Published:Updated:

“மோடிக்கு எதிராக மம்தா..!” - கிஷோரின் கில்லாடி அரசியல் எடுபடுமா?

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

ராகுலிடமிருந்தும் மம்தாவுக்கு பாசிட்டிவான பதில் வந்த பிறகே, மம்தாவை டெல்லிக்கு அழைத்து சோனியாவைச் சந்திக்கவைத்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``பா.ஜ.க ஒன்றும் வீழ்த்த முடியாத கட்சியல்ல. சரியான திட்டமிடுதலும், ஒருங்கிணைப்பும் இருந்தால் பா.ஜ.க-வை வீழ்த்திவிடலாம்” என்கிற கூற்றை எதிர்க்கட்சிகளிடம் முன்வைத்திருக்கிறார் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பா.ஜ.க-வுக்கு எதிராக இருக்கும் கட்சிகளின் தலைவர்களை அடுத்துதடுத்து சந்தித்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் கிஷோர் இறங்கியிருப்பது மத்தியில் ஆளுங்கட்சியாக பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!
ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!

2021-ம் ஆண்டு மே மாதம் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் பணியாற்றிய தி.மு.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தன. இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிஷோர், ``அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் ஆலோசனை கூறும் பணியை இனி செய்யப்போவதில்லை” என்று அறிவித்தார். ஆனால் அடுத்த சில நாள்களிலேயே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை இரண்டு முறை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சரத் பவாரை வைத்து மூன்றாவது அணியைக் கட்டமைக்க கிஷோர் முயல்வதாகச் செய்திகள் வெளியாகின.

ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியையும் கிஷோர் சந்தித்தார். அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்து பா.ஜ.க-வுக்கு எதிராக பிற கட்சிகளுடன் அணி சேருவதன் அவசியத்தை உணர்த்தினார். இதன் பிறகு வட இந்தியாவில் மேலும் சில கட்சிகளின் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தார் கிஷோர். இந்தச் சந்திப்புகளின் நோக்கமே ``வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்” என்பதாக இருந்தது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி தனித்து நின்று மட்டுமே பா.ஜ.க-வை வீழ்த்த முடியாது என்பதால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்குகளை ஒரே அணிக்குள் கொண்டுவரும் திட்டத்தை இப்போது கிஷோர் கையில் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் கிஷோருடன் ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள்.

மம்தா - சோனியா சந்திப்பு
மம்தா - சோனியா சந்திப்பு

இந்தியாவில் மோடி என்கிற வலுவான பிம்பத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான ஒரு தலைவரை முன்மொழிய வேண்டும் என்று நினைக்கிறார் பிரசாந்த் கிஷோர். அவரின் சாய்ஸாக இருப்பதே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியாம். மேற்கு வங்கத்தில் மோடி, அமித் ஷாவுக்கு எதிராக மம்தா காட்டிய அதிரடி நாடு முழுவதும் அவருக்கு என்று தனி அடையாளத்தை பெற்றுத்தந்தது. தீதி (DIDI) என்கிற அந்த அடையாளம் இந்தியாவிலுள்ள அனைத்து மக்களிடத்தும் பாசிட்டிவாகப் பரவியது. எனவே, மோடிக்கு எதிராக அணி சேரும் எதிர்க்கட்சிகளின் சாய்ஸாக மம்தா இருப்பது பலமாக இருக்கும் என்பதே பிரசாந்த் கிஷோரின் திட்டம். இந்தத் திட்டத்தை ஏற்கெனவே ராகுல் காந்தியிடம் சொல்லியிருக்கிறார் பி.கே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு மம்தாவிடமும் இது குறித்துப் பேசியிருக்கிறார். சரத் பவாருக்கு நீண்ட நாள்களாக பிரதமர் பதவி மீது ஒரு கண் இருந்தாலும், இப்போதைய நிலையில் அவரை முன்னிறுத்துவது பா.ஜ.க-வுக்குத்தான் சாதகமாக அமைந்துவிடும் என்று கிஷோர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதன் பிறகு ராகுலிடமிருந்தும் மம்தாவுக்கு பாசிட்டிவான பதில் வந்த பிறகே, மம்தாவை டெல்லிக்கு அழைத்து சோனியாவைச் சந்திக்கவைத்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். எலியும் பூனையுமாக இருந்த காங்கிரஸ் கட்சியையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் ஒரே அணிக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லாத விஷயமாக இருந்தது. அதை இப்போது சாத்தியப்படுத்த ஆரம்பித்திருக்கிறார் கிஷோர்.

மம்தா பானர்ஜி, மோடி
மம்தா பானர்ஜி, மோடி

மற்றொருபுறம் பா.ஜ.க-வின் பலம், பலவீனம் உள்ளிட்டவற்றையும் பிரசாந்த் கிஷோர் ஆராய்ந்துவருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க வென்ற வாக்கு சதவிகிதம் 38%. அதேநேரம், எதிர்க்கட்சிகளுக்கும் பா.ஜ.க-வுக்கும் இருந்த வாக்கு சதவிகித வித்தியாசமே மூன்று சதவிகிதம் என்பதையும் கிஷோர் எதிர்க்கட்சிகளிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார். வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதேநேரம் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அந்தக் கட்சியால் பெரிதாக வாக்குகுளைப் பெற முடியவில்லை. அந்த மாநிலங்களைக் குறிவைத்து வேலை செய்வதோடு, வட மாநிலங்களில் எந்தெந்தத் தொகுதியில் பா.ஜ.க-வுக்கு செல்வாக்கு இல்லை என்கிற விவரங்களையும் கிஷோர் டீம் ரெடி செய்திருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக மம்தா?! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதரிக்குமா?

அதேபோல் அடுத்த ஆண்டு உத்தரபிரேதசத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்தத் தேர்தலிலும் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய வைக்கும் திட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறார் கிஷோர். அவரின் இந்தத் தொடர் முயற்சியினாலேயே ஆகஸ்ட் 2-ம் தேதி அன்று 17 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் நடத்த முடிந்தது. குறிப்பாக இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. அதாவது பா.ஜ.க-வுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை இப்போது ஒன்றிணைக்கும் பிராசாந்தின் திட்டத்தில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.

ராகுலுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள்
ராகுலுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள்

``கிஷோரின் வியூகம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கைகொடுத்தால் பா.ஜ.க-வுக்கு அது கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஏற்கெனவே பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றவிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவில் சில வியூகங்களையும் கிஷோர் வடிவமைக்கவிருக்கிறார். அப்படி நடந்தால் பா.ஜ.க உஷாராக வேண்டிய நேரம்” என்று பா.ஜ,க தரப்பினரே கூறுகிறார்கள்.

கிஷோரின் இந்தத் திட்டத்தை வழிமொழியும்விதமாகவே நேற்று காலை 17 கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய ராகுல், ``நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வலிமையான இயக்கமாக மாற வேண்டும். நமது குரல் சக்தி வாய்ந்த குரலாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான நேரம் நெருங்கிக்கொண்டே இருப்பதால், இதுபோல பல காய்நகர்த்தல்களை இனி காணலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு