Published:Updated:

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜின்பிங்! - பிரதமரோடு பேசப் போகும் விஷயங்கள் என்னென்ன?

''காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட செல்வச்செழிப்பையும் நிம்மதியான வாழ்க்கையையும் பார்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புரட்சி வெடிக்க வேண்டும்!''

modi- Xi Jinping
modi- Xi Jinping

வரலாற்றுச் செழுமைகொண்ட மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியைச் சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்தித்துப் பேசுகிறார். உலகின் சக்திவாய்ந்த வல்லரசு நாட்டின் அதிபர் மாமல்லபுரத்துக்கு வரவிருப்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு முனைப்புகள் காட்டப்பட்டு வருகின்றன. மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் ஒருவர், வெளிநாட்டுத் தலைவரைச் சந்திக்கும் நிகழ்சி நடப்பது இதுவே முதன்முறை.

Xi Jinping- modi
Xi Jinping- modi

இந்தச் சந்திப்பு அக்டோபர் மாதம் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரபூர்வ சந்திப்பு இல்லை என்பதால், எந்தவிதமான நிகழ்ச்சி நிரலும் கிடையாது. இந்த சந்திப்பின்போது உலக விவகாரங்கள் விவாதிக்கப்படும். அதேநேரம், காஷ்மீர் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கப் போவதில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இரு தலைவர்களுமே காஷ்மீர் விவகாரம் பற்றிப் பேச விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா ஷூனிங் கூறுகையில், '' காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான பிரச்னை. அமைதியான பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். பேச விருப்பமில்லாத விவகாரங்களைப் பேசாமல் இருப்பது இரு தலைவர்களுடைய உரிமை'' எனத் தெரிவித்துள்ளார். இதனால், மாமல்லபுர முறைசாரா உச்சி மாநாட்டில் காஷ்மீர் பிரச்னை விவாதிக்கப்படாது என்றே தெரிகிறது. இதற்கிடையே, ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டுமென்று காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கும் கூறியுள்ளார்.

காஷ்மீர் மக்கள்மீது நாம் காட்டும் அன்பு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை நம்முடன் இணைய வைக்கும்.
சத்யபால் மாலிக்

''காஷ்மீரில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். காஷ்மீரில் மீண்டும் செழுமை திரும்ப வேண்டும். காஷ்மீர் மக்கள்மீது நாட்டின் மற்ற பகுதி மக்கள் அன்பைப் பொழிய வேண்டும். காஷ்மீர் மாநிலத்தில் ஏற்படும் செல்வச்செழிப்பையும் நிம்மதியான வாழ்க்கையையும் பார்த்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புரட்சி வெடிக்க வேண்டும். அன்பால் மட்டுமே இது சாத்தியம். நாம் காட்டும் அன்பைப் பார்த்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தானாகவே இந்தியாவுடன் இணைய முன்வருவார்கள். இதுதான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க சிறந்த வழி'' என்று சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.