சினிமா
Published:Updated:

வென்று காட்டிய வங்க மகள்!

மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
News
மம்தா பானர்ஜி

தமிழகத் தேர்தல் முடிவுகளைவிட இந்தியா அதிகம் எதிர்பார்த்தது மேற்கு வங்காள ரிசல்ட்டைத்தான். சிலர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரையே எழுதினார்கள்

“களத்தில் நிற்கும் மற்றவர்களுக்கு ஏ.சி அறையில் அமர்ந்துகொண்டு உத்தரவு போடும் தலைவர் இல்லை நான். போர்க்களத்தில் அவர்களுக்கு முன்னால் நின்று வழிநடத்துபவள். நான் தெருச்சண்டை போடும் போராளி. 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தபிறகும் இன்னமும் அதேபோன்ற சண்டைக்காரிதான்.’’

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றபிறகு மம்தா பானர்ஜி சொன்ன வார்த்தைகள் இவை. தனிப்பட்ட முறையில் நந்திகிராம் தொகுதியில் அவரின் தோல்வியைத் தேர்தல் ஆணையம் உறுதிசெய்தாலும், மம்தாவின் வெற்றி முழக்கத்தை அது சிறிதும் அசைத்துப் பார்க்கவில்லை. ஒற்றைக் காலில் நின்றாவது ஜெயித்துக் காட்டுவேன் என சவால் விடுவார்களே... அதை நிஜத்தில் செய்து காட்டியுள்ளார் மம்தா.

வென்று காட்டிய வங்க மகள்!

தமிழகத் தேர்தல் முடிவுகளைவிட இந்தியா அதிகம் எதிர்பார்த்தது மேற்கு வங்காள ரிசல்ட்டைத்தான். சிலர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரையே எழுதினார்கள். ஆனால், கடந்த இரண்டு முறை பெற்றதைவிட அதிக தொகுதிகளுடன் மூன்றாவது முறையும் ஜெயித்து ஹாட்ரிக் அடித்திருக்கிறார் மம்தா. இவ்வளவு பெரிய வெற்றியை மம்தாவே எதிர்பார்த்திருக்க மாட்டார். பா.ஜ.க-வுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்கு வித்தியாசம், சுமார் 10 சதவிகிதம். அந்த அளவுக்குச் சறுக்கி யிருக்கிறது பா.ஜ.க.

எங்கே நிகழ்ந்தது தவறு? இன்னமும் புரியாமல் தவிக்கிறார்கள் பா.ஜ.க தலைவர்கள்.

மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குச் செல்வாக்குடன் எப்போதும் பா.ஜ.க இருந்ததில்லை. 294 உறுப்பினர்கள் உள்ள மேற்கு வங்க சட்டமன்றத்தில் கடந்த 2016 தேர்தலில் பா.ஜ.க-வுக்குக் கிடைத்தது வெறும் மூன்று எம்.எல்.ஏ-க்கள்தான். 211 எம்.எல்.ஏ-க்களுடன் மம்தா ஆட்சியை அமைக்க, 44 எம்.எல்.ஏ-க்களுடன் எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்தது காங்கிரஸ். இடதுசாரிக் கூட்டணிக்கு 26 இடங்கள் கிடைத்திருந்தன.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மேற்கு வங்காளத்தில் கட்சியை வளர்க்க முடிவெடுத்தது பா.ஜ.க. பல்வேறு கட்சிகளில் அதிருப்தியில் இருந்தவர்களை இழுத்தது. தேசியத் தலைவர்கள் பலரும் அடிக்கடி அங்கு போனார்கள். அந்தத் தேர்தலில் மேற்கு வங்காளத்தின் 42 தொகுதிகளில் 18 இடங்களை வென்று மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது பா.ஜ.க.

தேர்தல் முடிவுகளை அலசி ஆராய்ந்தனர் பா.ஜ.க தலைவர்கள். 121 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை பெற்று 40 சதவிகித வாக்குகளை வாங்கியிருந்தது. மம்தா கட்சி பெற்றது 43 சதவிகித வாக்கு. ‘இந்த மூன்று சதவிகித இடைவெளியை நிரப்பினால், அடுத்த ஆட்சி நமக்குத்தான்’ என்று கணக்கு போட்டார்கள். இந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை 2019 மே மாதமே ஆரம்பித்துவிட்டது பா.ஜ.க. மம்தா கட்சியில் மக்கள் செல்வாக்குடன் இருந்த இரண்டாம் நிலைத் தலைவர்கள் பலரை வளைத்தார்கள். சாரதா சிட் பண்ட் வழக்கு, முகுல் ராய் என்ற தலைவரை பா.ஜ.க பக்கம் வரவழைத்தது. அவர் கணிசமான ஆதரவாளர்களை பா.ஜ.க-வுக்கு மாற்றினார். தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாக வரிசையாகப் பலர் கட்சி மாறினார்கள். இப்போது மம்தாவை நந்திகிராமில் தோற்கடித்த சுவேந்து அதிகாரி வரை பலர் இப்படி மாறியவர்கள்தான். ‘`மம்தாவின் கூடாரமே காலியாகிவிட்டது. தேர்தலுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸில் அவர் மட்டுமே இருப்பார்’’ என்றுகூடக் கிண்டல் செய்தார் பிரதமர் மோடி.

தேர்தல் வேலைகளையும் பிரசாரத்தையும் செய்வதில் பா.ஜ.க-வுக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. மேற்கு வங்கத் தேர்தலுக்காக பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் 38 முறை அந்த மாநிலத்துக்கு வந்தார்கள். ஒவ்வொரு முறையும் பல பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்தினார்கள். பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள், பல மாநிலங்களின் முதல்வர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பெரும் படையே பிரசாரத்துக்கு வந்தது.

இந்த அத்தனை பேரையும் ஒற்றை ஆளாக சமாளித்தார் மம்தா. பா.ஜ.க-வைப்போலவே அவரும் பல மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். பிரசாந்த் கிஷோரைத் தனக்குத் தேர்தல் வியூகம் வகுப்பவராக ஒப்பந்தம் செய்தார்.

10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியைப் போக்க முதலில் முடிவு செய்தார். சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம், பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் என அணிவகுத்தன. பா.ஜ.க-வின் ‘ஜெய் ராம்’ கோஷத்தை முறியடிக்க ‘ஜெய் பங்களா’ கோஷத்தை உருவாக்கினார். இன அடையாளத்தில் பெருமிதம் கொண்ட தமிழர்கள் போலவே வங்காளிகள் தங்கள் அடையாளத்தை முக்கியமாக நினைப்பவர்கள். அவர்களின் வங்காளி தேசிய அடையாளத்தை இந்த கோஷத்தால் தட்டியெழுப்பினார் மம்தா.

வென்று காட்டிய வங்க மகள்!

வங்கத்தில் சிறுபான்மையினர் வாக்கு மிக அதிகம். ‘அவர்களை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தி, பெரும்பான்மை இந்துக்களை அலட்சியப்படுத்துகிறார்’ என பா.ஜ.க தொடர்ந்து பிரசாரம் செய்துவந்தது. இதைச் சமாளிப்பதற்காக மம்தா தனது பிராமண அடையாளத்தைத் தயக்கமின்றி வெளிப்படுத்தினார்.

இந்தியாவிலேயே எப்போதும் இல்லாதபடி மேற்கு வங்கத் தேர்தலை எட்டுக் கட்டங்களாக நடத்தியது தேர்தல் ஆணையம். மோடி உள்ளிட்ட தலைவர்கள் வந்து பிரசாரம் செய்ய வசதியாகவே இப்படித் தேர்தல் அட்டவணை போட்டதாகப் புகார் செய்தார் மம்தா. அதில் உண்மையும் இருந்தது. ஆனால், இந்தக் கால இடைவெளியை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டார் மம்தா. தேர்தலின் ஆரம்பக் கட்டத்திலேயே மம்தாவின் கார் விபத்தில் சிக்கியதாக ஒரு செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து காலில் கட்டு போட்டுக்கொண்டு, 50 நாள்களாக சக்கர நாற்காலியில்தான் மாநிலத்தை வலம்வந்து பிரசாரம் செய்தார் மம்தா. தொண்டர்கள் கூட்டத்துடன் இணைந்து வீதியில் நடப்பதில்தான் மம்தாவுக்கு விருப்பம். இது அவருக்கே புதிது. ஆனால், இதில் அனுதாபத்தை அள்ளிவிட்டார் அவர்.

மோடியில் ஆரம்பித்து பா.ஜ.க தலைவர்கள் அத்தனை பேரின் பிரசாரமும் மம்தாமீதான தனிமனிதத் தாக்குதலாகவே அமைந்தது. மம்தா அவர்கள் அத்தனை பேரையும் ‘வங்காளத்துக்குத் தொடர்பில்லாத வெளியாட்கள்’ என அடையாளப்படுத்துவதில் வெற்றி பெற்றார். ‘வங்காளம் தன் மகளை நேசிக்கிறது’ என்ற கோஷத்தை தினமும் பலமுறை சொன்னார். இத்தனை பேரும் அவரைத் திட்டியதே ‘ஓர் எளிய பெண்மணியை இப்படித் திட்டுகிறார்களே’ என அவர்மீது பெண்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியது.

பா.ஜ.க இரண்டாம் கட்டத் தலைவர்கள் தீவிர இந்துத்வ பிரசாரத்தைச் செய்தது, இயல்பாக முஸ்லிம் வாக்கு வங்கியை மம்தா பக்கம் திருப்பிவிட்டது. அதற்கு முன்புவரை காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் வாக்களித்தவர்கள்கூட இம்முறை மம்தா பக்கம் வந்தனர்.

இந்தத் தேர்தலில் இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்தன. கூடவே இந்தியன் செக்யூலர் ஃபிரன்ட் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து இணைந்தார் அப்பாஸ் சித்திக். மம்தாவுக்கு விழும் வாக்குகளைக் கணிசமாகப் பிரிக்கக்கூடிய ஒரு வலிமையான கூட்டணியாக இது தெரிந்தது. ‘பா.ஜ.க-வை வீழ்த்த என் பக்கம் வாருங்கள்’ என அவர்களுக்கும் அழைப்பு விடுத்தார் மம்தா. தலைவர்கள் யாரும் இதைக் காதில் வாங்கவில்லை. ஆனால், அவர்களின் தொண்டர்கள் மம்தா பக்கம் வந்துவிட்டார்கள்போல! கடந்த முறை 70 இடங்களில் ஜெயித்த இந்தக் கட்சிகள் இம்முறை பெற்றது, பெரிய பூஜ்ஜியம். சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து மம்தாவுக்கு முன்புவரை வங்கத்தை ஆண்ட இந்த இரண்டு கட்சியினரும் இப்போது சட்டமன்றத்தில் இல்லை.

ஒரு முதல்வர் வேட்பாளரை அறிவிக்காதது, கட்சிமாறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது, மாற்று அரசியலைப் பேசினாலும் மம்தா கட்சியைப் போலவே இன்னொரு சண்டைக்காரக் கட்சியாகவே உருவெடுத்தது... இவையெல்லாம்தான் தங்கள் தோல்விக்குக் காரணம் எனக் கருதுகிறது பா.ஜ.க.

இந்த வெற்றிக்குப் பிறகு மோடியை எதிர்க்கக்கூடிய வலுவான ஒரு தலைவராக உருவாகி நிற்கிறார் மம்தா. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க-வுக்கு எதிராக தேசிய அளவில் புதிய அணியை உருவாக்கும் முக்கியமான தலைவராக அவர் மாறக்கூடும். மத்திய அரசுடன் போராடிவரும் எதிர்க்கட்சிகளின் முதல்வர்களுக்கு அவர் அறிவிக்கப்படாத தலைவராக இனி இருப்பார்.