Published:Updated:

`சிறிய சந்தோஷம், பெரிய மகிழ்ச்சி!’ - சாலையோரக் கடையில் டீ போட்டு ஆச்சர்யப்படுத்திய மம்தா

Mamata Banerjee Makes Tea
Mamata Banerjee Makes Tea

வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதிலிருந்தே களத்தில் இறங்கி, மக்களுடன் பழகத் தொடங்கிவிட்டார் மம்தா பானர்ஜி.

இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. அதேபோன்று மம்தா பானர்ஜியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தின் பல இடங்களிலும் பா.ஜ.க கால் பதித்துவிட்டது. இது மம்தாவுக்கு பெரும் பின்னடைவு என்றே கருதப்படுகிறது.

Mamata Banerjee
Mamata Banerjee

இதனால் 2021-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என, இப்போதிலிருந்தே முழு வீச்சில் செயல்படத் தொடங்கிவிட்டார் முதல்வர் மம்தா பானர்ஜி. இவரின் தேர்தல் ஆலோசகராக ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். மம்தா தன் தேர்தல் வேலைகளைத் தொடங்கிய பிறகு, பல்வேறு செயல்பாடுகள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.

`திதியிடம் சொல்லுங்கள்’ என்ற முழக்கத்துடன் மக்களின் குறைகளைக் கேட்பது, மற்றொருபுறம் குடிசைப் பகுதி விசிட், கிராமப்புற விசிட் எனத் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக நேற்று மேற்கு வங்கத்தின் கடலோர நகரமான திகா நகரில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளார் மம்தா.

Mamata Banerjee
Mamata Banerjee

அவரின் வாகனம் துட்டாபூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென டிரைவரிடம், காரை நிறுத்துமாறு கூறியிருக்கிறார். `முதல்வர் ஏன் காரை நிறுத்தச் சொல்கிறார்?' எனத் தெரியாமல் அருகிலிருந்த பிற நிர்வாகிகளும் பாதுகாப்பு வீரர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், எந்தவித பதற்றமும் இல்லாமல் அமைதியாகக் காரைவிட்டு இறங்கிய மம்தா, நேராக அருகிலிருந்த ஒரு டீக்கடைக்குச் சென்று, `நான் டீ போடலாமா’ எனக் கேட்டுள்ளார்.

Vikatan

முதல்வரைப் பார்த்துஅதிர்ந்த டீக்கடை உரிமையாளர், தன் இடத்திலிருந்து நகர்ந்து மம்தாவுக்கு வழிவிட்டார். பின்னர் அங்கிருந்த பொருள்களைக் கொண்டு கடைக்காரரின் உதவியுடன் தன் நண்பர்களுக்கு டீ தயார் செய்து வழங்கினார். டீக்கடையில் முதல்வரைப் பார்த்ததும் அங்கு பொதுமக்கள் பலர் கூடிவிட்டனர்.

Mamata Banerjee Makes Tea
Mamata Banerjee Makes Tea

இதைக் கவனித்த மம்தா, மக்கள் கூட்டத்துக்கு அருகில் சென்று அவர்களிடம் உரையாடினார். பின்னர் அங்கிருந்த குழந்தைகளுடன் சிறிது நேரத்தைக் கழித்தார். இந்த நிகழ்வுகளையும் வீடியோவாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மம்தா, `சில நேரங்களில் வாழ்க்கையில் ஏற்படும் சிறிய சந்தோஷங்கள்கூட பெரிய மகிழ்ச்சியைத் தருகின்றன. துட்டாபூரில் தேநீர் தயார் செய்து, மற்றவர்களுக்குக் கொடுத்தேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது இது முதல்முறையல்ல. கடந்த ஜனவரி மாதம் மக்களவைத் தேர்தல் பிஸியில் இருந்த மம்தா, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் அதிகாரிகளுடன் இணைந்து பேட்மின்டன் விளையாடினார். பின்னர், மக்களவைத் தேர்தல் முடிவுக்கு முந்தைய நாள் ரிலாக்ஸாக பியானோ வாசித்துக்கொண்டிருந்தார். இந்த வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

`வரும் தேர்தலை மனதில்கொண்டே மம்தா இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்' என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இருந்தாலும் மம்தா டீ போடும் வீடியோ சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு