Published:Updated:

காங்கிரஸுக்கு மான உணர்ச்சி எப்போதுதான் வரும்? - விளாசும் பழ.கருப்பையா

பழ.கருப்பையா
பிரீமியம் ஸ்டோரி
பழ.கருப்பையா

எடப்பாடி பழனிசாமி போன்ற ஊழல்வாதி வர வேண்டுமா அல்லது மு.க.ஸ்டாலின் போன்ற ஊழல்வாதி வர வேண்டுமா என்பதுதான் இங்கே கேள்வியாக இருக்கிறது

காங்கிரஸுக்கு மான உணர்ச்சி எப்போதுதான் வரும்? - விளாசும் பழ.கருப்பையா

எடப்பாடி பழனிசாமி போன்ற ஊழல்வாதி வர வேண்டுமா அல்லது மு.க.ஸ்டாலின் போன்ற ஊழல்வாதி வர வேண்டுமா என்பதுதான் இங்கே கேள்வியாக இருக்கிறது

Published:Updated:
பழ.கருப்பையா
பிரீமியம் ஸ்டோரி
பழ.கருப்பையா
‘காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா, ஜனதா தளம், தி.மு.க., ம.தி.மு.க., மீண்டும் காங்கிரஸ், அ.தி.மு.க., மீண்டும் தி.மு.க எனத் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்திலும் வலம்வந்த மூத்த தலைவர் பழ.கருப்பையா, இப்போது ‘மக்கள் நீதி மய்ய’த்தில் மையம்கொண்டிருக்கிறார். அவரைச் சந்தித்தோம்...

‘‘கமல்ஹாசனின் ம.நீ.ம., ‘பா.ஜ.க-வின் பி டீம்’ என்ற விமர்சனம் தொடர்ச்சியாக வைக்கப்படுகிறதே... இதை எப்படி மறுக்கப்போகிறீர்கள்?’’

‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, சமயச் சார்பின்மையைக் கருத்தில்கொண்டு, அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ‘மோடியைத் தோற்கடிக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டது நியாயமான காரணமாக இருந்தது. ஆனால், இது சட்டமன்றத் தேர்தல்... எடப்பாடி பழனிசாமி போன்ற ஊழல்வாதி வர வேண்டுமா அல்லது மு.க.ஸ்டாலின் போன்ற ஊழல்வாதி வர வேண்டுமா என்பதுதான் இங்கே கேள்வியாக இருக்கிறது. எனவே, சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்சியை ‘பா.ஜ.க-வின் பி டீம்’ என்று விமர்சிப்பதே பொருத்தமற்றது. அதற்குப் பொருளே கிடையாது. இப்படியே பேசிக்கொண்டுபோனால், நகரசபைத் தேர்தல், கிராமசபைத் தேர்தல் வரையிலும்கூட இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். இது என்ன நியாயம்?’’

‘‘ம.நீ.ம மூன்றாவது அணியாகப் பார்க்கப்படும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரமே ‘மூன்றாவது அணி என்பது பா.ஜ.க-வுக்கு மறைமுகமாக உதவுகிற முயற்சி’ என்றுதானே சொல்கிறார்?’’

‘‘தமிழக அரசியலில் வேர்பிடித்து நிற்கிற கட்சியல்ல பா.ஜ.க. இங்கே மிகக்குறைவான இடங்களில் நிற்கப்போகிற பா.ஜ.க தோற்றாலும் வெற்றிபெற்றாலும் தமிழக அரசியலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அப்படியிருக்கும்போது, நன்கு விவரம் தெரிந்த ப.சிதம்பரம் போன்றவர்களே இதுபோல் விமர்சிப்பது எனக்குப் புரியவில்லை. நான் அறிந்தவரையில், தி.மு.க-தான் பா.ஜ.க-வின் பி டீம்! `1.7 லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று உங்களுக்குத் தெரியுமா... இவ்வளவு பெரிய 2ஜி ஊழலைச் செய்தது காங்கிரஸ்-தி.மு.க கூட்டணிதான்’ என்ற ஒரே குற்றச்சாட்டை நாடு முழுக்க பிரசாரமாக எடுத்துச் சென்றுதான் முதன்முதலாக பிரதமர் பதவியையே பிடித்தார் மோடி. தவறுகள் செய்து பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கக் காரணமாக இருந்தது தி.மு.க-தான். பா.ஜ.க ஜெயிக்க எந்தவகையில் ஒரு கட்சி காரணமாக இருந்தாலும், அது பா.ஜ.க-வின் பி டீம்தான். மக்கள் நீதி மய்யம் அப்படியல்ல!’’

‘‘தி.மு.க கூட்டணியிலிருந்து பிரிந்து வந்து, மூன்றாவது அணியை காங்கிரஸ் கட்சி உருவாக்க வேண்டும் என்கிறீர்களா?’’

பழ.கருப்பையா
பழ.கருப்பையா

‘‘இந்தத் தேர்தலால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரப்போகிறதா அல்லது டெல்லி அரசியலில் மாறுதல் ஏற்படப்போகிறதா... ஒன்றும் இல்லையே! பின் ஏன் இவ்வளவு மானங்கெட்டு தி.மு.க பின்னால் காங்கிரஸார் ஓடுகிறார்கள்? `மூன்றாவது அணியாக நாம் வர வேண்டும்’ என்ற மான உணர்ச்சி காங்கிரஸுக்கு இப்போதும் வரவில்லையென்றால், பின் எப்போதுதான் வரும்? காங்கிரஸிலுள்ள ஏழெட்டு தலைவர்கள் எம்.எல்.ஏ ஆவதற்காகவும், எம்.பி-க்கள் ஆவதற்காகவும்தான் இப்படி மானங்கெட்டுத் திரிகிறார்கள் என்றே நான் சொல்வேன்!’’

‘‘எவ்வளவு விமர்சித்தாலும், ‘தி.மு.க-காங்கிரஸ்’ இடையிலான உறவு வலுவாக இருப்பதுதான் உங்களுக்கான கோபமா?’’

‘‘யார் வலுவாக இருக்கிறார்கள்? புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் ஒழுங்காக நடைபெற்றுக்கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியைக் கலகலக்க வைத்ததன் தொடக்கப்புள்ளியே தி.மு.க-தான்! ‘30-க்கு 30 இடங்களிலும் தி.மு.க வெற்றிபெறும்; இல்லையென்றால், நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று ஜெகத்ரட்சகனைப் பேசவைத்து காங்கிரஸ் ஆட்சியை ஆட்டம்காண வைத்ததோடு, கடைசியில் ஒட்டுமொத்தமாக காங்கிரஸின் வேட்டியையே உருவிவிட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அதே தி.மு.க-வின் வாசலில், ‘எட்டு முழ வேட்டி’ கேட்டு காங்கிரஸார் நின்றுகொண்டிருக்கிறார்கள். இதுதான் மானமுள்ள அரசியலா?’’

‘‘எதிர்க்கட்சியான தி.மு.க-வை விமர்சிக்கிற அளவுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அ.தி.மு.க-வை நீங்கள் விமர்சிப்பதே இல்லையே?”

‘‘இரண்டு திராவிடக் கட்சிகளுமே ஒழிக்கப்பட வேண்டியவைதான். தி.மு.க. - அ.தி.மு.க இடையே ஒரேயொரு வித்தியாசம்தான்... காதிலுள்ள கடுக்கனைக் கழற்றிக்கொண்டு அ.தி.மு.க-காரன் போவான் என்றால், தி.மு.க-காரனோ காதையே அறுத்துக்கொண்டு போய்விடுவான்!’’

‘‘நீங்கள் கட்சிகள் பல மாறிப் பயணிப்பதற்கான காரணம் என்று எதைத்தான் சொல்வீர்கள்?’’

‘‘ஒரே கட்சியில் இருக்க வேண்டிய தேவை பொன்முடிக்கும் துரைமுருகனுக்கும் இருக்கிறது. அதனால்தான், ‘நகம் முளைத்த நாள் முதலாக நான் இங்கேயே இருக்கிறேன்’ என்று சொல்கிறார்கள். நியாயமானதுதான். இவர்கள் அங்கேயே இருந்தால்தான் படிக்கட்டில் தண்ணீர் உயரும்போது கால் நனைக்க முடியும். ஆரம்ப காலங்களில் எம்.ஜி.ஆரிடமிருந்து நிதியுதவி பெற்றவர் துரைமுருகன். இப்போது அவரின் மகன் தேர்தலில் நின்றபோது, பல கோடி ரூபாய் அள்ளப்பட்டது என்றால், இவர்களின் வருவாய் நிலை எவ்வளவு மட்டம் உயர்ந்திருக்க வேண்டும்!

இந்த வசதியைத் தொடர்ந்து ஒரு கட்சியில் இருந்துதான் அடைய முடியுமே தவிர, மாறி மாறி அடைய முடியாது. ஆகவே, அவர்கள் கட்சி மாறாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. எனக்கோ வெற்றி தோல்வி பற்றிய கவலையெல்லாம் கிடையாது; செய்கிற காரியம் நல்லதாக இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பவன். எனவே, நான் கட்சி மாறியதற்கும் நியாயமான காரணமிருக்கிறது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism