Published:Updated:

பா.ஜ.க-வை பந்தாடிய மம்தா!

மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலைவர்களை பா.ஜ.க-வின் முகங்களாக முன்னிறுத்தாமல், மோடியும் அமித் ஷாவுமே முன்னிறுத்தப்பட்டார்கள்

பா.ஜ.க-வை பந்தாடிய மம்தா!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலைவர்களை பா.ஜ.க-வின் முகங்களாக முன்னிறுத்தாமல், மோடியும் அமித் ஷாவுமே முன்னிறுத்தப்பட்டார்கள்

Published:Updated:
மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
மம்தா பானர்ஜி

பா.ஜ.க-வின் தீவிர தேர்தல் வியூகங்களையெல்லாம் உடைத்து, பெரும் வெற்றியைப் பெற்று, தேசத்தின் ஒட்டுமொத்த பார்வையையும் மேற்கு வங்கம் நோக்கித் திருப்பியிருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. வெற்றி சாத்தியமானது எப்படி?

`மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் பா.ஜ.க வெற்றிபெறும்’ என்று அடித்துச் சொன்னார் அமித் ஷா. பிரதமர் மோடியோ, ‘மே 2-ம் தேதிக்குப் பிறகு மம்தா பானர்ஜி முன்னாள் முதல்வராகிவிடுவார்’ என்று ஆரூடம் கணித்தார். இவர்களின் வாய்ஜாலங்களையெல்லாம் சுக்குநூறாக்கி, 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று பா.ஜ.க-வுக்கு பாடம் கற்பித்திருக்கிறார் மம்தா. அதேநேரம், பா.ஜ.க-வால் இரட்டை இலக்கத்தைக்கூடத் தாண்ட முடியவில்லை.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மேற்கு வங்கத்துக்குத்தான் அதீத முக்கியத்துவத்தை அளித்தது பா.ஜ.க. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பா.ஜ.க-வின் மொத்த சீனியர்களும் மம்தாவுக்கு எதிராகக் களமிறங்கினார்கள். ஆனால், ஒற்றை ஆளாக நின்று பா.ஜ.க-வை துவம்சம் செய்திருக்கிறார் மம்தா. பா.ஜ.க-வின் தோல்விக்குக் காரணம் என்ன என்பது குறித்து அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.

“திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் பலரையும் வலைவீசி இழுத்தது பா.ஜ.க. அப்படி இழுக்கப்பட்ட 34 எம்.எல்.ஏ-க்களில், 13 பேருக்கு சீட் வழங்கப்பட்டது. பா.ஜ.க-வின் இந்த ‘வணிக’ அரசியலை மேற்கு வங்க மக்கள் ரசிக்கவில்லை. மேலும், ‘முதல்வர் வேட்பாளர்’ என்று பா.ஜ.க யாரையும் முன்னிறுத்தவில்லை. அதேசமயம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலைவர்களை பா.ஜ.க-வின் முகங்களாக முன்னிறுத்தாமல், மோடியும் அமித் ஷாவுமே முன்னிறுத்தப்பட்டார்கள். அதுவே அவர்களுக்கு மைனஸாக அமைந்துவிட்டது.

மேற்கு வங்க மக்கள், தாங்கள் ‘வங்காளிகள்’ என்பதில் உணர்வுபூர்வமாக பெருமிதம் கொண்டவர்கள். அப்படியான மக்கள் உணர்வில், எங்கிருந்தோ வந்த குஜராத்திகள் ஆதிக்கம் செய்வதை அவர்கள் விரும்பவில்லை. வங்காளிகளுக்கு பா.ஜ.க-வின் மீது பெரிதாக வெறுப்புணர்வு இல்லையென்றாலும், இந்த ஆதிக்கம் அவர்களைக் கடுமையாகச் சீண்டியது. இதைச் சரியாக கையிலெடுத்த மம்தா, ‘அந்நியருக்கு இங்கு என்ன வேலை?’ என்று முழங்கினார். இது உணர்வுரீதியாக சீண்டப்பட்டிருந்த மக்களை மம்தா பக்கம் திரும்பச் செய்தது.

பா.ஜ.க-வை பந்தாடிய மம்தா!

2016 சட்டமன்றத் தேர்தலில், வெறும் 10 சதவிகித வாக்குகளுடன் மூன்று எம்.எல்.ஏ-க்களைப் பெற்ற பா.ஜ.க., 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40 சதவிகித வாக்குகளுடன் 18 எம்.பி-க்களைப் பெற்றது. அதனாலேயே, 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியையே பிடித்துவிடலாம் என்றும் கணக்கு போட்டது. ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கள நிலவரம் மாறிவிட்டது. 2019-ல் மம்தா அரசு மீது மக்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தி நிலவியதும், பா.ஜ.க-வின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தது. அதை உணர்ந்த மம்தா, கடந்த ஓராண்டில் மக்கள்நலத் திட்டங்களில் கவனம் செலுத்தினார்.

இன்னொருபுறம், கடந்த ஓராண்டில் கொரோனா மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் பா.ஜ.க மீது அதிருப்தியை ஏற்படுத்தின. குறிப்பாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்த அதிருப்தியை அதிகப்படுத்தியது. கிழக்கு வங்காளத்திலிருந்து குடியேறிய லட்சக்கணக்கான மக்கள், மேற்கு வங்கத்தில் வசித்துவருகிறார்கள். மத்திய பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட என்.சி.ஆர்., சி.ஏ.ஏ ஆகியவற்றால் தங்கள் குடியுரிமைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அவர்கள் அஞ்சினார்கள். இந்தப் பிரிவினரின் வாக்குகள் மம்தாவுக்குச் சாதகமாகின.

இன்னொரு பக்கம் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு இருக்கும் முஸ்லிம் மக்களும் திரிணாமுல் காங்கிரஸின் பின்னால் திரண்டனர். மேற்கண்ட காரணங்களால் திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 43-லிருந்து 48 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் 40-லிருந்து 38 சதவிகிதமாக சரிந்துள்ளது” என்றவர்கள், தேர்தலின்போது நடந்த விஷயங்களையும் சொன்னார்கள்...

“மேற்கு வங்கத்தில் எட்டு கட்ட தேர்தல் என்ற முடிவை அறிவித்தபோதே ‘தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது’ என்று குற்றம்சாட்டினார் மம்தா. கடைசி இரண்டு கட்டத் தேர்தல்கள் நடைபெறவிருந்த நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால், பிரசாரத்தை ரத்து செய்தார் மம்தா. இதற்கு மாறாக பெருவாரியான மக்களைப் பங்கேற்கச் செய்து, பிரசாரக் கூட்டங்களை பா.ஜ.க நடத்தியது. இது, ‘கொரோனா உச்சத்திலும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் கூட்டங்களைத் திரட்டுகிறார்களே...’ என்று பா.ஜ.க-வுக்கு எதிரான உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது. மம்தாவின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்” என்று சொல்லி முடித்தார்கள்.

இப்படி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்த மம்தா, தனக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். நீண்ட காலம் தனக்கு வலதுகரமாக விளங்கி, பா.ஜ.க-வுக்குத் தாவிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியிடம் நந்திகிராம் தொகுதியில் தோற்றுப்போயிருக்கிறார் அவர். இப்போதைக்கு முதல்வர் பதவியை ஏற்று ஆறு மாதங்களில் ஒரு தொகுதியில் அவரால் வெற்றிபெற்றுவிட முடியும். ஆனால், மேற்கு வங்கத்தை நீண்ட காலம் ஆட்சி செய்த இடதுசாரிகளும் காங்கிரஸும் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத நிலையில், 70 தொகுதிகளுக்கு மேல் வென்றுள்ள பா.ஜ.க., வரும் காலங்களில் மம்தாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.