன், பொதுச் செயலாளராக அருணாச்சலம் மற்றும் பொருளாளராக எழுத்தாளர் சுகா ஆகியோரைக்கொண்டு கட்சியும் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. அதன் பிறகு 2018, பிப்ரவரி 21-ம் தேதி, மதுரையில் பிரமாண்ட மேடையில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சிப் பெயரையும், கோத்த கைகளுக்குள் நட்சத்திரம் பொறிக்கப்பட்ட லச்சினையுடன் கூடிய வெள்ளைக் கொடியையும் அறிமுகம் செய்தார் கமல். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட சில வி.ஐ.பி-க்களும் அந்த விழாவில் பங்கேற்றனர்.

சினிமா, எழுத்து உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்கள் ம.நீ.ம-வில் திபுதிபுவென வந்து சேர்ந்தார்கள். எவ்வளவு வேகமாக வந்து சேர்ந்தார்களோ அவ்வளவு வேகமாகவே பலர் வெளியேறிய சம்பவங்களும் நடந்தன. கட்சிப் பதிவின்போது பொருளாளராக நியமிக்கப்பட்ட எழுத்தாளர் சுகா, வந்த வேகத்திலேயே திரும்பி ஓட்டமெடுத்தார். நிர்வாகிகளில் ஒருவராக நியமிக்கப்பட்ட பட்டிமன்றப் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன், சாமர்த்தியமாக ‘தனக்கு எந்தப் பொறுப்பும் வேண்டாம்’ என்று வெறும் அடிப்படை உறுப்பினராகத் தொடர்ந்தார். பொதுவுடைமைச் சித்தாந்தம் கொண்ட பாரதி கிருஷ்ணகுமார்தான் கட்சிக்காகப் பல்வேறு ஊடக விவாதங்களில் பங்கேற்றுப் பேசிவந்தார். கட்சியின் தொடக்க விழாவை நெறிப்படுத்தியவரும் இவரே. ஆனால், ஒருகட்டத்தில் கமல் மீது காவிச் சாயம் வீசுவதாக உணர்ந்தவர், கட்சியிலிருந்து வெளியேறினார். அடுத்தடுத்து, கமலின் கட்சி அலுவலகரீதியிலான தனிச் செயலாளர்களாக இருந்த ரம்யா, ஸ்ரீலதா என இருவரும் வந்த வழியில் திரும்பினர். இந்த முதல் கோணல்தான் முற்றும் கோணலானது.

பலர் வெளியேறியபோதும் கூலாக இருந்த கமல், ஷாக் ஆகத் தொடங்கியது பொதுச்செயலாளராக இருந்த அருணாச்சலம் வெளியேறியபோதுதான். டாக்டர் மகேந்திரன் இன்று வெளிப்படையாகக் கூறிய குற்றச்சாட்டை அன்றைக்கு மறைமுகமாக கமலிடம் மட்டும் தெரிவித்துவிட்டு, பா.ஜ.க-வுக்குப் பறந்தார் அருணாச்சலம். தொடர்ந்து ஸ்டூடன்ட்ஸ் ஜெராக்ஸ் உரிமையாளர் சௌரி ராஜன், மீடியாவிலிருந்து வந்த ராஜநாராயணன், வழக்கறிஞர்கள் ராஜசேகர், விஜயன், பஷீர் அகமது ஐ.ஏ.எஸ் என விக்கெட்டுகள் விழுந்த வண்ணமிருந்தன.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் கமிட்டியில், அப்போதுதான் புதிதாக இணைந்திருந்த நடிகை கோவை சரளாவையும் உட்காரவைத்தார் கமல். அதில் உடன்பாடில்லாமல், சி.கே.குமரவேல் கட்சியைவிட்டு விலகினார்; பிறகு மீண்டும் இணைந்தார். இதில் ட்விஸ்ட் என்னவென்றால், பலரின் எதிர்ப்புகளையும் மீறி கமல் முக்கியத்துவம் கொடுத்த கோவை சரளாவும் பாதியிலேயே `பை’ சொல்லிவிட்டார் என்பதுதான்.

தலைதூக்கிய சர்வாதிகாரம்!

இதுவரை கட்சியிலிருந்து வெளியேறிய அத்தனை பேரும் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். ஒன்று, கட்சியில் கொஞ்சம்கூட ஜனநாயகம் இல்லை. மற்றொன்று கட்சியின் வியூக நிறுவனமான ‘சங்கையா சொல்யூஷன்ஸின்’ அட்டகாசங்கள்.

‘ஐபேக்’ நிறுவனம், தமிழகத்தில் முதலில் ஒப்பந்தம் போட்டதே ம.நீ.ம-வுடன்தான். ஆனால், 2018-ம் ஆண்டு, சுமார் ஆறு மாதங்கள் தன்னுடன் பணியாற்றிய ஐபேக்கைக் கழற்றிவிட்டார் கமல். விஜய் டி.வி மகேந்திரனையும், சுரேஷ் ஐயரையும் அழைத்து வந்து ‘சங்கையா சொல்யூஷன்ஸை’ தொடங்கினார். அங்கிருந்துதான் பிரச்னைகளும் தொடங்கின. சங்கையா சொல்யூஷன்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாகக் கட்சியையே தனது கன்ட்ரோலில் எடுத்துக்கொண்டு போட்ட ஆட்டத்தில்தான் இன்றைக்கு மொத்தக் கூடாரமும் காலியாகியிருக்கிறது. இதுபற்றி பலரும் புகார் சொல்லியும் இதுவரை அந்த விஷயத்தை கமல் காதில் போட்டுக்கொள்ளவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை” என்று முடித்தார் பெருமூச்சோடு.

கமலின் கப்சிப் தர்பார்!

ஒரே தலைவன்... ஒரே நாற்காலி!

2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் கமீலா நாசர், கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன், தலைமை அலுவலகப் பொதுச்செயலாளர் பொறுப்பளிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட சூழலியல் ஆர்வலர் பத்மப்ரியா, பொதுச்செயலாளர் திருச்சி முருகானந்தம், சி.கே.குமரவேல் என அடுத்தடுத்து நிர்வாகிகள் கமலுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டுக் கிளம்பினார்கள். இதுவரை சங்கையா சொல்யூஷன்ஸ் மட்டும்தான் பிரச்னை என்றவர்கள், இப்போது கமலை நோக்கிக் கைநீட்டுகிறார்கள். கமலின் சர்வாதிகார முகம் குறித்துக் கதை கதையாகச் சொல்கிறார்கள்.

சமீபத்தில் ம.நீ.ம-விலிருந்து விலகிய சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “கமலைப் பெரிய ஆளுமையாகக் காட்ட வேண்டும் என்பதற்காக, எல்லா மேடைகளிலும் தனியொருவராக அமரவைக்கப்பட்டார் கமல். மூத்த நிர்வாகிகளும்கூட அங்கே நின்றுகொண்டுதான் இருக்க வேண்டும். இது ‘சங்கையா சொல்யூஷன்ஸின் ஏற்பாடு. சுயமரியாதை, சம உரிமை பற்றியெல்லாம் வியாக்கியானம் பேசும் கமல் இதை மறுத்திருக்க வேண்டும். ஆனால், இந்த ஏற்பாட்டில் குஷியாகி அந்த அதிகாரத்தை அவர் அனுபவித்தார். அப்படித் தனி நாற்காலியில் உட்கார ஆரம்பித்ததிலிருந்தே அவரது நடவடிக்கைகளும் மாறிப்போயின. அப்போதே நிர்வாகிகளுக்கும் கமலுக்குமான தொடர்பு அற்றுப்போனது. தவிர, சங்கையா சொல்யூஷன்ஸ் நிர்வாகிகள், கட்சியின் பொதுக்குழுவிலும் இடம்பிடித்ததை நிர்வாகிகள் கொஞ்சமும் ரசிக்கவில்லை.

“நான் ஹிட்லர்தான்... திஸ் இஸ் மை பார்ட்டி!”

சமீபத்தில் பொதுக்குழு கூட்டப்பட்டபோது, கமலின் சர்வாதிகார மனநிலை மொத்தமாகவே வெளிப்பட்டுவிட்டது. ‘என் முடிவுகளுக்குக் கட்டுப்படாதவர்கள் இப்போதே கட்சியைவிட்டுச் செல்லலாம்’ எனக் கூறி, `பிக் பாஸ்’ நிகழ்ச்சிபோல ஐந்து நிமிடங்கள் கதவைத் திறந்துவைத்தார் கமல். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அப்போதே மனதளவில் நிர்வாகிகள் நொறுங்கிப் போய்விட்டார்கள். சட்டசபைத் தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘தேர்தல் தோல்விக்கு நிர்வாகிகள்தான் பொறுப்பு. நீங்கள் தவறான முடிவுகளை எடுத்ததுதான் காரணம்’ என்று அனைவரிடமும் ராஜினாமா கடிதம் கேட்டார். அதற்கு நிர்வாகிகள் மறுத்துப் பேசினார்கள். கோபமடைந்த கமல், ‘ஐ டன் மை ஜாப் பெர்ஃபெக்ட்லி’ என்றும், நிர்வாகிகளான சிலர்தான் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டுமென்றும் கூறினார். உடனே அதிருப்தியடைந்த சென்னை மண்டல நிர்வாகி ஒருவர், ‘கிராமசபைக் கூட்டம்’ என்கிற கான்செப்ட்டை தி.மு.க தட்டிப் பறித்துச் செல்ல விட்டிருக்கக் கூடாது. நாம் கோட்டை விட்டுவிட்டோம். கிராமப்புறங்களில் நமது கட்சிக்கு ஆளே இல்லை. நீங்களும் கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை’ என்று வெடித்துப் பேச, கமலின் முகம் இறுகியது. ‘திஸ் இஸ் மை பார்ட்டி’ என்று உரக்க சத்தமிட்ட கமல், ‘இருக்க விரும்புபவர்கள் இருக்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம்’ என்று கோபத்தில் வார்த்தைகளைக் கொப்பளித்தார். ஒரு நிர்வாகி பேசியதை இடைமறித்து, கண்சிவக்க ‘அகந்தையா உங்களுக்கு?’ என்றார். ‘ஒற்றை நாற்காலி விஷயம்’ குறித்து ஒரு நிர்வாகி கேட்டதற்கு ‘ஆமாம்... நான் ஹிட்லர்தான்... இங்கு ஒற்றை நாற்காலிதான்!’ என்று கொதித்தார் கமல். அன்றைய கூட்டத்தில் கமலிடம் வெளிப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்சம். ‘கப்சிப்’ என யாரும் எதற்கும் வாய் திறக்காமல் இருக்க வேண்டுமென கமல் நடத்தும் சர்வாதிகார தர்பார் இன்றைய அரசியலுக்குச் சுத்தமாக ஒத்துவராது.

தன்னை எதிர்ப்பவர்கள் எல்லோரும் சென்றுவிட்டார்கள், இனி பிரச்னையில்லை என்பதுபோல விஜய் டி.வி மகேந்திரனைக் கட்சியின் துணைத் தலைவராகவே நியமிக்க முடிவெடுத்தார் கமல். ஆனால், அதற்கு மகேந்திரன் இன்னும் சம்மதிக்கவில்லை. மௌரியா, பொன்ராஜ், முருகானந்தம், குமரவேல், மகேந்திரன் ஆகிய ஐந்து பேரை துணைத் தலைவர் பதவிக்கு டிக் அடித்துவைத்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக முருகானந்தம், குமரவேல் ஆகியோர் விலகிவிட, மகேந்திரனும் யோசிக்கிறார். சினேகன், சினேகா மோகன்தாஸ், ஸ்ரீபிரியா உள்ளிட்டோருடன் இன்னும் இருவரைச் சேர்த்து ஐந்து பேரைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்க முடிவெடுத்திருக்கிறார் கமல். இப்படிக் கேள்விகள் இல்லாமல் தனக்குக் கீழ்ப்படியும் ஆட்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஒற்றை ஆளுமையாக இருக்கப்போகிறாராம் கமல். அவர் நம்புகிற இன்னும் பலரும் அவரைவிட்டு விலகும்போது அவருக்குப் புரியும்” என்பதோடு முடித்துக் கொண்டனர்.

சினேகன், சினேகா மோகன்தாஸ், ஸ்ரீபிரியா
சினேகன், சினேகா மோகன்தாஸ், ஸ்ரீபிரியா

சினிமா ஸ்டன்ட் அல்ல... அரசியல்!

கமலின் செயல்பாடுகள் குறித்து கட்சியிலிருந்து விலகியவர்களில் ஒருவரான வழக்கறிஞர் ராஜசேகரிடம் கேட்டோம். “2011-ல் `விஸ்வரூபம்’ படப் பிரச்னைக்கு கமலுக்காக ஆஜரானவன் நான். அப்போதே ‘உலகநாயகனின் வக்கீல் என்கிற பெருமையோடு வாழ்ந்து விட்டுப் போங்கள், காசெல்லாம் கேட்டுவிடாதீர்கள்’ என்று சொன்னார்கள். கமலுடைய உண்மையான முகம் என்னவென்றால், நடிகர் என்று அவர் ஓரளவு ஒத்துக்கொள்வதே சிவாஜியை மட்டும் தான், மற்றவர்களெல்லாம் நடிகர்களே அல்ல. இந்த நினைப்பு சினிமாவுக்கு ஓகே. ஆனால், அதை அரசியலிலும் கொண்டிருந்ததுதான் இவ்வளவு பெரிய தோல்விக்குக் காரணம். சினிமா ஸ்டன்ட் அல்ல... அரசியல்.

கட்சித் தொடங்குவதற்கு முன்பு ஆறு மாதங்கள் கமலுடன் ட்ராவல் செய்தேன். தன்னை மீறி யாரும் புகழ் வெளிச்சம் பெற்றுவிடக் கூடாது என்கிற எண்ணம் அவரிடமுள்ளது. இது ஒருவித ஹிட்லர் மைண்ட்செட். நிர்வாகிகளை சகஜமாகவோ, சமமாகவோ நடத்த மாட்டார். செலவு செய்பவர்களை அருகில் வைத்துக்கொள்வார், அவர்கள் சற்று சோர்ந்துவிட்டால் விரட்டிவிடுவார். இன்னும் நிறைய சொல்லலாம், வேண்டாம். நான் அப்போதே புரிந்துகொண்டு எஸ்கேப் ஆகிவிட்டேன். பலர் இப்போதுதான் உணர்கிறார்கள்” என்றார்.

ம.நீ.ம-வின் ரியாக்‌ஷனை அறிவதற்கு அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம். “மாற்றத்தைக் கொண்டுவரத்தான் எல்லோரையும் அழைக்கிறார் தலைவர் கமல். தனித்துப் பணியாற்றிவந்த இவர்களையெல்லாம் கமலேதான் பேசி அழைப்புவிடுத்தார். அவர்களின் திறமைகளைக் கட்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அழைத்தார். அவர்களை நம்பி, ஒத்துழைத்து, பணியாற்றவே ஆசைப்பட்டார் கமல். அதனால்தான் முக்கியப் பொறுப்புகளில் அவர்களை அமர்த்தினார். கட்சித் தொடங்கும்போது ‘மக்களுக்கான சேவைக்கு வந்துவிட்டேன், அது முதல்வரானாலும் சரி, கட்சித் தலைவனாகவே இருந்தாலும் சரி தொடர்ந்து செய்வேன்’ என்று கமல் சொன்னதிலிருந்து மாறவேயில்லை. தி.மு.க., அ.தி.மு.க-விலிருந்து பெரும் தலைவர்களெல்லாம் விலகியிருக் கிறார்கள். ஆனால், கட்சி அப்படியேதான் உள்ளது. அது போன்று ம.நீ.ம-வின் பயணத்தை விலகல்கள் ஒருபோதும் தடுக்காது. தலைவரால்தான் கட்சியே இயங்குகிறது. மீண்டும் புத்துணர்ச்சியுடன் கட்சி முன்னுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.

கமலின் கப்சிப் தர்பார்!

‘‘ `தசாவதாரம்’ படத்தில் பத்து வேடங்களில் கமலே நடித்ததைப்போல, கட்சியின் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர்கள் என அனைத்துப் பொறுப்புகளிலும் தானே இருக்க வேண்டுமென கமல் எதிர்பார்க்கிறார். ஆனால், அதற்கு தேர்தல் ஆணையமும் சட்டமும் வழிவகை செய்யவில்லை. அதனால், அந்தப் பொறுப்புகளுக்கு வருபவர்கள் தன்னுடைய முகமாக, தன்னுடைய சிந்தனைக்கு ஒத்துப்போகிறவர்களாக, தான் சொல்வதை மட்டும் கேட்டுக்கொள்பவர்களாக இருக்க வேண்டுமென நினைக்கிறார் கமல். இந்தச் சர்வாதிகார மனப்போக்குதான், கமலின் கட்சி கரைவதற்குப் பிரதான காரணம்’’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இப்படியே போனால், கமலின் ‘கப் சிப்’ தர்பாரில் எத்தனை பேர் மிஞ்சப்போகிறார்கள் என்பதே பிரதான கேள்வி!