Published:Updated:

ரஜினிக்கு டாட்டா... தி.மு.க-வுக்கு திக் திக்...

கமல்
பிரீமியம் ஸ்டோரி
News
கமல்

பல்ஸ் பார்க்கும் கமல்!

“தமிழகத்தில் தகுதியான தலைவராக நான் மட்டுமே இருக்கிறேன்” சினிமா வசனம்போல, தனது கட்சியின் நிர்வாகிகளிடம் தன்னம்பிக்கையுடன் பேசியிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இதை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்களோ, ‘யாருடன் கூட்டணி அமைத்தாலும் முதல்வர் வேட்பாளர் நான்தான்’ என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் கமல் என்கிறார்கள்.

அக்டோபர் 16-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் 40 பேருக்கு மட்டுமே அழைப்புவிடுக்கப் பட்டது. ‘நாளைய ஆட்சி நமது; நாளைய முதல்வர் நம்மவர்’ என்ற வாசகத்துடன் வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. கட்சியின் வாக்கு சதவிகிதம் எவ்வளவு, பலவீனமாக இருக்கும் தொகுதிகள் எவை, வலுவான தொகுதிகள் எவை என்பவை குறித்தெல்லாம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகிகள் சிலர், “சமீபகாலமாக ‘கமல்ஹாசன் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கப்போகிறார்; ரஜினியின் அரசியல் முடிவுக்காகக் காத்திருக்கிறார்’ என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இது நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு இந்தக் கூட்டத்திலேயே தெளிவான பதிலைச் சொல்லிவிட்டார் எங்கள் தலைவர்.

ரஜினிக்கு டாட்டா... தி.மு.க-வுக்கு திக் திக்...

‘ஊழலுக்கு எதிராகவே கட்சி தொடங்கினேன். ஊழல் விஷயத்தில் யாருடனும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். இன்றைக்குத் தமிழக அரசியலில் எடப்பாடியா, ஸ்டாலினா என்ற பிம்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இருவருமே வலுவான தலைவர்கள் இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கான களத்தை நாம்தான் அமைத்துக்கொடுக்க வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் கமல் முதல்வராக வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வியை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். கூட்டணி குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன். முதல்வருக்கான போட்டியில் நாம்தான் இருப்போம். அதை ஏற்றுக்கொள்பவர் களுடன்தான் கூட்டணி’ என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திவிட்டார்.

முன்னதாக ரஜினியுடன் கூட்டணிவைக்கவே கமல் விரும்பினார். அப்போது, ‘முதல்வர் வேட்பாளர் யார்?’ என்கிற சிக்கல் உருவாகும் என்பதை கமலும் யூகித்திருந்தார். அப்போது, ‘நான் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன்’ என்று ரஜினியே சொன்னது கமலுக்கு வசதியாகப் போய்விட்டது. அதனால், இனி ரஜினியே கட்சியைத் தொடங்கி கூட்டணி அமைத்தாலும், கமல்தான் முதல்வர் வேட்பாளர். தி.மு.க தரப்பில் கமலை அணுகியது உண்மைதான். ஆனால், அவர்களுடன் கூட்டணிவைத்தால் தனக்குப் பாதகமே அதிகம் என்று கருதுகிறார். எனவே, தனது தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவரது திட்டமாக இருக்கிறது.

கடைசி நேரத்தில் தி.மு.க கூட்டணி உடையும் என்று கமல் நினைக்கிறார். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து எங்களுக்கு பாசிட்டிவ் சிக்னல் வந்திருக்கிறது. கம்யூனிஸ்ட்களும் கழன்று கொண்டால், அவர்களையும் அரவணைக்க கமல் தயாராக இருக்கிறார். ஒருவேளை கூட்டணியே இல்லையென்றாலும் தனித்து நிற்கவும் தயாராக இருக்கிறார்” என்றவர்கள், தங்கள் கட்சியின் தேர்தல் வியூகங்கள் பற்றியும் சொன்னார்கள்.

“தற்போது ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியையும் தனது அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார் கமல். இதைப் பற்றியும் கூட்டத்தில் பேசியவர், ‘பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே தொலைக்காட்சி வழியாக நான்கு கோடி மக்களைச் சந்தித்திருக்கிறேன். வரவிருக்கும் 14 வாரங்களில் இன்னும் பல கோடி மக்களைச் சந்திப்பேன். அந்த நிகழ்ச்சியில் கட்சியை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும், எனது கருத்துகளை மக்களிடம் சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்’ என்றும் சொன்னார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 55 சட்டமன்றத் தொகுதிகளில் 8 முதல் 12 சதவிகிதம் வரை வாக்குகள் வாங்கியிருக்கிறோம். கொஞ்சம் முயன்றால், மேலும் 55 தொகுதிகளில் இதே அளவிலான வாக்குகளைப் பெற முடியும். எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் 110 தொகுதி களில் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குழுவை நியமிக்கப்போகிறோம். அந்தக் குழுவினர் இப்போதே தேர்தல் வேலைகளைத் தொடங்கி, அந்தத் தொகுதிக்கான வேட்பாளரையும் அடையாளம் காண வேண்டும். இது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது” என்கிறார்கள்.

ரஜினிக்கு டாட்டா... தி.மு.க-வுக்கு திக் திக்...

கமலின் காய்நகர்த்தல்களை மற்ற எந்தக் கட்சியைவிடவும் தி.மு.க உற்று கவனித்துவருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியால் ஆட்சியை நழுவவிட்ட அந்தக் கட்சி, இந்த முறை கமலின் கூட்டணியால் எந்தச் சேதாரமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. இதனால், ‘கமலுக்கு எதிராக எதுவும் பேச வேண்டாம்’ என்றும் நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறதாம் தி.மு.க தலைமை.

‘பிக் பாஸ்’ பாணியில் கட்சிகளின் பல்ஸ் பார்க்கத் தொடங்கிவிட்டார் கமல். தனித்துப் போட்டியிடுவாரா... கூட்டணியில் போட்டி யிடுவாரா என்பது அநேகமாக ‘பிக் பாஸ்’ முடிவதற்குள் தெரிந்துவிடும்!

“நானே தலைவன்!”

கூட்டத்தில் நிர்வாகி ஒருவர், ``தமிழகத்தில் தகுதியான தலைவராக நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள்’’’ என்று சொன்னபோது, அதற்கு பதிலளித்த கமல், ``நானும் அதை ஒப்புக்கொள்கிறேன். காந்தி, நேரு, காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் இல்லாமல்போனதால், அவர்களின் தேவை தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை நிரப்பவே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்” என்று கொஞ்சமும் தயங்காமல் சொல்லியிருக்கிறார்!