Published:Updated:

`கொஞ்சம் அரசியல்; நிறைய கோரிக்கைகள்!’ - மோடி, மம்தா 30 நிமிடச் சந்திப்பின் பின்னணி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். தன் மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்துள்ளார் மம்தா.

Modi - mamata
Modi - mamata ( Twitter/@PMOIndia )

இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு பிரதமரை முதல்முறையாக நேரில் சந்தித்துப் பேசினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது பா.ஜ.கவுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நிலவி வந்தது. இந்நிலையில் இவர்களின் சந்திப்பு தேசிய அரசியலில் அதிக கவனம் பெற்றுள்ளது.

Modi - mamata
Modi - mamata
Twitter/@PMOIndia

வழக்கம் போல் பூச்செண்டு, மேற்கு வங்க இனிப்புகள் மற்றும் குர்தா ஆகியவற்றை மோடிக்குப் பரிசாக அளித்துள்ளார் மம்தா. பிரதமருக்கும், மேற்கு வங்க முதல்வருக்குமான சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் அரசு சார்ந்த நிறைய விஷயங்களைப் பேசினாலும் சிறிது அரசியலும் பேசினார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதேச்சையாக நடந்த சந்திப்பு- மோடியின் மனைவிக்கு புடவை பரிசளித்த மம்தா!

மோடியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, பிரதமரிடம் தான் வைத்த கோரிக்கைகள், தங்களின் உரையாடல்களைப் பற்றிக் கூறினார். ``பிரதமர் மோடியுடனான சந்திப்பு மிகவும் சிறந்ததாக இருந்தது. உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தை மேற்கு வங்கத்தில் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கான வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. துர்கா பூஜைகள் முடிந்த பிறகு ஒரு நாளில் சுரங்கத்தைத் திறந்துவைக்க பிரதமர் மோடி மேற்கு வங்கத்துக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளேன்.

 mamata Banerjee
mamata Banerjee
ANI

மேலும், மேற்கு வங்கத்தின் பெயரை `பங்களா’ (Bangla) என்று மாற்ற வேண்டும் என மாநிலச் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் கோரிக்கையை இன்னும் மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே, இது மேற்கு வங்க மக்கள் உணர்வுகள் சார்ந்த விஷயம். அதனால் எங்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கான பல ஆவணங்களையும் அவரிடம் அளித்துள்ளேன்.

`என்னை விமர்சிப்பவர்களைவிட எனக்கு அதிகம் தெரியும்!’ - துர்கா பூஜை வரிவிதிப்பால் கொதித்த மம்தா

அசாம், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி மோடியிடம் பேசவில்லை. அசாம் மாநிலத்துக்கு அது தேவையானதாக இருக்கலாம். ஆனால், மேற்கு வங்கத்துக்குப் பதிவேடு தயாரிக்கும் எந்தத் திட்டமும் இல்லை.

எங்கள் மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். தொடர்ந்து, பி.எஸ்.என்.எல்., ரயில்வே தொழிலாளர்கள், ராணுவ ஆயுத தளவாடத் தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் பிரச்னை போன்ற அனைத்தையும் பிரதமரிடம் கூறினேன்.

amitshah
amitshah

இது அரசுக்கும் அரசுக்குமான சந்திப்பு மட்டுமே. இதில் அரசியல் பேச இடமில்லை. நான் எப்போது டெல்லி வந்தாலும் மூத்த அமைச்சர்களைச் சந்திப்பேன். உள்துறை அமைச்சர் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கினால் அவரை சந்திப்பேன்” எனப் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது அந்த விழாவில் கலந்துகொள்ள மம்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மம்தா அந்த அழைப்பை நிராகரித்துவிட்டார். மேலும் மக்களவை தேர்தலின் போது தன் மாநிலத்துக்குள் நுழைய அமித் ஷாவுக்கு அனுமதி மறுத்தார் மம்தா. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.