`தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் முஸ்லிம்கள், இந்துப் பெண்களைக் கவர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்து, மதம் மாற்றி இறுதியில் தீவிரவாதத்தில் ஈடுபடுத்துவதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் தொடர்ச்சியாக எதிர்மறை விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது.

கிட்டத்தட்ட பா.ஜ.க., வலதுசாரி அமைப்புகள் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே `தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை திரையரங்குகளிலிருந்து தொடர்ந்து வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றன. ஆனால் பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் ``தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி, தோட்டாக்கள், ஆயுதங்களைத் தாண்டி புதியமுகம் இருப்பதை `தி கேரளா ஸ்டோரி’ வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது" என்றும், ``அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்" என்றும் ஆதரவாகப் பேசிவருகின்றனர். மத்தியப் பிரதேச அரசு இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளித்தது.
இந்த நிலையில் `தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு மேற்கு வங்க அரசு தடை விதித்திருக்கிறது. இது குறித்து தலைமைச் செயலாளருக்கு இன்று உத்தரவிட்டிருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, ``வெறுப்பு, வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

முதலில் `காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துடன் வந்தார்கள். இப்போது `தி கேரளா ஸ்டோரி', அடுத்து `பெங்கால் ஃபைல்ஸ்'-க்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க ஏன் இப்படி வகுப்புவாத பிரச்னையை உருவாக்க முயல்கிறது... திரிபுபடுத்தப்பட்ட உண்மைகளுடன் கேரளாவை அவதூறு செய்யும் முயற்சிதான் `தி கேரளா ஸ்டோரி'. `தி கேரளா ஸ்டோரி' என்பது ஒரு திரிக்கப்பட்ட கதை" என்று கூறினார்.