Published:Updated:

`ஸ்கிரிப்ட்' அரசியல்.. மாநிலங்களுக்கு இடையில் பாகுபாடு.. மத்திய அரசை வறுத்தெடுத்த மம்தா!

மம்தா
மம்தா

``நாங்கள் உங்களுடன் ஒத்துழைக்கும்போது, ​​எங்களை ஏன் தாக்குகிறீர்கள்? ஏன் எப்போதும் வங்கம், வங்கம், வங்கம் என விமர்சிக்கிறீர்கள்.''

மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் ஐந்தாவது முறையாக பிரதமர் மோடி உரையாடியுள்ளார். பிரதமர் மோடி முதல்வர்களுடன் பேசுகையில், ``கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதில் நாம் வெற்றி பெற்றுள்ளதாக உலக நாடுகள் கூறுகின்றன. இந்தப் போராட்டத்தில் மாநில அரசுகளின் பங்குகள் மிக முக்கியமானவை. தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து இந்த வைரஸின் அச்சுறுத்தலுக்கு எதிராக தங்களது பங்களிப்புகளை மாநில அரசுகள் செய்துள்ளன” என்றார்.

`ஸ்கிரிப்ட்' அரசியல்.. மாநிலங்களுக்கு இடையில் பாகுபாடு.. மத்திய அரசை வறுத்தெடுத்த மம்தா!

பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``தமிழகத்தில், மருத்துவ உபகரணங்களுக்கான சிறப்பு நிதியாக ரூ. 2,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிப்பதால், வரும் மே 31-ம் தேதி வரை சென்னைக்கு ரயில் சேவையைத் தொடங்க வேண்டாம் என தமிழகத்துக்கான கோரிக்கைகளை முன்வைத்தார்.

இதே ஆலோசனைக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கோபத்துடன் பேசியுள்ளார். கூட்டத்தில், லாக் டௌன், புலம்பெயர்ந்தோர் பிரச்னை மற்றும் பொருளாதார நிலைமை குறித்துப் பேசிய அவர், ``கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க நாங்கள் கடுமையாகப் போராடி வருகிறோம். மேற்குவங்கத்தைப் பொறுத்தவரையில் வெளிநாடுகளையும், பெரிய மாநிலங்களையும் எல்லையாக கொண்டுள்ளது. அதனால் வைரஸ் பரவலைத் தடுப்பதில் கடுமையான சவால்கள் உள்ளன. இருப்பினும் மாநில அரசு கடுமையாகப் பணியாற்றி வருகிறது.

ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது. மாநிலங்களுக்கு இடையில் பாகுபாடு காட்டுகிறது. `ஸ்கிரிப்ட்' எழுதிவைத்தபடி மத்திய அரசு அப்படியே செயல்படுகிறது. நாங்கள் உங்களுடன் ஒத்துழைக்கும்போது, ​​எங்களை ஏன் தாக்குகிறீர்கள்? ஏன் எப்போதும் வங்கம், வங்கம், வங்கம் என விமர்சிக்கிறீர்கள். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. யாரும் எங்கள் கருத்தைக் கேட்கத் தயாராக இல்லை... கூட்டாட்சி கட்டமைப்பைத் தகர்க்காதீர்கள்" எனக் கடுமையாகப் பேசியதாகத் தெரிகிறது.

மம்தா
மம்தா

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதும், மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் நிலவி வந்த மோதல் போக்கு, கொரோனா வைரஸ் விவகாரத்திலும் கடுமையாகத் தொடர்ந்தது. தொடர்ச்சியாக மத்திய அரசு, `மேற்குவங்கத்தில் மாநில அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவில்லை, மக்களை வழி நடத்துவதில் மாநில அரசு தோற்றுவிட்டது' உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அடுக்கியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு