Published:Updated:

`வயிற்றிலே எட்டி உதைத்தார்; பாகிஸ்தானி என்றார்!’- சிறைக் காட்சிகளை விவரிக்கும் சமூகச் செயற்பாட்டாளர்

சதாப் ஜாஃபர்
சதாப் ஜாஃபர்

லக்னோ போராட்டத்தில் கைது செய்யப்பட்டபோது காவலர்களின் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சதாப் ஜாஃபர் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சமூகச் செயற்பாட்டாளர் சதாப் ஜாஃபர் (Sadaf Jafar), முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி தாராபுரி இருவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான தாராபுரியை முதலில் வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். அவர் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுக்கவில்லை `Save Democracy' என்ற பதாகையைக் கையில் வைத்தபடி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

எஸ்.ஆர்.தாராபுரி
எஸ்.ஆர்.தாராபுரி

சமூகச் செயற்பாட்டாளராக சதாப் ஜாஃபர் லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைதானார். சிறையில் காவல்துறையினர் சித்ரவதை செய்ததாகக் கூறியுள்ளனர். சதாப் ஜாஃபர் பேசும் போது, `என் பெயரை வைத்து என்னை பாகிஸ்தானி என அழைத்தார்கள். போலீஸாரால்தான் தாக்கப்பட்டேன். என்னைக் காவல்நிலையத்தில் வைத்திருந்தார்கள். ஐ.ஜி சாகாப் என்னைப் பார்க்கவேண்டும் எனக் கூறியதாகக் காவலர்கள் என்னிடம் கூறினர். அவர் எனக்கு உதவுவார், நான் கைதான விவரத்தை எனது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்துவார் என நம்பினேன். ஆனால் அங்கு நடந்தது வேறு.

`என் தம்பி கலகக்காரன் இல்ல!’- வன்முறை சம்பவத்தால் கலங்கும் லக்னோ மாணவர்களின் குடும்பத்தினர்

அவரது அறைக்குச் சென்றபோது கடுமையாகத் தாக்கப்பட்டேன். ஒரு பெண் காவலரை அழைத்து என்னை அடிக்கக் கூறினார். ஆனால், அப்போதும் அவர் திருப்தியடையவில்லை. என் தலைமுடியைப் பிடித்து இழுத்தார். வயிற்றில் எட்டி உதைத்தார். அங்கிருந்த காவலர்கள் யாரும் பேட்ஜ் அணிந்திருக்கவில்லை. அவர்கள் குண்டர்களைப் போல் நடந்துகொண்டனர்’’ என வேதனையுடன் கூறினார்

சதாப் ஜாஃபர்
சதாப் ஜாஃபர்

எஸ்.ஆர்.தாராபுரி கூறுகையில், ``டிசம்பர் 20-ம் தேதி காலை 11 மணிக்கு வீட்டிலிருந்து காவலர்கள் என்னை அழைத்துச் சென்றனர். பகல்முழுவதும் காஸிப்பூர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தேன். மாலையில் Hazratganj காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டேன். என்னை 7 மணிக்குக் கைது செய்ததைப் போல் காட்டினர். எனக்கு சாப்பிட எதுவும் வழங்கவில்லை. இரவில் எனக்குப் போர்வை போன்ற எதுவும் வழங்கவில்லை. அதிக குளிராக இருந்ததால் காவலர்களிடம் போர்வை கேட்டேன். ஆனால், அவர்கள் எனக்கு போர்வை மற்றும் உணவுகளை வழங்க மறுத்துவிட்டனர்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு