Published:Updated:

மேற்கு வங்கம்: `பிஎம் கேர்ஸ் நிதி எங்கே?' - மோடிக்கு எதிராக மம்தா தொடுக்கும் அஸ்திரம்!

மம்தா பானர்ஜி
News
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி, `பல லட்சம் கோடி பிஎம்கேர்ஸ் நிதி எங்கே?’ என்று பிரதமர் மோடியை நோக்கிக் கேள்வியை வீசியிருக்கிறார்.

மேற்கு வங்க மாநில சட்டமன்றத்துக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றுவருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பனர்ஜி, 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புத்ததேவ் பட்டாசார்யா தலைமையிலான இடது முன்னணி ஆட்சியைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தார்.

மம்தா
மம்தா

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அங்கு நீண்டகாலம் ஆட்சிசெய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு சரிந்து, மூன்றாவது இடத்துக்குப் போய்விட்டது. இரண்டாவது பெரிய கட்சியாக முன்னேறிய பா.ஜ.க., இப்போது திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சியை அகற்றிவிட்டு அரியணை ஏறுவதற்குத் துடித்துக்கொண்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற பா.ஜ.க., 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று செல்வாக்கை அதிகரித்தது. எனவே, வரும் தேர்தலில் எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க-வினர் நினைக்கிறார்கள். ஆகவேதான், கொரோனா வைரஸ் தீவிரமானதால் பொது இடங்களுக்கு வராமல் தொலைக்காட்சியில் மட்டுமே மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, முதன்முறையாக வெளியே வந்தது மேற்கு வங்கப் பயணத்தின்போதுதான். கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயலால் மேற்கு வங்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளைப் பார்வையிடுவதற்காக மோடி அங்கு சென்றார். பிரதமர் என்றரீதியில் அவர் அங்கு சென்றார் என்றாலும், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலையொட்டிய அரசியல் பயணமாகவும் அது பார்க்கப்பட்டது.

அமித் ஷா
அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் தமிழகத்துக்கு வந்து சென்றார். அதற்கு முன்பாக அவர் மேற்கு வங்கத்துக்குச் சென்றிருந்தார். அப்போது, `மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பது தெளிவாகிவிட்டது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமையப்போகிறது’ என்று கூறிய அமித் ஷா, ஏழைகள் மற்றும் பழங்குடிகளுக்கான மத்திய அரசின் 80-க்கும் மேற்பட்ட திட்டங்களை மேற்கு வங்க மாநில அரசு செயல்படுத்தாமல் வைத்திருக்கிறது’ என்று குற்றம்சாட்டினார். இதற்கு முன்பாக, மாநில அரசு உரிய நேரத்தில் செயல்பட்டிருந்தால் பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்திருப்பார்கள் என்றும், ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.12,000 கிடைத்திருக்கும் என்றும் அரசு மீது ஆளுநர் ஜக்தீப் தன்கர் குற்றம்சாட்டியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே, முகுல் ராய் உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் சிலர் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டார்கள். தற்போது சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்ட நிலையில், திரிணாமுல் காங்கிரஸிலிருந்து ஆட்களை இழுப்பதற்கு எதிர்த்தரப்பு முயன்றுவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில், மேற்கு வங்க போக்குவரத்துத்துறை அமைச்சரான சுவெந்து அதிகாரி கடந்த வாரம் திடீரென்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்ததாக, மிட்னாபூர் தொகுதி எம்.எல்.ஏ-வான மிஹிர் கோஸ்வாமி, திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார். இது திரிணாமுல் காங்கிரஸுக்கு ஏற்பட்ட பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் பலர் பா.ஜ.க-வில் சேருவதற்குத் தயாராக இருப்பதாக பா.ஜ.க தலைவர்கள் கூறிவருகிறார்கள். அது மட்டுமல்ல, மம்தா பானர்ஜியின் கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்திருக்கும்நிலையில் அவரது அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எந்த நேரத்திலும் ஆளுநர் கோரலாம் என்று பா.ஜ.க தலைவர்கள் கூறிவருகிறார்கள். குறிப்பாக, பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினரும், பாரதிய யுவ மோர்ச்சாவின் மாநிலத் தலைவருமான சௌமித்ரா கான் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

மம்தா
மம்தா

அதற்குப் பதிலடி கொடுத்த திரிணாமுல் காங்கிரஸின் நாடாடாளுமன்ற உறுப்பினரான சுகதா ராய், `அரசியல் சட்டம் குறித்தோ, அதன் பிரிவுகள் குறித்தோ எதுவும் தெரியாமல் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். அரசியல் சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கையை ஆளுநர் எடுக்கப்போகிறார் என்பது எப்படி சௌமித்ரா கானுக்குத் தெரியும்... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை இப்படியெல்லாம் அவர்கள் நடத்த முடியாது. முதல்வருக்கு ஆதரவாகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருக்கிறார்கள்’ என்று கூறினார்.

தற்போது ஏழு எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, இவர்களெல்லாம் பா.ஜ.க-வுக்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள். இது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், `எங்கள் கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பா.ஜ.க-வினர் இப்படிக் கூறிவருகிறார்கள்’ என்றனர்.

மேலும், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க-வினர் குரல் எழுப்பிவருகிறார்கள். பா.ஜ.க-வினர் அரசியல்ரீதியாக இப்படியான அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் மம்தா பானர்ஜிக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில், `எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் முதல்வர் மம்தா பானர்ஜியைக் கட்டிப்பிடிப்பேன்’ என்று பா.ஜ.க-வின் தேசியச் செயலாளரான அனுபவம் ஹஸ்ரா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மம்தா அரசுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளின் பட்டியலை பா.ஜ.க-வினர் எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இத்தகைய அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில்தான், `பிஎம்கேர்ஸ் நிதி எங்கே போனது?’ என்ற கேள்வியை மம்தா பானர்ஜி எழுப்பியிருக்கிறார்.

மோடி
மோடி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த மார்ச் மாதம் பரவத்தொடங்கியது. அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகவும், மீட்பு நடவடிக்கைக்காகவும் நாட்டு மக்கள் நன்கொடை அளிக்க வசதியாக `பிஎம் கேர்ஸ் நிதி’ (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலை நிதியம்) தொடங்கப்பட்டது. இது குறித்து மார்ச் கடைசி வாரத்தில் அறிவித்த பிரதமர் மோடி, பிஎம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் நன்கொடைகளை வாரி வழங்கினர். ரூ.2.25 லட்சத்துடன் தொடங்கிய பிஎம் கேர்ஸ் நிதிக்கு மார்ச் 27-ம் தேதியிலிருந்து மார்ச் 31-ம் தேதி வரை ரூ.3,076.62 கோடி வந்ததாக பிஎம் கேர்ஸ் நிதி அமைப்பு தெரிவித்தது.

ஆனாலும், பிஎம் கேர்ஸ் நிதி குறித்த சர்ச்சை இன்றும் தொடர்கிறது. இதன் வரவு - செலவுகள் வெளிப்படையாக இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. அதன் தொடர்ச்சியாக மம்தா பானர்ஜி அது குறித்த கேள்வியை இப்போது எழுப்பியிருக்கிறார். எல்லா எதிர்க்கட்சிகளும் எழுப்பிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்னை குறித்த கேள்வியை பிரதமரை நோக்கி மம்தா முன்வைத்திருக்கிறார். இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நெருக்கடியும் மம்தாவால் ஏற்பட்டிருக்கிறது.