Published:Updated:

கமலைப் பொறுத்தவரை தலையாட்டி பொம்மைகள்தான் நேர்மையாளர்கள்!

- சுளீர் மகேந்திரன்

பிரீமியம் ஸ்டோரி
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் கட்சியைவிட்டு விலகியிருக்கிறார். கமல் மீதும் கட்சிக்கான தேர்தல் வியூகம் வகுத்துத் தரும் நிறுவனமான ‘சங்கையா சொல்யூஷன்ஸ்’ மீதும் 12 பக்கங்களுக்குப் புகாரை அள்ளி வீசிவிட்டுச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் டாக்டர் மகேந்திரனைச் சந்தித்துப் பேசினோம்...

‘‘நீங்கள் விலகியதற்கு ‘சங்கையா சொல்யூஷன்ஸ்’ மட்டும்தான் காரணமா... 12 பக்கங்களிலும் அவர்களைப் பற்றியே புகார் வாசித்திருக்கிறீர்களே?’’

‘‘முழுக்க முழுக்க அந்த நிறுவனம்தான் காரணம். இதைக் கடந்த ஓராண்டாகவே கமலிடம் எடுத்துச் சொல்லிவந்திருக்கிறேன். ஒருங்கிணைந்து செயல்படுதல் என்ற பேச்சுக்கே கட்சியில் இடமில்லாமல் போய்விட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரியிலேயே அந்த நிறுவனத்தை நடத்தும் விஜய் டி.வி மகேந்திரன் மற்றும் சுரேஷ் ஐயர் மீது புகாரளித்தேன். ஒருமுறை எங்கள் மூவரையும் வைத்தே கமல் பேசினார். அப்போதுகூட, ‘தேர்தல் முடியும் வரைதான் இவர்கள் இருப்பார்கள்; அப்புறம் நானே அனுப்பிவிடுகிறேன். அதுவரை நானே இவர்களைக் கண்காணிக்கிறேன்’ என்றார். ஆனால், கண்காணிக்கவுமில்லை; வெளியேற்றவுமில்லை. தலைவருக்கும் நிர்வாகிகளுக்குமான கம்யூனிகேஷனையே அவர்கள் இடைமறித்துவிட்டார்கள். பல கோடிகளில் ஃபீஸ் வாங்கிக்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை.

கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்துக்கூட நிர்வாகிகள் யாரிடமும் கமல் பேசவில்லை. திடீரென்று ஐ.ஜே.கே., ச.ம.க தலைவர்கள் வந்தார்கள். முதலில் 18 தொகுதிகள் என்றார்கள்; பிறகு பார்த்தால் 80 தொகுதிகளை வாரிக் கொடுத்துவிட்டார்கள். அப்போதே மக்களுக்குக் கட்சி மீதிருந்த மரியாதை போய்விட்டது.

நான் போட்டியிடுவதற்காக, கமலின் அனுமதியுடன் கோவை தெற்கில் தேர்தல் பணிகளைத் தொடங்கினேன். தேர்தலுக்கு ஒரு மாதம் முன்புவரை கமலுக்கான தொகுதியைக்கூட முடிவு செய்யாமல் இருந்துவிட்டு, திடீரென கோவை தெற்குத் தொகுதியை கமலுக்குத் தேர்வு செய்தார்கள். அப்போதுகூட கமலிடம், ‘சங்கையாவை உங்கள் தொகுதிக்குள் அனுமதிக்காதீர்கள்’ என்றேன். ஆனால், உள்ளே விட்டார்; தோற்றும்போனார்.’’

‘‘மே 6-ம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் என்னதான் நடந்தது?’’

‘‘விலகும் முடிவெடுத்து கமலைச் சந்திக்க நேரம் கேட்டேன். மே 6-ம் தேதி வரச் சொன்னார். சந்தோஷ்பாபு, மௌரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளையும் அழைத்திருந்தார். எல்லோரிடமும் ‘இந்தத் தோல்விக்கு நீங்கள் எல்லோரும்தான் காரணம். அதனால், பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக எழுதிக் கொடுங்கள். எப்போது எனக்குத் தோன்றுகிறதோ அப்போது மீண்டும் பொறுப்பு கொடுக்கிறேன்’ என்றார் கமல். சிலர் மறுத்துப் பேச, ‘திஸ் இஸ் மை பார்ட்டி’ என ஆணவமாகச் சொன்னார். என்னிடமும் ராஜினாமா கடிதம் கேட்க, ‘நான் கட்சியிலிருந்தே விலகிக்கொள்கிறேன்’ என்று விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டேன்.’’

‘‘மொத்த குற்றச்சாட்டையும் சங்கையா மீதே சுமத்துகிறீர்கள்... நீங்கள் மட்டுமே நல்லவரா?’’

‘‘அப்படியில்லை. எனது அறிக்கையில்கூட கட்சியில் பல நல்லவர்கள், திறமைசாலிகள் இன்னும் இருக்கிறார்கள் என்றுதான் சொல்லியிருக்கிறேன். சங்கையா நிறுவனர்களைப் பற்றி நான் சொன்ன கருத்தை, கட்சியில் உள்ளவர்கள் மீது திசைதிருப்புவது நியாயமல்ல. நான் கொடுத்திருக்கும் 12 பக்க அறிக்கையில் ஒன்றைக்கூட அவர்களால் மறுக்க முடியாது. நாங்கள் அனைவரும் உண்மையாகவே உழைத்திருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் நான் பல கோடிகளைக் கட்சிக்காக இழந்திருக்கிறேன். செலவு செய்தது எனக்குப் பிரச்னையில்லை... அதற்கான பலனில்லை என்பதுதான் வருத்தம்.’’

கமலைப் பொறுத்தவரை தலையாட்டி பொம்மைகள்தான் நேர்மையாளர்கள்!

‘‘தி.மு.க-வுக்கு கொங்குப் பகுதியில் சரியான ஆட்கள் இல்லாததால் உங்களை அழைத்தார்கள். அதனால்தான் நாடகம் ஆடிவிட்டு விலகியதாகச் சொல்கிறார்களே?’’

‘‘தி.மு.க-வுக்குச் செல்ல வேண்டும் என்றால், எது சரியான தருணம்? சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்றால்தானே சீட் வாங்கி, போட்டியிட்டு ஜெயித்திருக்க முடியும்? ஆனால், நான் விலகியதோ தேர்தலுக்குப் பின்னர்தானே! குற்றம் சொல்வதற்கு அடிப்படை லாஜிக் வேண்டாமா? இப்போது மட்டுமல்ல... பல காலமாகவே தி.மு.க-வுக்கு கொங்குப் பகுதியில் ஆட்களில்லை. நான் போக வேண்டுமென்று நினைத்திருந்தால், எப்போதோ சென்றிருப்பேன். கமல் கட்சியை மறுநிர்மாணம் செய்வதற்காகப் பலரையும் ராஜினாமா செய்யவைத்துள்ளார். முதலில் கமல் தனது மூளையை மறுநிர்மாணம் செய்ய வேண்டும். சரியான நபர்களின் ஆலோசனைகளைப் பெற்று கட்சியை நடத்த வேண்டும்.’’

‘‘கமல் உங்களை துரோகி என்கிறாரே?’’

‘‘தனக்குப் பிடித்தமான கருத்துகளைச் சொல்லும் தலையாட்டி பொம்மைகளை நேர்மையாளர்கள் என்பார். அப்படியில்லாதவர்களை நேர்மையற்றவர்கள், திறமையற்றவர்கள் என்றுதான் கமல் சொல்வார். அந்த வார்த்தையை சங்கையா நிறுவனர்கள்தான் பயன்படுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த அறிக்கையில் கமலின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டதால், அதற்கான பொறுப்பு கமலைத்தான் சாரும்.’’

‘‘நல்லவர்களைத் தலையெடுக்கவிடவில்லை... உறவினர்களைக் கட்சியில் இணைத்தீர்கள் என்கிறார்களே?’’

‘‘கட்சியில் என்னைச் சார்ந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். நான் யாரை வளரவிடாமல் தடுத்தேன் என்பதை கமல் முதலில் விளக்கட்டும்.’’

‘‘எஸ்.பி.வேலுமணி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமனுக்குச் சாதகமாகச் செயல்பட்டு அவர்கள் வெற்றிபெற வழிவகை செய்ததாகச் சொல்கிறார்களே?’’

‘‘முதலில் தி.மு.க என்றார்கள். அப்புறம் அ.தி.மு.க என்கிறார்கள். இதைக் கேட்டு சிரிப்பதா வருந்துவதா என்று தெரியவில்லை. முதலில் அவர்கள் ஒரு முடிவுக்கு வரட்டும். அதன் பிறகு என்மீது குற்றச்சாட்டுகளை வைக்கட்டும்!’’

‘‘உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன... தனிக் கட்சியா... மாற்றுக் கட்சியில் சேரப்போகிறீர்களா?’’

‘‘இருக்கும் கட்சிகள் போதும். புதிய கட்சிக்கான தேவை இல்லை. தொடர்ந்து அரசியலில்தான் நீடிப்பேன். நிதானமாக யோசித்து முடிவெடுப்பேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு