Published:Updated:

"நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த ஒரு விஷயம் நடைமுறைக்கு வந்திருக்கிறது" - வரவேற்ற மநீம

மக்கள் நீதி மய்யம் - கமல்

``உள்ளாட்சி அமைப்புகளில் மக்களாட்சி மலர, ஏரியா சபைகள் உருவாக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தி, தமிழக அரசின் தலைமைச் செயலரை நேரில் சந்தித்து தலைவர் கமல்ஹாசன் மனு அளித்தார்.” - மநீம

"நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த ஒரு விஷயம் நடைமுறைக்கு வந்திருக்கிறது" - வரவேற்ற மநீம

``உள்ளாட்சி அமைப்புகளில் மக்களாட்சி மலர, ஏரியா சபைகள் உருவாக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தி, தமிழக அரசின் தலைமைச் செயலரை நேரில் சந்தித்து தலைவர் கமல்ஹாசன் மனு அளித்தார்.” - மநீம

Published:Updated:
மக்கள் நீதி மய்யம் - கமல்

தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்டு 15) காந்தி ஜயந்தி (அக்டோபர் 2), உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர் 1) ஆகிய தினங்களில் கிராமசபைக் கூட்டம் நடைபெறும். இதில் மக்களின் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்படும். தற்போது கிராமசபைக் கூட்டம்போல நகரசபை, மாநகரசபைக் கூட்டமும் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

கிராமசபைக் கூட்டம்
கிராமசபைக் கூட்டம்

இந்த நிலையில், அரசின் இந்த முடிவை மக்கள் நீதி மய்யம் வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், "1994-ல் இயற்றப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் மூலம் அறிமுகமானது கிராமசபை. இதன் அதிகாரம் சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்குச் சற்றுக் குறைந்தது என்றாலும், மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் சபை இதுவேயாகும். கிராமசபையின் சிறப்பை உணர்ந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ஒவ்வொரு மேடையிலும் இது குறித்து தவறாமல் எடுத்துரைத்தார். மேலும், தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, செயல்படாமல் இருந்த கிராமசபையை, வருடத்தின் குறிப்பிட்ட நாள்களில் நடத்த வேண்டுமென உறுதி செய்ய உறுதுணையாக இருந்தார்.

இது மட்டுமின்றி, கிராமசபைக் கூட்டங்களைப்போல, நகரப் பகுதி மக்களின் கருத்துகளை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் நகர, மாநகரசபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. ஏரியா கமிட்டி, வார்டு கமிட்டி, நகரசபை போன்ற, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வலு அளிக்கக்கூடிய விஷயங்களைத் தொடர்ந்து வலியுறுத்திவந்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்தான்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

உள்ளாட்சி அமைப்புகளில் மக்களாட்சி மலர, ஏரியா சபைகள் உருவாக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தி, தமிழக அரசின் தலைமைச் செயலரை நேரில் சந்தித்து தலைவர் கமல்ஹாசன் மனு அளித்தார். கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, கிராமசபையைப்போல, ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தேர்தல் வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கிராமசபைக் கூட்டம்போல நகரசபை, மாநகரசபைக் கூட்டங்களும் நடைபெறும் என முதன்முறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பல்லாவரம் அருகேயுள்ள பம்மல் 6-வது வார்டில் வரும் நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் மாநகரசபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த ஒரு விஷயம் நடைமுறைக்கு வந்திருப்பது பாராட்டுக்குரியது. நகர, மாநகரசபைகளிலும், உள்ளாட்சிகளில் நடைபெறும் பணிகள், அடுத்ததாக நடைபெறவேண்டிய திட்டங்கள், மக்களுடைய கோரிக்கைகளைக் கேட்டு, தீர்மானம் நிறைவேற்றி, அரசின் கவனத்துக்குக்ல் கொண்டு சென்று, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

கமல், மக்கள் நீதி மய்யம்
கமல், மக்கள் நீதி மய்யம்

மேலும், குடியரசு தினம், தொழிலாளர் நாள், சுதந்திர தினம், காந்தி ஜயந்தி, உலக தண்ணீர் தினம், உள்ளாட்சி தினம் என கிராமசபை நடைபெறும் நாள்களில், நகர, மாநகரசபைகளையும் நடத்த வேண்டும். உரிய விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளின்படி இவற்றை அமைத்து, கிராமசபைக் கூட்டங்கள் செம்மையாகச் செயல்படுவதையும், சரியான முறையில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், வெறும் கண்துடைப்பாக இது இருந்துவிடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.