Published:Updated:

காங்கிரஸை வீழ்த்தும் மம்தாவின் ஆட்டம்!

மம்தா பானர்ஜி
பிரீமியம் ஸ்டோரி
News
மம்தா பானர்ஜி

`காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பே இப்போது இல்லை' என்று மும்பை சென்று சரத்பவாரைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார் மம்தா.

கடந்த மே மாதம்... மு.க.ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜியின் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் புகழ் உச்சாணிக் கொம்பில் இருந்தது. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் சொல்லி அடித்த கில்லியாக எதிர்க்கட்சியான பா.ஜ.க-வை 100 தொகுதிகளுக்குள் சுருக்கிக்காட்டினார். `பிரசாந்தின் அடுத்த அசைன்மென்ட் என்ன' என்ற கேள்வி பெரிதாக எழுந்தபோது, `இனி தேர்தல் பணிகளைச் செய்ய மாட்டேன்' என்று அறிவித்து ஆச்சர்யம் தந்தார் அவர்.

ஆகஸ்ட் மாதம்... காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு ஆர்வம் காட்டினார் பிரசாந்த் கிஷோர். ஆனால், `கட்சியில் எனக்கு ஒரு முக்கியமான பொறுப்பு வேண்டும்' என்று அவர் கேட்டார். காங்கிரஸில் அவரை இணைக்க ராகுல் காந்தியும் விரும்பினார். 2014-ம் ஆண்டு பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக மோடி உருவெடுப்பதற்கு இருந்த முட்டுக்கட்டைகளைத் தன் யுக்திகள் மூலம் தகர்த்தவர் பிரசாந்த். 2024 தேர்தலில் தனக்கு அதை பிரசாந்த் செய்வார் என நினைத்தார் ராகுல்.

ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால் ஆகிய மூன்று சீனியர்களையும் கூப்பிட்டு, இது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் பேசுமாறு கூறினார். ஆனால், பிரசாந்த் கிஷோரின் நிபந்தனைப் பட்டியல் பெரிதாக இருந்தது. `நான் காங்கிரஸில் இருப்பேன். ஆனால், என் நிறுவனம் தனியாகப் பல கட்சிகளுக்கும் தேர்தல் பணிகளைச் செய்யும். விரைவில் வரும் பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர்த் தேர்தல்களில் காங்கிரஸுக்குத் தேர்தல் வியூகம் வகுத்துத் தர மாட்டேன்' என்றார் அவர். `கட்சியில் சேர்வதற்கு முன்பாகவே பல நிபந்தனைகளை விதிக்கும் பிரசாந்த் கிஷோரை ஏன் சேர்க்க வேண்டும்?' என்று எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கசப்புடன் காங்கிரஸ் உறவை முறித்துக்கொண்டு வெளியேறினார் பிரசாந்த்.

காங்கிரஸை வீழ்த்தும் மம்தாவின் ஆட்டம்!

இப்போது காங்கிரஸை வீழ்த்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிகளின் முகமாக நிறுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார் பிரசாந்த். சமீபகாலங்களில் மோடி சந்தித்த மிக மோசமான தோல்வியாக, மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் தோல்வி கருதப்படுகிறது. எனவே, `மோடியை வீழ்த்தும் வலிமை மம்தாவுக்கே இருக்கிறது' என்ற அறைகூவலுடன் தேசிய அரசியலில் மம்தாவைக் களமிறக்க ஆசைப்படுகிறார் பிரசாந்த். மம்தாவுக்கும் அந்த ஆசை இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

காங்கிரஸுடன் பிரசாந்த் பேசிக்கொண்டிருந்த போதே, அங்கிருந்து ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கிவிட்டது மம்தா கட்சி. அசாம் காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்தவர் சுஷ்மிதா தேவ். திரிணாமுல் காங்கிரஸுக்குத் தாவிய முதல் தலைவர் அவர்தான். அசாமிலிருந்து அவரைக் கூட்டி வந்து, மேற்கு வங்காளத்தில் ராஜ்ய சபா எம்.பி ஆக்கி, திரிபுரா மாநிலத்தில் கட்சியை வளர்க்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் மம்தா.

அடுத்ததாகத் தாவியவர், கோவா முன்னாள் காங்கிரஸ் முதல்வர் லூசின்ஹோ ஃபெலிரோ. ஏழு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த அவரைக் கூப்பிட்டு, வழக்கம் போல மேற்கு வங்காளத்திலிருந்து ராஜ்ய சபாவுக்கு அனுப்பியிருக்கிறார் மம்தா. விரைவில் வரவிருக்கும் கோவா சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தீவிரமாகத் தயாராகிவருகிறது. ராகுல் அங்கு ஒரு சுற்று பிரசாரத்துக்கும் போய் வந்துவிட்டார். அங்கு மம்தா தனியாக ஒரு கூட்டணி உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியும் ஆர்வமாகக் களத்தில் இருக்கிறது.

காங்கிரஸை வீழ்த்தும் மம்தாவின் ஆட்டம்!

மேகாலயா முதல்வராக ஒன்பது ஆண்டுகள் பதவியில் இருந்தவர் முகுல் சங்மா. காங்கிரஸ் தலைமையுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த இவர் தலைமையில் அங்கு 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைக் கட்சி மாறச் செய்திருக்கிறார் மம்தா. இதன்மூலம் மேகாலயா மாநில சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி ஆகியிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்குவதில் பா.ஜ.க படுபிஸியாக இருந்தது. இனியும் விலைக்கு வாங்கி புதிதாக ஆட்சி அமைக்க எங்கும் இடம் இல்லை. ராஜஸ்தானும் மகாராஷ்டிராவும் மட்டும்தான் அவர்களுக்கு உறுத்தும் இரண்டு இடங்கள். அங்கு இந்த விளையாட்டு கைகூடவில்லை.

இந்நிலையில் இந்த பிசினஸை மம்தா கட்சி கையில் எடுத்திருக்கிறது. இதை `பொலிட்டிகல் டூரிசம்' என்று வர்ணிக்கிறது காங்கிரஸ். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுக்க வெறும் 52 தொகுதிகளில் ஜெயித்து எதிர்க்கட்சி ஆனது காங்கிரஸ். அதே அளவு தொகுதிகளில் ஜெயித்தால்கூட, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முக்கியமான இடத்தில் இருப்போம் என்று மம்தா கணக்கு போடுகிறார். மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகள் உள்ளன. கூடுதலாக மற்ற மாநிலங்களில் 10 இடங்களில் ஜெயித்தால்கூடப் போதுமானது. அதற்குத்தான் பிரசாந்த் கிஷோர் டீமை அனுப்பிப் பல மாநிலங்களில் ஆள் பிடிக்கும் வேலையைச் செய்கிறது அவர் கட்சி.

ஆனால், `இது ஏதாவது அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா' என்றால், `இல்லை' என்பதுதான் யதார்த்தம். சமீபத்தில் நடந்த திரிபுரா உள்ளாட்சித் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்து போட்டியிட்டது. ஆனால், எங்கும் அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. கோவா தேர்தல் பற்றி வரும் கணிப்புகள்கூட, அங்கு திரிணாமுல் காங்கிரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே சொல்கின்றன. அந்த நேரப் பரபரப்பு தாண்டி அரசியல் விளைவுகள் எதையும் மம்தா எங்கும் ஏற்படுத்தவில்லை.

தேசிய அரசியல் மீதான அபிலாஷை இதற்கு முன்பு இங்கு பல தலைவர்களுக்கு வந்திருக்கிறது. அவர்களில் ஓரளவு ஜெயித்தவர் என்று மாயாவதியைச் சொல்லலாம். உத்தரப் பிரதேசத்தைத் தாண்டிப் பல மாநிலங்களில் அவருக்கு எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள் கிடைத்தார்கள். பக்கத்து கர்நாடகா வரை அவரால் தாக்கம் செலுத்த முடிந்தது. அதற்கு, பகுஜன் சமாஜ் கட்சிக்குக் கிடைத்த தலித் சமூக ஆதரவு முக்கியமான காரணம்.

காங்கிரஸை வீழ்த்தும் மம்தாவின் ஆட்டம்!

மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட அடித்தளம் அமையவில்லை. சரத்பவாருக்கு பிரதமர் நாற்காலிமீது ஆசை இருந்தது. ஆனால், மகாராஷ்டிரா தாண்டி அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை. மகாராஷ்டிராவிலேயே கூட்டணி இல்லாமல் தனியாக நிற்க முடியாது. தன் உயரம் புரிந்து அவர் அடங்கிவிட்டார். இப்போது மம்தா வந்திருக்கிறார்.

`மோடியை எதிர்க்கும் வலிமை உள்ளவர்' என்பது மட்டுமே தேசிய அரசியலில் ஜெயிப்பதற்குப் போதுமான தகுதி இல்லை. வங்காளத்தைத் தாண்டி மம்தாவின் கட்சியோ, அந்தக் கட்சியின் கொள்கைகளோ, சின்னமோ யாருக்கும் தெரியாது. வங்காளம் மட்டுமே இந்தியா இல்லை.

`காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பே இப்போது இல்லை' என்று மும்பை சென்று சரத்பவாரைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார் மம்தா. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்காமல் தனி ஆவர்த்தனம் செய்கிறது அவர் கட்சி.

`வலிமையான எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்குவதில் காங்கிரஸின் இடம் முக்கியமானதுதான். ஆனால், அதற்குத் தலைமை தாங்கும் உரிமை காங்கிரஸுக்கு மட்டுமே சொந்தம் இல்லை. ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பைத் தேர்வு செய்ய வேண்டும்' என்று இப்போது சொல்கிறார் பிரசாந்த் கிஷோர். காங்கிரஸுக்கும் மம்தா கட்சியினருக்குமான மோதல் இப்போது உக்கிரமாகியிருக்கிறது.

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க தலைவர்கள் இந்த மோதலை ஒரு புன்சிரிப்புடன் வேடிக்கை பார்க்கிறார்கள்.